Sunday, 29 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (34)


719.   கார்ம்மணா

தானே க்ரியா  ஸக்தி ஸ்வரூபிணீ ஆவதால் தன் பக்தர்கள் யாவருக்கும் புத்தியில்  ஸ்புரிக்கும்  எந்த  எண்ணத்தையும் எந்தக்  கருத்தையும் மந்த்ர பிரயோகத்தால்  செயல்படுத்தி பயன் காணும்  மனப்பாங்கும்  திறமையும் அருளும் ஜகன்மாதா.

720.   கார்ம்மணாகாரா

கேவலம் புக்தி  ஸ்பூர்தியால்  மட்டும் செயல்படுத்த ஸாத்தியமான  எந்த ஒரு ஸூஷ்மமான  காரியத்தையும் மந்த்ர ப்ரயோகத்தால் நிர்வஹித்து  செய்து முடிக்கும் அபார ஸக்தியைத்  தன் வித்யோபாஸகர்களுக்கு  அளித்தருளும் அபார கருணாவாரிணீ

721.   காமா

தானே  மாத்ருகா மண்டல ஸ்வரூபிணீ ஆவதாலும் "ரஸஜ்ஞா" என்ற தன் பீஜமாகிய க்ரீம் காரத்தின் ஆத்ய மாத்ருகையாகிய 'க' காரமே ஸர்வ பீஜங்களுக்கும் ஆதாரமானதாலும் காம என்ற பரிபாஷா ஸப்தம் 'அ' காராதி  'ஷ' காராந்தமான சர்வ மாத்ருகைகளையும் குரிப்பதாலும், ஸர்வ  மாத்ருகா ஸரஸ்வதியும்  தானே  ஆவதாலும், அதனால் தானே ஸர்வ மந்த்ர ஸ்வரூபிணீ  ஆவதாலும்  அதேநேரத்தில்  தானே இச்சாதி ஸக்தி த்ரயத்தின் வ்யக்த தேவதை ஆவதாலும் தன் சக்தியின் ஓட்டத்தினாலேயே எல்லா அண்டங்களின் இயக்கத்தையும் தானே பூர்த்தியாக நடத்திக் கொடுத்து அருளும் ஆதி பராஸக்திமூர்த்தி.    

722.   காரம்மணகாரிணீ

இது என்ன இந்திரஜால மாய வித்தையோ என்று பார்பவர்கள் பிரமித்துப் போகும்படி, ஆச்சர்யப்படும் ரீதியில்  ஆதி  ஸூஷ்மமான  நுணுக்கச் செயல்பாடுகளையும் தன் பக்தர்களை செய்ய வைத்து மகிழும் உல்லாஸினீ.

723.   கார்ம்மணத்ரோடனகரீ

தன் பக்தர்களை ஹிம்ஸிக்கும் நோக்கத்துடன் அவர்களுடைய விரோதிகள் எதேனும் மந்த்ர ப்ரயோகங்கள் மூலமாகவோ, அல்லது வேறு ஏதேனும் இதர வகைகளிலோ ஏதாவது ஊரு விளைவிப்பார்களே யாகில்  அவர்களுடைய அத்தகைய செயல்பாடுகள் யாவற்றையும் தவிடு பொடியாக்கி நாசம் செய்துவிடும் பெரியநாயகி.

724.   காகினீ

தன் பக்தர்கள் வித்யோபாசன முறையில் தன் வ்யக்த ஸ்வரூபத்தை த்யானிக்குங்கால், தன் அங்க  ப்ரத்யங்கங்களை  த்ருடமாக தன் ஹ்ருதயத்தில் ப்ரேமையுடன் த்யானம் செய்துகொண்டே  தன்மயமாக  லயித்துப் போகையில் அவர்களுடைய வீறு கொண்ட மனோலய  ப்ராணாலியிநூடே   தன் ஸ்வரூபத்தைச் சிறிது சிறிதாக அவர்களுடைய ப்ரஹ்மரந்த்ர ஸ்தானத்திற்கு ஏற்றிக்கொண்டுபோய் அங்கேயே ஸ்திரமாக ப்ர்திஷ்டை செய்து அந்நிலையிலேயே அவர்களுக்கு ஸமாதி நிலைக்க அருளும் கருணைக் கடலான குருமூர்த்தி.

725.   காரணாஹ்வயா

இந்தப் பரந்த  ப்ரபஞ்சமும்,  தேவாஸூர மனுஷ்யாதி ஜீவ கணங்களும் தோன்றக்  காரணமானவள்.

726.   காவ்யாம்ருதா

காதால் கேட்ட மாத்திரத்திலேயே  வியப்புற்று, ப்ரமித்து, சொக்கிப்போகும் வண்ணம் அதிசயமான  அலங்காரச்  சுவை பொங்கும் பத வாக்கியப் பிரபந்தம் கேட்பவரைத் தெய்வீக உணர்ச்சிமய  மாக்கவல்ல காவியமே  தன் உருவமாகக் கொண்டு ரஸிகர்களின்  புத்தியில் ஆனந்த  லீலைகள் புரிவதில் மட்டில்லா மகிழ்ச்சி கொள்பவள்.

727.   காலிங்கா

உபாஸகனுடைய  ஸஹஸ்ராரத்தில் அமர்ந்துள்ள  மாத்ருகைகளே வடிவானவளாகவும், ஸஸஹஸ்ரதள  கமலத்தின் மத்தியிலுள்ள கர்ணிகையின் நடுவே உள்ள ப்ரஹ்மரந்திரத்தில் உள்ள  பிந்துஸ் ஸ்தானத்தில் நிரந்தரமாக அமர்ந்துள்ள தன் மஹா வித்யையின் மூலமந்த்ரமாகிய வித்யாராஜ்ஞியே வடிவானவளாகவும், அங்கனமாக ஜ்யோதிஸ் ஸ்வரூபிணியாகவும்  ஜ்வலிக்கும் பரஞ்ஜோதிமூர்த்தி.

728.   காலிங்கமர்த்தனோத்யதா

தன் பக்தன் யோகாப்யாஸ ஸாதானையின் மெய்மறந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கையில் அவனுடைய ஸஹஸ்ராரத்தின் மத்தியில் ப்ரஹமரந்திரத்தின் அருகில் முனைப்பாக ஆடிக்கொண்டிருக்கும் குண்டலினியின் மஸ்தகத்தை அழுத்தி அதன் வாயிலாக அவன் மனஸ்ஸின் உணர்சிகளின் ஓட்டத்தை நிறுத்தி அமைதியாக இருக்கச் செய்து அந்த வகையில் அவனுக்கு ப்ரஹ்ம ஞானமும் ஸாந்தியும் ஆனந்தமும் ஸித்திக்க அருளும் பெருவள்ளல்.

729.   காலாகுருவிபூஷாட்யா

கருஞ் சந்தன பூச்சில் பெரிதும் மகிழ்பவள்.

730.   காலாகுருவிபுதிதா

தனக்கு அற்பணிக்கும் ஆராதனா க்ரமங்களில் தன் அர்ச்சா மூர்த்திக்கு கஸ்தூரி, கோரோசனை, ஜவ்வாது, பச்சை கற்பூரம் பன்நீர் போன்ற பலவகை வாசனை திரவியங்களை கலந்து கருஞ் சந்தனக் காப்பு அமைத்து அர்பணித்து தன்னை ப்ரேமையுடன் வழிபடும் தன்  பக்தனுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளித்து அருளி மகிழும் ஔதார்யமூர்த்தி.

731.   காலாகுருஸுகந்தா

தனக்கு உகப்பான கருஞ் சந்தன குழம்பு எங்கனம் நாற்புறமும் பரிமளம் வீசுகிறதோ, அதுபோலவே  தன்னை வழிபடும் பக்தனுடைய நற்குண நற்செயல்கள் பற்றிய கீர்த்தி நாற்றிசைகளிலும் வீசிப்பரவி அவனுக்கு மகிழ்ச்சி அளிக்கச் செய்வதில் பெரும் களிப்புக் கொண்டவள்.

732.   காலாகுருப்ரதர்ப்பணா

தன் ஆராதன  க்ரமங்களில்  கருஞ்சந்தனம் கலந்த தீர்த்தத்தால் தனக்கு அர்க்யம் பாத்யம் அபிஷேகம் தர்ப்பணம் முதலிய உபசாரங்கள் கல்பித்து அற்பணிக்கும் தன் பக்தனுக்கு மட்டில்லா மகிழ்ச்சியும், ஜ்ஞானமும் சாந்தியும் அளித்தருளும் கருணாமூர்த்தி.  

733.   காவேரிநீரஸம்ப்ரீதா

புண்ய நதியாகிய காவேரியிலிருந்து எடுத்துக்கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தத்தில் பரம த்ருப்தி  அடையும் அஸூதோஷிமூர்த்தி.

734.   காவேரிதீரவாஸினி

காவேரி நதிக்கரையில் ஆங்காங்கே அமைந்துள்ள புண்ய ஸ்தலங்களில் கோயில் கொண்டு எழுந்தருளி க்ஷேத்ராடனமாக  அங்கு அங்கு வந்து தன்னை வழிபடும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அருள்பவள்.

735.   காலசக்ரப்ரமாகாரா

இந்த ப்ரபஞ்சம் தோன்றியது முதல் நாடி, விநாடி, நிமிஷம், ஹோரா, அஹஸ், ராத்திரி, தினம், ஸப்தாஹம், பக்ஷம், மாசம், ருது, அயனம், ஸம்வத்ஸரம், இப்படியாக பலவகையான கால கட்டங்கள் நானாப்ரகாரம் வரிசை படுத்தப்பட்ட க்ரமங்களை அநுஸரித்து ஓயாத ஆவர்த்த சுழற்சியாக க்ரமேண சுழன்றுகொண்டே உருண்டு உருண்டு இடையறாது  ஓடிக்கொண்டே போய்க் கொண்டிருக்கும்  காலப் போக்கு, ஒரு சக்கரம் அதிவேகமாக சுழலும்போது அதன் உருட்டுப்போக்கு  காண்பவர்களை மயக்குவது போல இதே ப்ரபஞ்சத்தில் நிரந்தரமாகவும் சற்றும் தடைப்படாமலும், தொடர்ச்சியாகவும், சிறிது கூட இடைவெளி இல்லாமலும் அடுத்து அடுத்து நடந்து கொண்டே இருக்கும் பஞ்சக்ருத்யச் செயல்பாட்டுத் தொடரால், தன்னை த்யானிக்கும் தன் பக்தனுடைய புத்தியை ப்ரமிக்க வைக்கும் பரபரப்பும், சற்றும் நினைத்துக்கூட பார்க்க முடியாத தன் செயல்களின் வேகத்தின் அதிசயமும், தன் ஸ்வரூப மாற்றங்களின் வியப்பான தோற்றங்களும் அதி ஆச்சர்யமான விநோதங்களும், அவன் நிலை தடுமாறி  மயக்கமடையும் வண்ணம் தோன்றி மாறியும், மறைந்தும், பலபல விந்தையான திருப்பங்களாலும், மின்னல் வேகமான விந்தைக் காட்சிகளாலும் அவன் அறிவு மழுங்கி திகைத்து போகுமளவு பெரும் விசித்ரங்களே  விரவி உருவான ஒரு ப்ரமையான அற்புத ஸ்வரூபிணீ.

 736.   காலசக்ரநிவாஸினீ

மாயாஜாலவித்தை  போன்ற இந்தப்பரந்த  ப்ரபஞ்சத்தின் இயக்க செயல்பாட்டுச் சுழற்சியில் ஊடுருவிப் பாய்ந்து தானே விரைந்து அதன் கதியில் கலந்து அதிலேயே தொடர்ந்து  உறைந்து மகிழ்பவள்.

737.   கானனா

பரப்ரஹ்மத்தின்  ப்ரக்ருதியானது, தன் குணங்கள் ஆற்றல் கொள்வதன் வாயிலாக விக்ருதியாகி, அதன் மூலம் ப்ரபஞ்சத்தின் இயக்கத்தைத் தோற்றுவித்து  அது அங்கனம் இயங்கிக் கொண்டிருக்குங்கால், உணர்ச்சிப் பெருக்கின் ஓட்டமே தன் உருவமாகக் கொண்டு, அந்த பரபரப்பான சலனத்தில் தானே ஊடாடி மகிழ்பவள்.

738.   கானனாதாரா

வேத புருஷனுக்கு எப்படி ஷடங்கங்களுள் வ்யாகரணமே ஸர்வ ப்ரதானமான அங்கமாகிய முகமாக இயங்குக்கிறதோ, அங்கனமே  பரப்ரஹ்மத்துக்கு சர்வ ப்ரதான அங்கமாகிய முகமே போன்று ஸர்வ ஸக்திகரமாக  இயங்கி அருள்கிறாள் ஆதிபராசக்தி மூர்த்தியாகிய ஸ்ரீ தக்ஷினகாளிகை.  

739.   காரு:

தன் பக்தனுக்கு நுண்கலைகளில் நுண்ணிய சீர்மையும் ஸூஷ்ம ஜ்ஞானமும் அழகிய வேலைப்பாட்டுத் திறமையும் அபார  ரஸன  ஸக்தியும் அளித்தருள்பவள்.

740.   காருணிகாமயீ

கருணையே உருவான குருமூர்த்தி.



(அடுத்த பதிவில் தொடரும்)    

No comments:

Post a Comment