Sunday, 1 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (18)



342.   கர்மரேகாமோஹகரி

பூர்வ கர்ம பலன்களின் வரிசைத்  தொடர்ச்சியின் உபாதையால் அவதிப்படும் தன் பக்தர்களின் மயக்கத்தை  அழித்து அவர்களுக்கு புத்தித்தெளிவும் நிதானமும் சாந்தியும் அளித்தருளும் ஜகன்மாதா.

343.   கர்மகீர்த்திபராயணா 

உபாஸன க்ரமங்களில் விதிக்கப்பட்ட அநுஷ்டான க்ரியைகளை சிரத்தாபக்தியுடன் சரிவர செய்வதும், குருவின் சிறப்புகளையும் தேவதையின் மஹிமைகளையும் போற்றி ஸங்கீர்த்தநங்கள் செய்தல், ஆகிய செயல்களை விஸ்தாரமாக ஆற்றுவதே  தன் வாழ்கையின் ப்ரதானமான குறிக்கோளாகக் கொண்டு ஒழுகும் உத்தம சீலர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஆனந்தமும், முக்தியும், அளித்தருளும்  பவதாரிணி.  

344.   கர்ம்மவித்யா

வேதாசாரப்படி நித்ய நைமித்திக கர்மங்களை விதிமுறைப்படி அனுஷ்டித் துக்கொண்டே இஷ்ட தேவதா வித்யையை  சீறிய முறையில் உபாசித்து  தனக்கு அர்ப்பணம் செய்யும் அனன்ய ஸரணாகதி பாவமும் சௌஸீல்யமும்  பூண்டு ஒழுகும் வித்யோபாஸகர்களின் சீறிய முயற்சிகள் சீக்கிரமாகவும் அநாயாஸமாகவும் வெற்றிகரமாக பூர்த்தி பெற அநுக்ரஹிக்கும் கருணாமூர்த்தி. 

345.   கர்ம்மஸாரா

அத்யாத்ம தத்துவத்தின் வ்யக்த ஸ்வரூபிணியான தன்னுடைய பரம ரஹஸ்யமான  சூஷ்மதத்தை  உள்ளபடி உணர்ந்த தன் பக்தர்களை பரம த்ருப்தியுடன் ஆதரித்து ஆட்கொண்டு அவர்களுக்கு ப்ரஹ்ம ஜ்ஞானமும் சாந்தியும் ஆனந்தமும் ஸத்யோமுக்தியும் அளித்து அருளும் தயாநிதி. 

346.   கர்ம்மாதாரா

ஸர்வ லோகங்களும் தரிக்க ஹேதுவான ஸகல கர்ம கலாபங்களுக்கும் ஆஸ்பதமான மூலாதார சக்தி, கந்த பூதமான தன்னுடைய ப்ரக்ருதியை ஸ்வாநுபூதி மூலமாக உணர்ந்து தெளிந்த சாதகர்களை  ஆட்கொண்டு அவர்களுக்கு ஆனந்தமும் முக்தியும் அளித்தருளும் காருண்ய  ஜலதி.

 347.   கர்ம்மபூ:

ஊழ்வினை பயன்களை அனுபவிக்கும் இந்த சரீரத்தின்  ஸகல கர்ம கலாபங்களுக்கும் தானே மூல காரணமாவதால் அவற்றை அநுஷ்டித்து நிறைவு பெற்று அவற்றின் பலன்களை தனக்கு ப்ரேமையுடன் அற்பணிக்கும் பக்தர்களை ஆட்கொண்டு, அவர்களுக்கு ஆனந்தமும் முக்தியும் அளித்தருளும் கருணைக்கடல்.   

348.   கர்ம்மகாரீ

தன் பக்தர்கள் ஊழலின் சூழலில் சிக்குண்டு அவதிப்படுவதை கண்ணுற்று மனமிரங்கி, சோர்வில்லாமலும், ஆராதன க்ரமங்களில் சற்றும் குறைவில்லாமலும் உபாஸித்து வரும் அவர்களின் அந்த வினைப்பயனை அப்படியே அறுத்துக் களைத்தெரிந்து அருளும் ஜகன்மாதா. 

349.   கர்ம்மஹாரீ

தன் பக்தர்கள் பூர்வ வினைப்பயனாக அபாரமான  உபாதைக்கு ஆளாகி மீள முடியாத துன்பம் அநுபாவிப்பதைக் கண்டு, மனம் இரங்கி, மேலும் மேலும் அவர்கள் கர்ம பந்தமாகிய  அந்தக் கடலில் விழாமல் அவர்களை தடுத்தாட்கொண்டு, அவர்களை விடுதலைப் பாதையில் ஈடுபடுத்தி அருளும் கருணாமூர்த்தி. 

350.   கர்ம்ம

ஜீவர்கள் தம் செய்தொழில் மூலமாகவே தன் ஊழின் விளைவுகளை கரைக்க வேண்டி இருப்பதால், அவர்களுடைய கர்மங்களிலேயே நேரடியாக தானாகவே ஊடுருவிச்சென்று உறைந்து அவற்றில் பூரண ஸாந்நிதயம் கொண்டு அதன் மூலம்  அவர்கள் தம் ஊழின் தளைகளிலிருந்து விடுதலை பெற்றுய்ந்து ஜீவன் முக்தர்களாகி நித்தியா ஸுகம் அனுபவிக்க அருளும் ஜகன்மாதா. 

351.   கௌதுகஸுந்தரீ

ஸாதகர்கள் அனுஷ்டிக்கும் ஆராதனக்ரமங்களில் அமையும் மங்கள நிகழ்சிகளில் களிப்புடன் கலந்து கொள்ளும் ஸஹ யோனிகளின் குதூகலமும் உத்ஸாஹமுமான   கொண்டாட்டங்களில் மகிழ்ச்சி கொண்டு அத்தகைய உத்ஸவ நிரல்களில் தானும் ஊடாடிப் பங்கு கொண்டு மகிழ்ந்து அநுக்ரஹிக்கும் ஆனந்த மூர்த்தி.  

352.   கர்ம்மகாளி

ஜீவர்கள் தாம் செய்யும் கர்மங்களின் விபாக காலத்தில் அவற்றின் நிவர்த்திக்க முடியாத விளைவுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்படுங்கால், மிக்க வலிமையும் மஹா மங்களமும் பொருந்திய அதி சுப கர்மங்களை அனுஷ்டிக்கச் செய்து அதன் மூலம் பூர்வ விளைவுகளின் கொடுமை தம் பக்தர்களைப் பாதிக்க வொண்ணாமல் காத்து அதே நேரத்தில் தன்னுடைய ஸகுண ப்ரஹ்ம வ்யக்த ஸ்வரூப நிரூபணம் மூலம் தன் வித்யோபாசகர்களுக்கு பத்ததிப்படி அனுஷ்டிக்கப்படும்  வித்யாராஜ்ஞியின் முறையான உபாஸன  அநுஸந்தானமும், அதன் நிஸ்சயமான பலமாகிய தேவதா சாக்ஷாத் காரமும் யந்திர ஸாதனமும் பூரணமாக ஸித்திக்க அநுக்ரஹித்து அவர்களுக்கு மந்திர ஸித்தியும் மனஸாநதியும் ஆனந்தமும் முக்தியும் அருளும் கருணாமூர்த்தி. 

353.   கர்ம்மதாரா

ஊழின் வலிய கொடுமைகளால் நேர்ந்த பலவகை இடுக்கண்களின் தாக்குகள் தன் பக்தர்களை துன்புறுத்துவதை கண்ணுற்று அவர்கள் பூர்வ ஜன்மங்களில் இழைத்துள்ள உக்கிரமான மஹா பாதகங்களின் தீப்பயன்களை தன் கருணா கடாக்ஷ வீக்ஷணத்தாலேயே அகற்றி அவர்களுடைய துயரைப் போக்கி சஹ யோனிகளின்பால் அவர்களுக்கு அன்புப்பற்று உண்டாக்கி அவர்களை விடுதலைப் பாதையில் ஈடுபடுத்தி அருளும் அன்பு நாயகி. மேலும் தஸ மஹா விதைகளில் இரண்டாவதாகிய தாரா தேவியாக ஆவிர்பவித்து ஸாதகர்களை ஆட்கொண்டு அருளிய பராசக்தி மூர்த்தி.

354.   கர்ம்மச்சின்னா

ஜீவர்களுக்கு அவர்களது பூர்வ கர்மங்களுக்கு உரிய பலன்களை அளித்து அருளும் "வைரோசினீ எனப்படும் சக்தி தானே ஆதலாலும் கேவலம் ஸாஸ்த்ர விமர்ஸத்தால் மட்டும் ஆத்ம ஸிக்தி உண்டாகாது ஆதலாலும் வித்யோபாஸனம் இன்றி அந்த ஜ்ஞானத்தை அடைய முடியாது ஆதலாலும் அவர்களை மந்திரத்தை ஜெபிக்கச் செய்து அந்த மந்திரத்தின் ஒலி ஓட்டத்தினால் நாத ப்ரஹ்மத்த்தின் வ்யக்த பீடமாகிய ஆகாசத்தில் பௌதீக ப்ரபஞ்சத்திநூடே பற்றியிருக்கும் பாசத்தளைகளின் பிணைப்பை உடைத்தெறிந்து அதே நேரத்தில் தஸ மஹாவித்தைகளில் ஆறாவது வித்யையாகிய சின்ன மஸ்தா தேவியாக ஆவிர்பவித்து ஸாதகர்களின் மனத்திலும் புத்தியிலும் சாந்தி நிலவச் செய்து அவர்களுக்கு அஆனந்தமும் முக்தியும் அளித்தருளும் ஆனந்த தாண்டவ மூர்த்தி.  

355.   கர்ம்மதா

ஜீவர்கள் தாம் செய்யும் கர்மங்களின் பலன்களை  அனுபவித்துத்தான் தீரவேண்டும் ஆதலாலும்  அப்படி கர்மபலத்தை அனுபவிக்கவும் மேலும் மேலும் கர்மங்கள் செய்து தேவிக்கு அர்ப்பணம் செய்யவும் ஓர் உடல் தேவைப்படுவதாலும் இங்கனம் கிடைத்திருக்கும் இந்த சரீரத்தால் செய்யக்கூடியதான கர்ம பரம்பரை தன் பக்தர்களை நிரந்தரமாக பற்றிக்கொள்ளா  வண்ணம் நிஷ் காம்ய கர்மங்கள் பல காலம் பலவாராகத் தொடர்ந்து செய்ய உதவி அவ்வகையில் அவர்கள் தியாகிகளாகவும், யோகிகளாகவும் வாழ்ந்து நித்ய ஸுகமாகிய மோக்ஷம் அடைய அநுக்ரஹீக்கும்  கருணைக்கடல்.   

356.   கர்ம்மசாண்டாலினீ

ஜாதிஸங்காரம் என்பது மனிதர்களின் ஜன்மத்துக்குத்தான்  பொருந்துமே தவிர அவர்களுடைய கர்மத்துக்கு பொருந்தாது.  உதாரணமாக கோ தானம் செய்து ஒரு பிராமணன் அடையும் பலனை ஒரு ஷத்ரியனும் அடையலாம். கர்மானுஷ்டானத்தில் ஒரு ஸாதகனின் மனத்தீவிரம் வர்ணாஸ்ரமங்களின்  பேதங்களுக்கு அப்பாற்பட்டது  ஆதாலால் ஸாதகர்களுடைய கர்மங்களுக்கு பலன் அளிக்கையில் அவர்களுக்கு இடையே உள்ள வேறு எந்த பேதங்களையும் பாராமல் அவர்களுடைய ஸாதனா அனுஷ்டான கிரியைகளின் கடுமையையும் தீவிரத்தையும் மட்டுமே பார்த்து அவர்களுடைய தகுதிக்கு பல மடங்கு அதிகமாகவே பலன் அளித்து அருளும் கருணாமூர்த்தி.   

357.   கர்ம்மவேத மாதா

நாதப்ரஹ்மத்தின் வ்யக்தமான ஓட்டமே பிரணவமாக உருக்கொண்டு சப்த ப்ரஹ்மத்தின் ஒலி வடிவாகி, கம்பீரமாக ஜீவர்களைக் கர்மங்களில் ஏவி இயக்குவதால், அவர்கள் அங்கனமாக கர்மங்களை செய்வதில் ஈடுபட்டு இயங்குங்கால் அக் கர்மங்களுக்கு ஆதாரமான பதங்களின் கூட்டுருக்களே வேதங்கள் என்ற பெயரால் மனிதரளுடைய அறிவின் வரம்பாகி, அவர்களுடைய ப்ரஜ்ஞையே அந்த இயக்கங்களுக்கு எல்லாம் மூல காரணமாவதால், தானே அந்த எல்லா வேதங்களுக்கும், அதில் விதிக்கப்பட்டுள்ள எல்லா கர்மங்களுக்கும் மாதா ஆவதால், அவற்றின் மூலம் அவர்களை நல்வழிப்படுத்தி ஆட்கொண்டு அவர்களுக்கு ஆத்ம ஜ்ஞானமும் ஆனந்தமும் முக்தியும் அளித்து அருளும் ஜகன்மாதா. 

358.   கர்ம்மபூ:

ஸகல ஜீவர்களும் தம் ப்ரக்ருதிகளினின்று உண்டாகும் குணங்களின் செயல்பாடுகளினாலேயே அவ்வப்போது அந்த அந்த கர்மங்களைச் செய்ய நேரிட்டாலும், அந்த ப்ரக்ருதிகளின் அமைப்புக்கும் தானே மூல காரணமாவதால் அவர்கள் செய்யும் கர்மங்கள் யாவற்றையும் நிஷ் காம்யமாகச் செய்ய வைத்து அப்படிச் செய்த பிறகும் அவை யாவற்றையும் தனக்கே அர்ப்பணம் செய்யும் மனப்பான்மையை வளர்த்து அவர்களை தியாகிகளாகவும் யோகிகளாகவும் ஆக்கி அருளும் க்ரூபாநிதி.

359.   கர்ம்மகாண்டரதானந்தா

மனிதர்கள் தம் ஜீவ தசையில் அனுஷ்டிக்க வேண்டிய கர்ம கலாபங்களை விளக்கும் வேத பாகத்தில் அடங்கிய விதி விபர்யாஸங்களை ஆழ்ந்து விசாரித்து தெள்ளத் தெளிய விமர்ஸித்து அவற்றை தம் வாழ்கையில் ஸ்ரத்தா  பக்தி விஸ்வாஸத்துடன் க்ரமாமாக அநுஷ்டித்து மனநிறைவு பெற்று திருப்தி அடையும் தம் பக்தர்களுக்கு, நிரந்தரமானதும் செழிப்பானதும் ஆன தீர்க்க கால வாழ்வும் ப்ரஹ்மஜ்ஞானமும் மனஸ் ஸான்தீயும் ஜீவன் முக்தியும் அளித்தருளும் ஞானாம்பிகை.

360.   கரம்மகாண்டாநுமானிதா

மனிதர்கள் அனுஷ்டிக்க வேண்டிய கர்ம கலாபங்களை கூறும் வேத பாகத்தில் கூறப்படும் கர்ம  காண்டத்தில் பரமாத்மாவின் சக்தி பரத்வமே லக்ஷியமாக ஸூசிக்கப்பட்டிருப்பதால் ஈஸ்வரனின் ஸர்வஸந்தத்வ  ப்ரதிபாதனத்தில், ஸ்ருதிப்ராமாண்யநிரூபணத்தில், அநுமான ப்ரமாண மூலமாகத்தான் பரமாத்மாவின் சக்தியைமனிதன் உணர முடியுமாதலால், அந்த பராசக்தியின் ஸகுண ப்ரஹ்ம ஸ்வரூப நிரூபணத்தில் தேவியின் சக்தி அநுமான ப்ரேமமயமாக உள்ள த்ருஷ்டாந்தங்களை நிதர்சனமாக சித்தாந்தப் படுத்திஇருப்பதன் மூலம், பராஸக்தியின் வ்யக்தியே இந்த ஸ்போட ப்ரபஞ்சம் என்ற தத்துவத்தின் ப்ரத்யக்ஷ  ஸ்வரூபிணீயாக ஸாதகர்களின் புத்தியில் ஆவிர்பவித்து, அந்த உண்மைகளை அவர்கள் அறியச் செய்து, அதன் மூலம் அவர்களுக்கு ப்ரஹ்ம ஞானமும் ஆனந்தமும் முக்தியும் அளித்தருளும் பராசக்தி மூர்த்தி.  

361.   கரம்மகாண்டபரீணாஹா

வேதங்கள் கர்ம காண்ட பாகத்தின் எல்லாப்பகுதிகளிலும், சுற்றிலும் முழுவதும் ஊடுருவிப் பரவியிருக்கும் ஸர்வ வ்யாபக ஸக்தி ஸ்வரூபிணீ, அதாவது ஜீவர்களின் எல்லாக் கர்மங்களிலும் தன் க்ரியா ஸக்தியை ப்ரஸரிக்கச்செய்து அவர்களுடைய எல்லா முயற்சிகளையும் ஸார்த்தகமாக்கி அவர்களை ஆட்கொண்டு அருளும் பராசக்தி மூர்த்தி.

362.   கமடீ

சக்ரமேருவைத் தாங்கும் ஆற்றலின் வ்யக்த மூர்த்தியாகிய கூர்ம பீடத்தின் சக்தி தானே ஆவதால் அந்த சக்தியின் ஆவிர்பாவ மூர்த்திகளாகிய ஜயாதிதேவதைகளை ஆராதிக்கும் போது ஸாதகன் தன்னையே அந்த மூர்த்திகளாக பாவித்து பூஜைகள் செய்வானேயாகில் அவனைப் பூரணமாக அநுக்ரஹித்து ஆட்கொண்டு அருள்பவள். 

363.   கமடாக்ருதி:

சக்ரத்தின் கூர்ம பீடத்தில்  ப்ரதிஷ்டை ஆகயிருக்கும் ஜயாதி பீட சக்திகளின் வ்யக்திகளில் தானாகவே ஊடுருவிச் சென்றமர்ந்து அந்த மூர்த்திகளின் உருவிலேயே  தன்னுடைய உருவம் தாங்கி, அவர்களது ஆராதன க்ரம்ங்களை தன்னுடையவையாகவே கருதி ஏற்றுமகிழும் தன்மைய மூர்த்தி. 

364.   கமடாராத்யஹ்ருதயா

சக்ர மேருவின் கூர்ம பீடத்தில் ப்ரதிஷ்டையாகி ஸ்திரமாக வீற்றிருக்கும் ஜயாதி ஒன்பது சக்தி தேவதைகளின் வ்யக்த ரூபங்களில் தானாகவே ஊடுருவிச்சென்று அமர்ந்து, அங்ஙனமாக தன்னுடைய ப்தான வ்யக்த மூர்த்தியின் ரூப பேதங்களை மறந்து, இந்த பீட சக்தின் ரூபமே தன்னுடைய ரூபமாகக் கொண்டு பீட சக்தி பூஜைகளே தனக்கு நேரடியாகச் செய்யும் பூஜைகளாகக் கொண்டு, அந்த நிலையில் தன் வித்யோபாசகர்களின் முயற்சிகளை அப்படியே ஏற்று அவர்களை மனமுவந்து அருளும் ஜகன்மாதா.

365.   கமடா

சக்ர மேருவின் கூர்ம பீடத்தில் ப்ரதிஷ்டையாகி ஸ்திரமாக வீற்றிருக்கும் ஜயாதி ஒன்பது பீட சக்தி தேவதைகளின் வ்யக்த ரூபங்களில் தன் வித்யுத்  சக்தியை ப்ரசரிக்கச்செய்து தன் வித்யோ -பாசகர்களின் வித்யாராஜ்ஞி பிரயோகத்தினால் வீறு பெற்று எழுந்து அந்த தேவதைகள் மூல மந்திர உச்சாரண வீர்யத்தில் கலந்து சாதகர்களை முழுமையாக ப்ரோத்ஸாஹம் செய்து மகிழ்விக்க, தானாகவே அந்த பீட சக்தி தேவதைகளின் வ்யக்த ரூபங்களில் ஊடுருவிக் கலந்து இயங்கி, அதன் மூலம் தன் பக்தர்களைக் கைதூக்கி அவர்களுடைய முயற்சிகளை பூரண அநுக்ரஹத்துடன் ஏற்று அவர்களை ஆட்கொண்டு அருள்பவள்.    

366.   கண்டஸுந்தரி

தன் பக்தர்களுடைய கண்டத்வனியின் இனிய எழலில் தானாகவே ஊடாடி, அவர்களுடைய மதுரமான பேச்சிலும் கானத்திலும் அதிஸயிக்கத்தக்க எழிலும் யாவரையும் மயங்க வைக்கும் வன்மையான வனப்பும் ஊட்டி அதே நேரத்தில் ஸூஷும்ணா நாடியிநூடே அமைந்துள்ள ஆறு சக்ரங்களில் அடங்கியதும்  அ  காராதி விஸர்காந்தமான பதினாறு ஸ்வரங்கள் ப்திஷ்டையாகி இருப்பதும் ஆன விஸுக்தி ஸ்தானமாகிய கண்டத்தின் மத்தியில் அமைந்துள்ள ஷோடச தள பத்மத்தில் தானாகவே ஊடுருவி அமர்ந்து, அவர்களுடைய ஸ்வரத்தில் அதி மதுரமாக இனிக்கும் அதிசயமான ஸுக  த்வனியின் ரீங்காரத்தை ஊட்டி அவர்களுக்கு எல்லோரையும் இன்புறுத்தும் சக்தியை அளித்து மகிழும் பெருவள்ளல்.



(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment