Monday, 23 December 2013

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (31)



652.   காமராத்ரி :

பஹுல  சதுர்த்தஸி  திதிக்கு  அதிஷ்டான  தேவதை.  

653.   காமதாத்ர்ரீ   

தன்  ப்ரேம பக்தன் விரும்பியதை  விரும்பியவாரே  வரையாது வழங்கி  அருளும்  பெருவள்ளல்.

654.   காந்தாராசலவாசினீ

உபாஸகனின்  ஸஹஸ்ராரமே  அவன்  ஆராதிக்கும் சக்ர மேருவின் பீடமாகவும், அதுவே அவனது இஷ்ட தேவதையின் பரிவார தேவதைகள் நெருக்கமாக புடைஸூழ்ந்திருக்கும்  ஆலயமாகவும், அங்கு  தேவதா ப்ரேம  பக்தியைத் தவிர  வேரு எந்த உணர்சிகளுக்கும்  எண்ணங்களும் கிட்ட நெருங்க முடியாத ஒரு  கஹனமான வனம் போலவும் இருப்பதாலும்,  லௌகிக உணர்ச்சிகள்  எல்லாம்  வற்றி வறண்டு பொசுங்கிப்போய் கேவலம்  ஸாந்தியே ஓங்கி உலவுவதால் " மஹாஸ்மஸாநம்" என்று சிறப்பிக்கப் பட்டதும்  ஆன அந்த ஸ்தலத்தில்  அகலாது நிலைத்து நின்று ஆனந்த நடனம் புரிந்து  மகிழ்ந்து கொண்டு  பக்தனுடைய  ப்ரேம த்யானத்துக்கு  மட்டுமே  பூரண இலக்காக  இயங்கிக்கொண்டு அவ்விடத்திலேயே   நித்ய வாஸம்  செய்து அகங்களித்து  உவகை எய்தும் பரமானந்த மூர்த்தி.        

655.  காமரூபா 

ஆர்யாவர்தத்திற்கு  தென்கிழக்கில்  உள்ள  காலேஸ்வரம்,  ஸ்வேதகிரி,  த்ரைபுறம் , நீல பர்வதம்  என்ற  நான்கு பர்வதங்களுக்கு  மத்தியில்  உள்ள  கணேஸகிரியின்  மேற்பரப்பில்  விரிந்து பரவியுள்ள ப்ராக் ஜ்யோதிஷம்  என்ற நாட்டின் நடுவே,   காமரூபம் என்ற பெயர் கொண்ட ப்ரதேசத்தில்  கம்பீரமாக  உயர்ந்து அமைந்துள்ள தன்னுடைய யோனி பீட  ஸ்தானமாகிய  காமாக்யா  என்ற பர்வதமே தன்  வ்யக்த  ஸ்வரூபமாகக்  கொண்டு விளங்கும்  கிரிஸுந்தரி. 

656.   காலகதி :

முக்காலத்திலும் ஸ்ரீ மஹாகாலருக்கே  ஸரண்யமான  இழ்ட தேவதை.   ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும்  நாயகரான அவருக்கே  அவள்தான் ஸரண்ய தேவதை  ஆனதால்  கோடானுகோடி ஜீவர்களாகிய   நமக்கும் அவளே தான் கதி.

657.   காமயோகப்ராயணா

'க' கார மாத்ருகையை  ஆதியில் கொண்ட காதிவித்யை எனப்படும்  ரஸஜ்ஞா என்ற சிறப்புப் பெயர் கொண்டதும், தர்மார்த்த  காம  மோக்ஷங்களை அளிக்க வல்லதும் ஆன  க்ரீம  என்ற பீஜத்தை பிரதான அங்கமாகக் கொண்ட வித்யாராஜ்ஞீ  என்ற  மஹோந்நதமான  ஸாக்த மந்த்ரத்தை ப்ரேம த்யானத்துடன் ஜபித்து, உபாஸனக்ரமத்தில்  தன்னை பரம பக்தி  ஸ்ரத்தையுடன்  ஏகாக்ர சித்தமாக ஆராதித்து  மகிழ்வதே  தலை சிறந்த யோகமாகக் கொண்டு தன் உடல் பொருள் ஆவி  ஆகிய அனைத்தையும் தனக்கே  அர்ப்பணித்து  தன்னையே  பரகதியாகக் கொண்டு  தன்னை  அனன்யமாகச்  சரணம் அடையும் தன் பக்தனை ஆட்கொண்டு அவனுக்கு ஆத்ம  ஜ்ஞானமும்  ஆனந்தமும் முக்தியும்  அருளும்  பரதேவதை.

658.   காமஸம்மர்த்தனரதா

கேவலம் இந்த்ரிய  வேட்கை  மட்டுமே தன் பக்தனை உல்லாச  வ்யாபாரங்களில்  அழுத்தி  அழிக்கவொட்டாமல்  அந்த மனப் போக்கை  திருப்பி, திருத்தி, பக்தி  மார்க்கத்தில் ஈடுபடுத்தி  அருளும் ஔதார்யமூர்த்தி. 

659.   காமகேஹவிகாஸினீ

வித்யோபாஸகனின் ஸஹஸ்ரார  ப்ரதேசத்தில்  மானசிகமாக ப்ரதிஷ்டை ஆகியுள்ள  சக்ரத்தில் அந்த அந்த குறிப்பிட்ட உரிய ஸ்தானங்களில்  யதாக்ரமமாக  ஆவாஹனம் செய்யப்பட்டு அமர்ந்துள்ள மாத்ருகா  புஷ்பங்கள்  அவனுடைய வீர்யமான  த்யான தாரணையால்  பூரண மலர்ச்சி  அடைந்து  அவனுக்கு  ஆனந்தம் பெருக  அநுக்ரஹிக்கும் கருணா கடாக்ஷ  மூர்த்தி.

660.   காலபைரவபார்ய்யா

சிவ  தத்துவ ஜ்ஞான  ஸூன்யமான ப்ரஹ்மதேவரின்  ஐந்தாவது  சிரஸ் ஆகிய  ஊர்த்வ  ஸிரஸ்ஸைக் கொய்ய  ஸிவனிடமிருந்து  ஆவீர்ப்பாவமான  காலபைரவர்  ஸாக்ஷாத் ஸிவனே  ஆதலால்,  காலபை  ரவருடன் கூடவே ப்ராதுர்பாவமான  அவருடைய  ஸக்தியாகிய  காலபைரவி ஸாக்ஷாத் காலிகையே ஆவாள்.  இது விஷயமாக  காலபைரவரின் அவதார  ஸமையத்தில்  எப்பொழுதுமே  ஒலி வடிவமாகவே இயங்கிக் கொண்டிருக்கும்  ப்ரணவமானது  மூர்த்தி வடிவம்  தாங்கி ப்ரஹ்ம விஷ்ணுவாதி  தேவர்களுக்கு, "காலபைரவரின் ப்ராதுர்ப்பாவமானது  ஸக்தி - ஸிவ  தத்துவத்தின் ஜ்யோதிஷ்மத்தான  தோன்றலேயாம்"  என்று  ப்திக்ஞை செய்து  மறைந்தது. அங்கனம்  கொய்யப்பட்ட   ப்ரஹ்மதேவரின்  கபாலமானது அது முதற் கொண்டு காலபைரவரின் கையை விட்டு அகலவில்லையாம்.

661.   காலபைரவகாமினீ

காலி வித்யாக்ரமத்தின்   மூல  நிதியாகவும்  ஆதி குருநாதராகவும்  மந்திர  ருஷீஸ்வரராகவும்  மஹாகாலரின்  ஜ்ஞான  ஸக்தியின்  வ்யக்த ஸ்போடகமாகவும்  ஆவிர்பவித்து   உபாஸக மணடலத்திற்கு  பெரும்  தூணாக நின்று   அநுக்ரஹித்து  வரும்  ஸ்ரீ காலபைரவ மூர்த்தியின்  ப்ராதுர்பாவத்திற்கு  மூல  காரணமான  ஆதி  பராஸக்தி.  

662.   காலபைரவயோகஸ்தா

உபாஸகன்  தானும் குருவும் ஒன்றே  என்ற த்ருட  நம்பிக்கையுடன்,  அவர்  உபதேசித்த  மந்த்ரமும்  அந்த  மந்த்ரத்தின்  தேவதையும்  தானும்  இவ்வெல்லாமும்  ஒன்றே  என்ற  உணர்ச்சியுடன்,  தேவதா  குரு  ப்ரேம த்யானத்துடன்   இங்கனமான  தன்மயத்வ பாவ  மேலீட்டால் ,  குரு - ஸிஷ்ய  தாதாத்ம்ய மான  மலர்ச்சி  நிறைந்த  குரு பக்தி யோகத்தில்  திளைத்து, எல்லை இல்லா  ஆனந்தத்தில் மூழ்கியிருக்கும்  தன் பக்தனின்  யோக  நிலையில்  தானும்  இரண்டரக்கலந்து   அவனை மகிழ்வித்து தானும் ஆனந்திக்கும் பராபர  யோகானந்த மூர்த்தி.   

663.   காலபைரவபோகதா

குருவே தேவதை என்ற  பாவத்துடன்  ஸ்வ குருவிற்கு  ஸிஸ்ருஷைகள்  பல செய்து கொண்டு அவருடைய  ஆஜ்ஞைகளை   பரிபாலித்துக்கொண்டு  அவருக்கு செய்யும் கைங்கர்யங்களெல்லாம் தன் இஷ்ட  தேவதைக்கு செய்யும் ஆராதனக்ராமமாகவே கொண்டு ,  இந்த க்ரமத்தில்  பூர்ண த்ருப்தியும், மகிழ்ச்சியும் கொண்டு,  இங்கனமாக  குரு ப்ரேம பக்தியுடன்  வித்யோபாசனம் செய்து  அற்பணிக்கும் உபாஸகனை ஆட்கொண்டு  அவனுக்கு எல்லா  இஹபோஹங்களையும்  ஆத்ம  ஜ்ஞானமும்  ஆனந்தமும்  மோக்ஷமும் அளித்து அருளும் சின்மயாநந்தமூர்த்தி.

664.   காமதேநு :

ஸ்வர்க்க  லோகத்தில்  இந்த்ரன்  விரும்பும்  எல்லாப்  பொருள்களையும்  அவன்  விரும்பியவாரே அளித்துக்கொண்டே   அவனை மகிழ்வித்துக் கொண்டிருப்பதும்,  ஸுரபி  என்றும் காமதேநு  என்றும்  போற்றி  பூஜிக்கப்படுவதுமான  தெய்வீக  பசு எப்படி  விரும்பியதெல்லாம்  கொடுக்குமோ  அதுபோல தன் பக்தன் விரும்பும் எதையும் அவன் விரும்பியவாரே  அளித்து  மகிழ்வித்து அருளும் ஜகன்மாதா.   

665.   காமதோக்த்ரீ

உபாஸகன்  மாத்ருகைகளிலிருந்து  உண்டான  மந்த்ரத்தை  ஜபித்துக் கொண்டே  தன்னை  ப்ரேமையுடன்  த்யானம்  செய்யுங்கால்  தன்  புத்தியில்  அவன்  நிரூபணம்  செய்யும்  ஸ்வரூபத்தில்  அப்படியே  உருவம்  தாங்கி  அவனது தாரணையில்  அகலாது  நிலைத்து  நின்று  அவன்  ஜபிக்கும்  மந்த்ரத்திற்குரிய  பலன்களை  மட்டும்  அல்லாமல்  அவனை  ஒரு த்ருட  யோகியாக  ஆக்கி அவனுக்கு  ஞானமும்  ஆனந்தமும்  முக்தியும்  அளித்தருளும்  ஔதார்யமூர்த்தி. 

666.   காமமாதா

மனித உலக சமூஹத்தில்  மாத்ருகைகள்  தோன்றி  புஷ்பங்களாக  மலர்ந்து  பாஷையின்  லக்ஷண  லக்ஷியங்களாகவும்  ஸக்திமத்தான  மஹா மந்த்ரங்களாகவும்  உருவாக்கி, அவற்றில்  ஆழ்ந்து  லயிக்கும் மனிதனின்  புக்தி  விகாஸம் அடைந்து   வாழ்க்கை பயன்களையும்,  க்ரமேண  ஜ்ஞானமும்  ஆனந்தமும்  முக்தியும்  பெற்று உய்யக்  காரணமான  ஜகன்மாதா.  

667.   காந்திகா

கண்டவர்  ப்ரமிக்கும்படியான சௌந்தர்யம்  கொண்டவளும்,  ஸாஸ்வதமான  இளமை  கொண்டு இலங்குபவளும்,  ப்ரணவகலா  வடிவமாக  வளைந்து நெளிபவைகளும்  குண்டலினி  சக்தியின்  வ்யக்த  ஸ்வரூபமானவைகளும்,  அஸாதாரணமான  ப்ரகாசத்துடன்  ஜ்வலிக்கும்  ரத்னங்களை ஸிரஸ்சில் தரிப்பவைகளுமான  ஸர்ப்பங்களை ஆபரணங்களாகத்  தரிப்பவளும்  தன்  பக்தனை  மஹா  யோகீஸ்வரனாக  மன்மதனைக் காட்டிலும்  மேலான  யோகியாக்கி  மகிழ்பவளும் ஆன கருணாமூர்த்தி.   

668.   காமுகா

தன்னை  ப்ரேம  பக்தி  பூர்வமாக  உபாசிக்கும்  பக்தர்களின்  குழாங்க்களினிடையே  ஊடாடி மகிழ்வதிலேயே  எப்போதும்  தணியாத  வேட்கை கொண்ட ஆனந்த  மூர்த்தி.

669.   காமுகாராத்யா

ப்ரேம  பாவத்துடன்  மனப்பூர்வமாகவும்,  தன்மய உணர்ச்சியுடனும்,  மனஸ்ஸாந்தியுடன் தன்னை  உபாஸிக்கும்  தன்  பக்தர்களின்  கோஷ்டிகளுக்கு மட்டும் எளிதில்  வசப்படுபவள்.

670.   காமுகானந்தவர்த்தினீ

அபரிதமான ப்ரேம  பக்தி  பாவத்துடன்  தன்னை உபாசிக்கும் தன் ப்ரிய பக்தர்களுக்கு  ஜ்ஞானானந்தத்தை  வரையராது வழங்கி  அருளும் ஆனந்த மூர்த்தி.

671.   கார்த்தவீர்ய்யா

தானே  க்ரியா ஸக்தி ஸ்வரூபிணீ  ஆவதால் தன் குழந்தைகளாகிய  ஜீவர்கள்  செய்யும் காரியங்கள் எல்லாவற்றிற்கும்  செயலாற்றலாகிய  வீர்யம் கொடுத்தருளி  மகிழ்பவள்.

672.   கார்த்திகேயா

க்ருத்திகா  நக்ஷத்திரத்தின்   ஆறு  தாரைகளை  அங்கங்களாகக்கொண்ட வ்யங்க்ய ஸக்தியாகிய ஜ்ஞானத்தின் வ்யக்த ஸ்வரூபிணீ.

673. கார்த்திகேயப்ரபூஜிதா

ஸ்கந்தனால் விதிமுறைப்படி  ஆராதிக்கப்பட்ட லோகமாதா.


(அடுத்த  பதிவில் தொடரும் !)

No comments:

Post a Comment