வித்யோபாஸனமும் ஆராதன க்ரமங்களும் விதிமுறைப்படி ஸாங்கோ பாங்கமாக நிர்வர்த்தனம் செய்து தனக்கு அர்பணித்து அனன்யமாகத் தன்னிடம் ஸரணம் அடைந்து தன் பக்தனுக்கு கால கதியால் விளையும் பிறப்பு, இறப்பு, மூப்பு, முதலான பரிணாமங்கள் எதுவும் நேரிடாவண்ணம் அவை எல்லாவற்றையும் அறவே ஒழித்து அவன் சீக்கிரமே முக்திபெற அநுக்ரஹிக்கும் ஔதார்ய மூர்த்தி.
இந்த்ரப்ரஸ்தத்திற்கு கிழக்கே பாஞ்சால நாட்டில் கங்கா நதி தீரத்தில் ஸர்மண்வதீ தீரம் வரையிலும் பரவியிருந்த காம்பில்ய நகரத்தில் கோயில்கொண்டருளி உலக மக்களை ஆட்கொண்டு அருள்பவள்.
தானே க்ரியா ஸக்தி ஸ்வரூபிணீ ஆவதால் தன் பக்தர்கள் யாவருக்கும் புத்தியில் ஸ்புரிக்கும் எந்த எண்ணத்தையும் எந்தக் கருத்தையும் மந்த்ர பிரயோகத்தால் செயல்படுத்தி பயன் காணும் மனப்பாங்கும் திறமையும் அருளும் ஜகன்மாதா.
மாத்ருகா மண்டலத்தில் அமர்ந்துள்ள ஐம்பத்தொரு மாத்ருகைகள் யாவற்றிலும் இயங்கிக் கொண்டிருக்கும் இனிய நாதமே தன் வடிவமாகக் கொண்டு அவற்றிலேயே எப்போதும் ஊடாடி மகிழும் நாதரூப ஸுந்தரி.
உபாசகனால் ஹ்ருதயத்தில் எப்பொழுதுமே த்யானிக்கப்படுவதால் தன் இயல்பான முழு ஸ்வரூபத்துடனேயே அங்கேயே நித்யவாசம் செய்பவளாகவும், அவன் ஆற்றும் ஆராதனக்ரமங்களில் தானே ஊடுருவி அவற்றிலேயே உறைபவளாகவும், அவன் தன் மந்த்ரத்தையே எப்போதும் ஜபிப்பதால் அவனுடைய புத்தியிலே இடையறாது லீலா விலாசமாக ஸாந்நித்யமாக விளங்குபவளாகவும், இங்கனமாக தன் ப்ரிய பக்தனுடைய எல்லாக் காரியங்களிலும் அவனைச் ஸூழ்ந்தே அன்பு பொங்கி வழிய இன்பமயமாக ஊடாடுபவளான இஷ்ட தேவதை.
மைபோல் கரிய உடல் சாயல் கொண்டவள். அதாவது எவ்வளவு அபாரமான புத்தி கூர்மை உள்ளவனாக இருந்தபோதிலும் யாவராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாதபடி ஒரு பெரும் புதிர் போன்ற ஸ்வரூபம் உள்ளவள்.