Tuesday, 17 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (29)



598.   காமா

கர்மபலம்  (ஊழ்) , வாசனை பிரதிபந்தம் என்ற எந்த ஒரு கட்டுப்பாட்டுக்கும் அப்பாற்பட்டவள். தன்இச்சையாக  வேறு எவருடைய ஏவலும் இல்லாமல்  இயங்குபவள்.  வேறு எந்த தேவதையும் மாத்ருகைகளின் ஒலி ஓட்டத்தின் ஸக்தியை அநுஸரித்தே இயங்க, பராசக்தி ஆகிய தக்ஷின காளிகை மட்டும்  மாத்ருகா மணடலத்தின்  அதிதேவதை  ஆதலால் மாத்ருகைகளைத்  தன் விருப்பப்படி இயக்குபவள்.

599.   காமதேவீ

மாத்ருகா மண்டலத்தின்  ஸ்போடனத்தின் மூலமாக தன் குழந்தைகளாகிய ப்ரஹ்மதேவர்  முதல் புழு பூச்சி புல் பூண்டு வரையிலான  எல்லா ஜீவர்களையும் அவரவர் நிலைக்குதகுந்தபடி, படிப் படியாக ப்ரபஞ்ஜத்திலுள்ள  ஜீவ லோகத்தை  உய்ய  வைக்க வல்லதான  ஸக்தி - ஸிவ தத்துவத்தை அவர்களுக்கு உபதேசித்து உணர்த்திக் காட்டி அவர்கள் அதனை உணர்ந்து ஈடேற வைக்கும் ஆதி பராசக்தியின்  வ்யக்தமூர்த்தி.  

600.   காமேஸி

பஞ்சாக்ஷர மந்த்ரத்தின் அதிதேவதை பரமசிவன் , அஷ்டாக்ஷரத்திற்கு நாராயணன், ஷோடசிக்கு சுந்தரி, ஷடாக்ஷரத்திற்கு ஸ்கந்தன், இங்கனம் அந்த அந்த மந்த்ரத்திற்கு உரிய தேவதைகள் பலர் இருப்பினும், எல்லா மந்த்ரங்களுக்கும் ஆதாரமாகிய மாத்ருகைக்கள் எல்லாவற்றிற்குமே அதிஷ்டான தேவதை ஆத்யா பராஸக்தியாகிய தானே ஆவதால், ஸர்வ மந்திர ஸ்வரூபிணீ யாகவும் ஸர்வ தேவதாமய ஜகதம்பாவாகவும் ஜகத்தை ரக்ஷித்து அருளும் விஸ்வேஸ்வரி. 

601.   காமஸம்பவா

உலகத்தில் கர்மம் நிகழ்வதற்கு கர்த்தாவின் ஸங்கல்பமே காரணமானாலும்  அந்த ஸங்கல்பத்திற்கு அவனது இச்சையே ஆதாரமாவதாலும், அந்த இச்சையை ஜீவர்களின் மனதில் தோற்றுவிப்பதன் மூலம் உலகத்தில் க்ரமங்கள் நிகழ்த்திக் கொண்டே ஸர்வ ஜகத்தின் நடப்பு கார்யங்களை நிர்வஹித்து மகிழும் க்ரியா ஸக்தி ரூபிணீ.

602.   காமபாவா

உணர்சிகளின் ஓட்டமே எல்லா க்ரியைகளுக்கும் அடித்தளமாக அமைவதால், அவர்களுடைய பூர்வ கர்மங்களுக்கு தகுந்தவாறு செயல்பாடுகள் அமைவதற்கானபடி உணர்சிகளின் ப்ரவாஹம் அவர்களுடைய மனத்தை உந்தச்செய்து, மேலும் மேலும் கர்மங்களில் தத்பாவமாக ஈடுபடச் செய்து ஜீவர்கள் ஸோபான க்ரமேண  ஜ்ஞானம்  அடைய அருள்பவள்.

603.   காமரதா

ஸகல மந்த்ரங்களிலும் தன் வித்யுத் சக்தி பரவி இருப்பதாலும் மாத்ருகா மண்டலத்தின் ஸகல ஸ்தலங்களிலும் தானே இரண்டற வ்யாபித்து இயக்கிக் கொண்டு இருக்கின்றமையாலும், தன்னை மந்திர விக்ரஹமயமான ரூபத்திலே ஸகுண ப்ரஹ்ம ஸாக்ஷாத்கார யோக ஸாதனையின் வாயிலாக தாரண பாவனை செய்து சுத்த ஒலிவடிவமாகவே உணர்ந்து ஆனந்திக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு அருளும் நாத ப்ரஹ்ம  ஸ்வரூபிணீ.  

604.  காமார்த்தா

தன் வசமான தன் பிராணநாயகராகிய மஹாகாலருடன் ஸதா இணைந்ததிருப்பதிலே தணியாத வேட்கை கொண்டவள்.

605.   காமாமஞ்சரி

பிண்ட மந்த்ரம் கர்த்தரீ மந்த்ரம் மாலாமந்த்ரம் என்ரபடியாக மாத்ருகைகளின் பலவகைக் கோவைகளால் அமைந்த நானாவிதமான மந்த்ரங்களின் வ்யக்திகளே தன் வடிவாகக் கொண்டு, அவ்அவற்றின் தேவதைகளாக உருமாறி  அந்த அந்த ரூபத்திலே தானாகவே ஆவிர்பவித்து அவ்அவற்றின் உபாஸகர்களை  ஆட்கொண்டு ரக்ஷிப்பவள்.  

606.   காமமன்ஜீரரணிதா

ஸ்த்ரீகள் கணுக்கால்களில் அணியும் சிலம்பினுள் அடங்கிய ரத்னங்களும், அந்த ஆபரண அமைப்பில் இணைக்கப்பட்டுள்ள கிங்கிணிகளும் ஸ்த்ரீகள் நடக்கும் பொழுது கல் கல் என்று ஒலிப்பது எப்படி கேட்பதற்கு மிக இனிமையாக  இருக்குமோ அதுபோல மந்த்ரங்களின் மாத்ருகைகளின் இனிய நாதத்தில் தானே ஊதுருவி அதன் மிக மதுரமான ஒலியின் மூலம் உபாஸகனை நாகஸுதா வர்ஷத்தில்மூழ்கச் செய்து அவனுக்கு இணையில்லா இன்பம் அளிக்கும் ஆனந்தமூர்த்தி.  

607.   காமதேவப்ரியாந்தரா

மன்மதனாலும் அவனுடைய பத்னியாகிய ரதி தேவியலும் அத்யந்த ப்ரேமையுடன் ஸிரப்பாக ஆராதிக்கப்படுபவள்.

608.   காமகாலீ

தன்னுடைய வித்யுத் ஸக்தி  பரிபூரணமாக ஊடுருவிப் பாய்ந்துள்ள மாத்ருகா மண்டலத்தின் ஒலி ஓட்டம் மிக்க ஆற்றலுடன் உபாஸகானுடைய புத்தியிலும் மனஸ்ஸிலும் ஸரீரம் முழுமையிலும்  விரைந்து பாய்ந்து பரவி ஸக்தி - ஸிவ  தத்துவத்தின் சாக்ஷாத்கார நிதர்ஸனமும்  ஆத்ம ஜ்ஞானமும் ஸ்திரமாக பிரதிஷ்டையாகி அவன் சீக்கிரமே ஜீவன் முக்தன் ஆகி ஆனந்த மூர்த்தியாகவும் ஸாந்த மூர்த்தியாகவும் நிரந்தரமாக ஸுகித்திருக்க அநுக்ரஹீக்கும் பெருவள்ளல். 

609.   காமகலா

மகாகாலரின் அத்யந்தப்ரேமைக்கு ஏக போக உரிமை படைத்தவள்.  
மாத்ருகா மண்டலத்தின் முதலாவதாகிய  அ காரமாக இயங்கும் காமனும் ( மஹாகாளரும்) கடைசி மாத்ருகையாகிய  ஹ காரமாக விளங்கும் கலையும் (தக்ஷினகாளியும் ) சேர்ந்து  அஹம் என்று உருவாகிய காமகலை.  

610.   காலிகா

தன் சேர்க்கையால் மஹாகாலரை இணையற்ற அழகராக ஆக்கும் அழகுத்தெய்வம். 

611.   கமலார்சிதா

இந்தப் பரந்த ப்ரபஞ்ஜம் முழுவதிலுமே உத்தமோத்தம ஸ்த்ரீகளாகிய யோகினீ கனங்களால் எப்பொழுதும் பரம ப்ரேமையுடன் ஆராதிக்கப் படுபவள்.

612.   காதிகா 

க காரம் ஆத்ய மாத்ருகையாக அமைந்த வித்யா ராஜ்ஞி மஹாமந்த்ரமே  தன் வ்யக்தியாகக் கொண்ட  ஆதி பராசக்தி.

613.   கமலா 

குல சாக்தர்களாகிய  யோகிநிகளின் யோக சாதன அவசரத்தில் தாரணையின் லக்ஷ்யமாக அவர்களுடைய புத்தியில் ஸாந்நித்யம் கொண்டு வீறுடன் ஆகர்ஷித்து நிர்விகல்ப ஸமாதி நிலையில் இருத்தி  அவர்களை பரமானந்த ஸாகரத்தில் மூழ்கச் செய்தருளும்  குலகுண்டலினியாகிய  பராசக்திமூர்த்தி.     
614.   காலீ

ப்ருதிவ்யாதி முப்பத்தாறு தத்துவந்களுள் கடைசியாக கணிக்கப்படும் ஸிவ தத்துவம் ஸக்தி பரமானது.   ஸக்தியின்  ஆறு கூறுகளாகிய  இச்சா, க்ரியா, ஜ்ஞானம்,  ஸ்போடம், வ்யஞ்ஜனம்,  வித்யுத் ஆகிய ஆறினுள் கடைசியான தான  வித்யுத் சக்தியே ஆதி பராசக்தியாகிய காளிகையின் விசேஷ லக்ஷணமாகும்.  இக்காரணம் பற்றி காலி என்ற பதத்துக்கு ஆறு என்ற எண்ணிக்கையே பரிபாஷைப் பொருளாக ஏற்பட்டுவிட்டது.  தவிர விராட் புருஷனுக்கு ஆறாவதாகிய அதோ முகம் சக்தி முகமாகும்.  மேலும் காளியின் பீஜமாகிய க்ரீம காரத்திற்கு "ரஸஜ்ஞா"  என்று பெயர். ரசம் என்பதற்கு ஆறு என்ற எண்ணிக்கை பரிபாஷை பொருளாகும்.      

615.   காலானலஸமப்ரபா 

ப்ரளய காலத்தில் இந்த ப்ரபஞ்சத்தை முழுமையாக எரித்து அழிக்கும்  காலாக்னியின் ஜ்வலன தேஜஸஸுக்கு  ஒப்பான ஜ்யோதிஸ்ஸுடன்  தன் பக்தர்களின் பாபங்களையும் ஜாட்யத்தையும் பொசுக்கி அவர்களுக்கு ஒப்பற்ற ஜ்ஞான தேஜஸை அளித்தருளும்  ஜ்யோதிஷ்மதீ.

616.   கல்பாந்ததஹனா

ப்ரளய கால அக்னியாக ஆவிர்பவித்து ஜீவலோகத்திற்கு புதிய கர்ம ப்ராணாலியைக்கல்பித்து புதிய சகாப்தம் உண்டாக்கி மகிழ்பவள்.

617.   காந்தா

தன் ப்ராண நாயகராகிய மஹாகாலரை வசப்படுத்தி அவரை தன் ஸ்வாதீனத்தில்வைத்துக் கொண்டு  இன்புறும் மோஹனவல்லி. 

618.   காந்தாரப்ரியவாஸினீ 

மஹாயோகியர்கலாகிய தன் உபாஸகர்களின்  ஸஹஸ்ராரப்ரதேஸத்திலேயே எப்பொழுதும் விநோதமாக லீலைகள் பல புரிந்துகொண்டு ஸாதகன் அந்நிலையில்  எல்லையற்ற ப்ரஹ்மாநந்த அநுபவத்தில்  திளைத்திருப்பதைக் கண்டு பெரு மகிழ்ச்சி  கொள்பவள்.   

619.   காலபூஜ்யா 

முப்பத்து முக்கோடி தேவர்களும் புடை சூழ்ந்து பல விதங்களிலும்  பல கைங்கர்யங்கள் செய்ய  ஸ்ரீ மஹாகாலரால் வெகுவிமரிசையாகவும் வெகு விஸ்தாரமாகவும்  ஆராதிக்கப்படுபவள்.

620.   காலரதா

பக்தனுக்கு மந்த்ரத்தை உபதேசித்து அவனை ஓர் உத்தம உபாஸகநாக்கும் சிறந்த குருவிநிடத்தில்  பெரு மகிழ்ச்சி கொள்பவள். 

621.   காலமாதா

ப்ருதிவீ முதல் ஸிவம் ஈராக  உள்ள முப்பத்தாறு தத்துவங்களையும்  ஆத்ம, வித்யா, ஸிவ  தத்துவங்களையும் ஜீவ ப்ரஹ்மைக்கிய தத்துவம்  இங்ஙனம் குரு ஸிஷ்யனுக்கு உபதேசிக்க வேண்டிய பற்பல தத்துவங்களை உலகினுக்கு அமைத்துத் தந்த பரம கருணாமூர்த்தியான  ஜகன்மாதா.

622.   காலினீ

குரு  தத்துவத்தின்  வ்யக்த மூர்தியாக அதாவது  ஸகுண  ப்ரஹ்மதத்தின்  ஸாக்ஷாத்கார ஸ்வரூபிணீயாக , ஸாதகனின்  ஸ்வ குருரூபத்தில், தானே ப்ரத்யக்ஷமாக  திகழ்வதால், அதீந்த்ரியமான  ஸக்தி ஸிவ தத்துவத்தின்   ஐந்த்ரிய ஸ்போடன மூர்த்தியாகிய குருஸ்வரூபிணீ.   

623.   காலவீரா   

தனக்கும் தன் பரிவார தேவதைகளுக்கும் தன் அன்புக் கணவராகிய ஸ்ரீ மஹாகாலரால் தன் பரிவாரகண தேவதைகள் புடை சூழ குலாசார முறைப்படி விஸ்தாரமாகவும் ஸ்ரத்தா ப்ரேம பக்தி பாவ  பூரணமாகவும் ஆராதன க்ரமங்கள் பெருவாரியாக நிகழ்தப்படுவதில் பெரு மகிழ்ச்சி கொள்பவள்.

624.   காலகோரா

தத்துவங்களுள் மஹோந்நதமான ஸக்தி - ஸிவ தத்துவத்தை உபாஸகர்களுக்கு  உபதேசித்து அநுக்ரஹிக்க தன் ப்ராண நாயகரான மஹாகாலரையே பரமோத்க்ருஷ்டரான ஆச்சார்யராக உலகினுக்கு ஈந்து அருளிய க்ரூபாநிதி.

625.   காலஸித்தா

குருவின் கருணையான உபதேசத்தால் மட்டுமே ஸித்தி அளிக்கவல்ல மந்த்ர ஸ்வரூபிணீ. 

626.   காலதா

பக்தர்களுடைய புத்தியில் அதிஸூஷ்மமான தத்துவங்களின் உள்அர்த்தம் பளிச்சென்று ஸ்புரிக்கும்படி  அவர்களுக்கு அஸாதாரணமானபேரொளி கொண்ட உள்ளுணர்வு அளித்தருளும் பெருவள்ளல்.



(அடுத்த பதிவில் தொடரும்)    

No comments:

Post a Comment