Friday, 22 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (11)


206.  கதலிஹோமஸந்த்துஷ்டா

ஹோம ஆஹுதிகளில் விசேஷமாக அதிக ஸங்க்யையில் பலவகை வாழைப் பழங்களையும் வாழைப் பூக்களையும் அர்ப்பணித்தால் பேருவகை கொண்டு அருள் மழை பொழிபவள்.

207.  கதலீ தர்ஸனோத்யதா

வாழை மரத்தில் அதிக விருப்பம் கொண்டவள் ஆதலால் தன்னை வாழை மரத்தில் அல்லது வாழை தோட்டத்தில் ஆவாஹனம் செய்து பிரேமையுடன் வழிப்பட்டால் அந்த மரத்திலும் அந்தத் தோட் டத்திலும் பூர்ண ஸாந்நித்யம் கொண்டு பக்தர்களுக்கு அந்நிலையிலேயே ஆனந்த தரிசனம் அளித்து அநுக்ரஹிப்பவள்.

208.  கதலீகர்ப்பமத்யஸ்தா

வாழை மரத்தின் தண்டின் உட்புற மத்திய பாகத்தில் (அடிக்கிழங்கில்) மிக விருப்பமோடு உறைந்து  அருள்பவள்.

209.  கதலீவனசஸுந்தரீ

வாழைத் தோட்டத்தினூடே லீலா விநோதமாக நாற்புறமும் சுழன்று சுழன்று ஆடி விளையாடி மகிழும் பேரழகியான இளம் அணங்கின் உருவத்தினள்.

210.  கதம்பபுஷ்பநிலையா

கதம்ப புஷ்பத்தில் மிக்க விருப்பம் கொண்டு அதனில் உறைந்து மகிழ்பவள்.

211.  கதம்பவனமத்யகா

கதம்ப புஷ்ப மரங்கள் ஏராளமாக அடர்ந்து வளர்ந்திருக்கும் தோட்டத்தின் நடுவே கோலாஹலமாக ஆடி விளையாடி மகிழ்பவள்.

212.  கதம்ப குசஸுமாமோதா

பக்தன் தன் ஆராதனா க்ரமத்தில் அர்ச்சனை, மாலை, அலங்காரம், முதலான க்ரமங்களில் கதம்ப புஷ்பங்களை ஏராளமாக சேர்த்து நிகழ்த்தும்  வழிப் பாட்டைமிக உகப்பாக ஏற்று மகிழ்பவள்.

213.  கதம்பவனதோஷினி

கதம்ப புஷ்ப மரங்கள் வளமாக மலிந்து வளர்ந்துள்ள தோட்டத்தின் பூர்ண ஸாந்நித்யம் கொண்டு அந்த தோட்டத்திலே தன்னை ஆவாஹனம் செய்து வழிபடும் பக்தனை அருள்பவள்.

214.  கதம்பபுஷ்பஸம்பூஜ்யா

தன்னையும் தன் பரிவார தேவதைகளையும் கதம்ப புஷ்பங்களால் அர்ச்சனை, அலங்காரங்கள் செய்து வழிபடும் பக்தனை ஆட்கொண்டு அநுக்ரஹிக்கும் கருணா மூர்த்தி.

215.  கதம்பபுஷ்பஹோமதா

தன் வித்தையின் உபாசனா க்ரமங்களில் ஹோமங்கள் செய்யும்போது கதம்ப புஷ்பங்களை ஆஹுதி பண்ணி வழிபடும் பக்தன் கோரிய வரங்களை வரையாது வழங்கி அநுக்ரஹிக்கும் பெருவள்ளல்.

216.  கதம்பபுஷ்பமத்யஸ்தா

பக்தன் தன்னை வழிபடுங்கால் தன் ஆராதன க்ரமங்களில் ஆவாஹனம் செய்வதற்கு பயன் படுத்தும் பொருள்களில் சக்ரம், மேரு, படம், விக்ரஹம் முதலானவற்றிற்கு மாற்றாக கதம்ப புஷ்பச் செண்டு தயாரித்து அதனில் தன்னை ஆவாஹனம் செய்து பூஜித்தால் தனக்கு பெரிதும் மகிழ்ச்சி ஏற்பட்டு அவனை மனமார அநுக்ரஹிப்பவள்.

217.  கதம்பபலபோஜிநீ

கதம்ப வ்ருக்ஷத்தின் பழத்தை விரும்பி உண்டு கழிப்பவள்.

218.  கதம்பகானனாந்தஸ்தா

கதம்ப வ்ருக்ஷங்கள் வளமாக அடர்ந்து  வளர்ந்து ஒரு பெரும் காடாகப் பெருகி இருக்கையிலே அதன் மத்தியில் என்றோ ஓரம் என்றோ வரம்பு என்றோ இல்லாமல் அதன் ஒவ்வொரு மரத்தினுள்ளும் பூரண ஸாந்நித்யம் கொண்டு அக் காட்டினையே தனக்குகந்த உருவமாகக் கொண்டு அதனிலேயே தன்னை ஆவாஹனம் செய்து வழிபடும் பக்தனை ஆட்கொண்டு அருள்பவள்.

219.  கதம்பாசலவாஸினி

கதம்ப வ்ருக்ஷங்கள் சாரல் முழுவதும் ஏராளமாக வளர்ந்து பரவி பெரும் காடாகப் பெருகி கதம்ப மலை என்னும்படி நெருக்கமாக அடர்ந்துள்ள ஒரு மலையில் தன்னை ஆவாஹனம் செய்து வழிபடுவதில் பேருவகை பூண்டவள்.

220.  கக்ஷபா

தன் குழந்தைகளுக்கு பலவகையான நெருக்கடியான இக்கட்டுக்கள் நேரும்போது அவர்களுடைய கஷ்டங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு பலவகை ஜந்துக்களாக ஆவிர்பவித்து அவர்களை ரக்ஷிக்கும் வகையில் தேவைப்பட்ட ஸந்தர்ப்பத்தில் ஓர் ஆமையாகவும் தோன்றி காத்தருள்பவள். அதாவது ஆவாஹனம் செய்யப்பட்ட பொருளை தேவியாக அதாவது ப்ரத்யக்ஷமான காளி ஸ்வரூபமாகக் கொண்டு ஸாதகன் ஆராதிக்குங்கால் அந்தப் பொருளில் தேவியையும் பக்தனையும் தாங்கிக்கொடுக்கும் கூர்ம பீட சக்தி தேவதைகளாகவும், தானே கூர்மஸ்வரூபிணியாக ஸாந்நித்யமாக இருந்து இயங்கி அவன் ஆராதனத்தை அப்படியே ஏற்றுக்கொள்பவள்.

221.  கக்ஷபாராத்யா

தன்னுடைய பரிவார தேவதைகளை வரிசை க்ரமமாகவும் முறையாகவும் ஆராதிப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கூர்ம பீட நாயக பீட சக்தி தேவதைகளையும் முறைப்படி ஆராதிப்பது அத்யாவஸ்யமானது என்ற காரணத்தால் பூஜை நிகழுங்கால் தானே ஆதாரமாக கூர்மமாகவும் ஸாநித்யமாக இருந்து கொண்டு ஆராதனையை நிறைவாக்கிக் கொடுத்து அருளும் சௌலப்ய மூர்த்தி.

222.  கக்ஷபாஸனஸம்ஸ்திதா

சக்ரம், மேரு, படம், விக்ரஹம்,  முதலிய ஆவாஹ்யமான பொருள்களில் ஸாந்நித்யம் கொள்வது போல், கூர்ம பீடமாகிய ஆசனத்திலும் பூரண சாந்நித்யம் கொண்டு, பக்தனுடைய பிரேம பூர்ணமான ஆராதனத்தை மனமுவந்து ஏற்று அருள்பவள்.

 (அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment