Tuesday, 19 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (9)

167.  கவிப்ரஹ்மானந்தரூபா

பக்தனுடைய தீக்ஷண புத்தியானது மிக வீரியமாகவும் அதி தேஜஸ்சாகவும் கொழுந்து விட்டு ஜ்வலிக்கும் நிலையில் தன் க்ரியா சக்தியை பிரசரிக்கச் செய்து அவனுக்கு உடனேயே லய யோகம் சித்தித்து அதன் வாயிலாக ப்ரஹ்மானந்தப் பெருக்கு ஏற்பட்டு சமாதி நிலை நீடித்து அவன் எல்லையற்ற சுகம் அனுபவிக்க அநுக்ரஹிப்பவள்.

168.  கவித்வவ்ரத தோஷிதா

தன்னுடைய அருளால் சிறந்த கவிதா சக்தி ஸித்தித்து மஹாகவியாகி உலகில் ப்ரபாவமாக பிரகாசிக்கும் ஒரு புத்திசாலி தன் கவிதா சக்தியை நர ஸ்துதிக்கு விநியோகிக்காமல் பரப் ப்ஹ்மதத்தையே பாடும் நற்பணியில் பிரயோகித்து மகிழும் பக்தனின் அனன்ய சரணாகதியான  பக்தி ப்ரவாஹத்தை மெச்சி அவனை ஆட்கொண்டு அவனுக்கு ஜீவன் முக்தி அருளும் பெருவள்ளல்.

169.  கவிமானஸஸம்ஸ்தானா

அதி ஸூஷ்மமான புத்தியின் அபார தேஜோ விகாஸத்தால் மஹாப்ரபாவமாகவும் பெரும் கீர்திமானாகவும் மகிழ்ச்சியாக வாழும் தன் பக்தன் ஒருவனுடைய தியானத்துக்கு ஆஸ்பதமான  வ்யக்த மூர்த்தியாக் அவனுடைய ஹ்ருதயத்திலேயே நித்யவாசமாக ஸாந்நித்தியம் கொண்டு உறைந்து மகிழும் கருணைக்கடல்.

170.  கவிவாஞ்சாப்ரபூரிணீ

உன்னதமான கவித்வம் என்ற சிறப்பான சித்தி உலகில் தன் அநுக்ரஹ பிரசாதமாக மனிதனுக்கு ஸித்திப்பதாகையால் கவிகளின் மனத்தில்தோன்றும் விருப்பங்களை அவர்கள் விரும்பியவாறு பூர்த்தி செய்து அருள்பவள்.

171.  கவி:

ஆயரத்து எட்டு அண்டங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா காலங்களிலும் சேதனாசேதனமாக உள்ள எல்லா ஜீவராசிகளும் எல்லா பொருள்களும்  உள்ளும் புறமும் உள்ள எல்லா விஷயங் களையும் அறிந்த சர்வ ஞானி.

172.  கண்டஸ்திதா

உபசகனுடைய வ்யக்த சரீரத்தில் விசுக்தி ஸ்தானத்தில் அதாவது பதினாறு ஸ்வரங்களும் கூடி இயங்கும் ஸ்தலமாகிய கண்ட ஸ்தானத்தில் தன் க்ரியா சக்தியை பிரசரிக்கச் செய்து இனிய த்வனி எழுப்பி ஜீவராசிகளுக்கு நாத இன்பத்தை விநியோகிக்க அநுக்ரஹீக்கும் க்ருபைக் கடல்.

173.  கம் ஹ்ரீம்

மஹாகாளி பீஜமாகிய கம், ஹ்ருஸ்லேகா பீஜமாகிய ஹ்ரீம்,  இவ்விரண்டும் சேர்ந்து உண்டான கம் ஹ்ரீம் என்ற இந்த இரு பீஜக்கூட்டில் தன் க்ரியா சக்தியை விசேஷமாக ப்ரசரிக்கச் செய்து பிரேம த்யானத்துடன் ஜபித்து உபாசிக்கும் தன் பக்தனுக்கு பிரஹ்மானந்தத்தையும் ஜீவன் முக்தியும் அருள்பவள்.  

174.  கம் கம் கம்

நித்ய சுகத்தை ஸூசிப்பதும் அதே நேரத்தில் மஹாகாளி பீஜமாகிய கம் என்ற பீஜக்கூட்டான இச்சா க்ரியா ஜ்ஞான ஸக்திளின் கூட்டமைப்பாக பிரேம த்யானத்துடன் ஜபித்து உபாசிக்கும் தன் பக்தனுக்கு ஸாஸ்வதமான பிரஹ்மானந்த அனுபவமும் ஜீவன் முக்தி நிலையும் அளிக்கும் கருணாமூர்த்தி.

175.  கவிபூர்திதா

தன் பக்தன் தகுந்த குருவினிடம் பூரண க்ரம தீக்ஷை பெற்று தீவிர வித்யோபாஸனத்தின் பயனாக பரிபூர்தியான ஆத்ம ஜ்ஞானம் அடைந்து எல்லையற்ற ஆனந்தமும் மனஸ்சாந்த்யும் ஸித்தித்து நித்யசஸுகமான பதவிவியாகிய ஜீவன் முக்திபெற்றுய்ய அநுக்ரஹிக்கும் பெருவள்ளல்.

176.  கஜ்ஜலா

உலகில் உள்ள எல்லா ஜலாஸயங்களிலிருந்தும்  நீரைப் பெருவாரியாக எடுத்து தன் அக்னி சக்தியால் சுத்திகரித்து அம்ருதமயமான சுத்த ஜலத்தை ஏராளமாக வர்ஷித்து ஜீவ சமூஹங்களுக் கெல்லாம் பேருபகாரம் செய்யும் மேகஜாலங்களாக ஆவிர்பவித்து தன் பிரஜைகளாகிய ஜீவ வர்க்கங்களைப் பரிபாலித்து அருளும் பரம கருணாமூர்த்தி.

177.  கஜ்ஜலாதானமானஸா

தன் குழந்தைகளாகிய ஜீவராசிகளின் தாபங்களைப் போக்க அவ்வப்போது உடனுக்குடன் மேக ஜாலங்களின் உருவமெடுப்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கும் தாய்மை பொறுப்பு கொண்ட தயாநிதி.

178.  கஜ்ஜலப்ரியா

எத்தனையோ நிலைகளிலும் உருவங்களிலும் ஜீவர்களுக்குத் தான் உபகரிக்க முடியுமாயினும் மேகம் செய்யும் உபகார முறையே ஜீவர்களுக்குப் பேருதவியாக இருப்பதால் பர்ஜன்ய ரூபத்திலேயே ஆவிர்பவித்து உதவுவதில் பெரிதும் உவகை கொண்டவள்.

179.  கபாலி

தன் வித்யாக்க்ரமத்தில் முழுமையாக ஈடுபட்டு குண்டலினி யோகத்தால் பிரஹ்மரந்த்ரம் அடைந்து அங்கு தீவிரமாக முயன்று முன்நேறிவரும் யோகிநிகளின் பிரயாசைகளை ஆதரித்து மேலும் ஊக்குவித்து அவர்களின் பிரயத்தனங்களை சுலபமாக்கி சீக்கிரமே பூரண பலமளித்து அவர்களை ஜீவன் முக்தர்களாக்கும் பரம க்ருபாநிதியாகிய குருமூர்த்தி.

180.  கஜ்ஜலசமா

நேத்ராஞ்ஜனமாகிய மையைப் போன்று கரிய சாயல் படைத்து அதாவது ஸாமான்யமான புத்தி சக்தி உள்ள யாவராலும் எளிதில் உணரமுடியாதவள் ஆயினும் நீருண்ட கரிய சாயல் கொண்ட மேகத்தின் உருவத்தில் ஆவிர்பவித்து ஜீவர்களுக்கு அத்தியாவஸியமான அம்ருதப்ராயமான தெள்ளிய சுகத ஜலத்தை மழையாகப் பொழிந்து அருள்பவள்.

181.  கஜ்ஜலேஸப்ர்பூஜிதா

காளி சக்ரத்தில் பிரதிஷ்டை ஆகி உள்ள பரிவார தேவதைகளில் ஒருவரும் தேவர்களின் தலைவரும் பர்ஜன்ய ராஜரை வாஹனமாகக் கொண்டவரும் உத்தமமான யோகீஸ்வரர்களுள் ஒருவரும் ஆன தேவேந்திரனால் வித்யா க்ரம பத்ததி பிரகாரம் த்ருட பக்தியுடன் பூரண ஸ்ரத்தையுடனும் விஷேசமாக ஆராதிக்கப்படுபவள்.

182.  கஜ்ஜலார்ணவமத்யஸ்தா

மேகக் கூட்டங்களின் மத்தியில் உறைந்து அருளும் கருணைக்கடல்.

183.  கஜ்ஜலானந்தரூபிணீ

தான் மேக ஜால ஸ்வரூபத்தில் ஆவிர்பவித்து தன் குழந்தைகளாகிய ஜீவராசிகளுக்கு உபகரிப்பதில் பேருவகை கொண்டு ப்பூரிப்பவள்.

184.  கஜ்ஜலப்ரியஸந்துஷ்டா

உத்தம யோகீஸ்வரனான தேவேந்திரனுடைய  உபசார வரிவஸ்ய க்ரமங்களை பரம திருப்தியுடன் ஏற்று மகிழ்பவள்.

185.  கஜ்ஜலாப்ரியதோஷிணீ

யோகியர்களுள் பரம ஸ்ரேஷ்டனான தேவேந்திரனுடைய மிகச் சிறப்பான ஆராதனக் க்ரமங்களை ஏற்று அவனுக்கும் அவனைச் சார்ந்த எல்லா தேவர்களுக்கும் வேண்டிய வரங்கள் அளித்து மகிழ்பவள்.

186.  கபாலமாலாபரணா

யோகியர்களின் சிரஸ்ஸுகளைக் கோத்த மாலையையே தனக்கு உகந்த ஆபரணமாக கழுத்தில் அணிந்து மகிழ்பவள். அதாவது  யோகியர்களின் சமூஹத்தை மகிழ்விப்பவள் என்பது தாத்பர்யம்.

187.  கபால கரபூஷணா

யோகியர்களின் ஸஹஸ்ரார பீடமாகிய ஸிரஸுகளை கோத்த மாலையை தன் கழுத்தில் அணிந்தும், அவர்களின் கரங்களாலான மேகலையை தன் கடி பிரதேசத்தில் அணிந்தும் அதாவது ஜ்ஞானேந்த்ரியங்களின் சின்னமாக ஸிரஸுகளின் மாலையும் கர்மேந்த்ரியங்களின் சின்னமாக கரங்களின் மாலையையும் அணிந்து மகிழ்பவள்.


(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment