Thursday, 2 January 2014

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (38)



809.   குண்டகோலோத்பவாதாரா

வரம்பு கடந்து விரிந்து வானப் பரப்பினுள் அடங்கிய பல லோகங்களில் வாழும் ஜீவா சமூஹங்களே தன் பிரதி ரூபங்களாக அமைந்த ஆதாரங்களாகக் கொண்டு, ப்ரப்ஞ்ஜத்தின் ஆட்டமே தன் அசைவுகளாகக் கொண்டு லீலா விலாசமாக இயங்கி மகிழும் விஸ்வரூபிணீ.

810.   குண்டகோலமயீ

"ககோளம் "  எனப்படும் எல்லையற்ற வெளியாகிய ஆகாஸ மண்டலமும் அதனுள்  அடங்கிய க்ரஹ நக்ஷத்ராதி எண்ணற்ற ஜீவலோகக் கூட்டமைப்பே தன் வ்யக்த ஸ்வரூபமாகக்  கொண்டு, தன் பக்தனுக்கு தன் விஸ்வரூபக் காட்சியைக் காட்டி அதன்  தரிசனத்தால் அவன் ப்ரஹ்ம ஞானமும் ஆனந்தமும் அடைந்து மோக்ஷம் அடைய அநுக்ரஹிக்கும் விஸ்வமூர்த்தி.

811.   குஹூ:

சந்திரன் சற்றும் கண்ணுக்கு புலப்படாத அமாவாஸ்யை திதி " குஹூ" எனப்படும்.  அன்றைய இரவு வேளையே தன் உருவாகக் கொண்டு அந்த வேளையில் தன்னை விதிமுறைப்படி ஆவாஹனம் செய்து  ஆராதிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு அருளும் கால  பரிபாக மூர்த்தி.

812.   குண்டகோலப்ரியப்ராணா

நாம, ரூப, ப்ரபஞ்ஜ வடிவமாக அளவு கடந்து பெருகியுள்ள இந்த அஸேஷ ஆண்ட ஸாமக்ரிய அமைப்பும், இது அமர்ந்துள்ள ஆகாச மண்டலமும் சேர்ந்து உருவான  ககோளம் எனப்படும் கூட்டமைப்பே  தன் வ்யக்த ஸ்வரூபமாகக் கொண்டு, தன் அருளால் தன் பக்தன் அத்தகைய தன் விஸ்வரூபத்தைக் கண்டு தன்னை உணர்ந்து வியந்து ப்ரஹ்ம  ஜ்ஞானம்  ஸித்திக்கப் பெற்று,  ஜீவன் முக்தி நிலை அடைந்து  நிரதிஸய நித்யானந்தம் அநுபவிக்கும் அவன் மீது தன் அருளை மேலும் மேலும் வர்ஷித்து அவனை ஆனந்த  மூர்த்தியாகவே ஆக்கி மகிழும்  பக்தவத்ஸல மூர்த்தி.

813.   குண்டகோலப்ரபூஜிதா

ஆயிரத்து எட்டு அண்டங்கள் விரவி அமர்ந்துள்ள  இந்தப் ப்ரப்ஞ்ஜத்தினுள்ளே அடங்கி வாழும் அகிலமான ஜீவராசிகளாலும் தெரிந்தும் தெரியாமலும் விதிமுறைப்படி முறை இல்லாமலும் அன்புடன் ஆராதிக்கப்படும் ஜகன்மாதா.

814.   குண்டகோலமனோல்லாஸா

இந்தப் பரந்த ப்ரபஞ்ஜத்தையும் இதில் அமர்ந்து வாழும்  ஜீவ ஸமூஹங்களையும் ஈன்ரெடுத்த தாய் ஆவதால், இந்தக் கூட்டமைப்பின் இயக்கமும் அதன் நன்மையுமே தன் மனதுக்கு மிக்க ரமணீயமான செயல்பாடாக அமைந்திருப்பதால் இவ்வெல்லாவற்றின் க்ஷேமலாபங்களும் சௌக்கியமுமே தன் மனதுக்கு உகப்பாவது பற்றி,  அவற்றை ஆண்டு அநுக்ரஹிக்கும் ஜகதீஸ்வரி.

815.   குண்டகோலபலப்ரதா

மிக விரிவாக பரந்து பெருகியுள்ள இந்தப்  ப்ரபஞ்ஜத்தில்  அடங்கி அமர்ந்து வாழும் ஜீவராஸி ஸமூஹங்களுக்கு  தம் தம்  ஊழைத் துடைத்துக் கரைத்துக்கொள்ள  அவர்கள்  நிகழ்த்தும்  க்ரியா கலாபங்களுக்கு வீர்யம் அளித்து  அவர்கள் சீக்கிரமே வீடு பெற அநுக்ரஹிக்கும் ஔதார்யமூர்த்தி.

816.   குண்டதேவரதா

ஹோம குண்டத்தில்  ஆவாஹ்யமான எல்லா தேவதைகள் மீதும் தன்னையே அமைத்துக்கொண்டு  எல்லா ஹோமங்களும்  தனக்கு  செய்யும்  ஆஹுதியாக ஏற்று, யஜமானனாகிய தன் பக்தனை ஆட்கொண்டு அருளும் ஸர்வ  வ்யாபக மூர்த்தி.

817.   க்ருத்தா

தர்ம  விரோதமான  முறையில்  வாழ்பவர்கள், சிந்திபவர்கள், செயல்படுபவர்கள், பிற ஜீவர்களுக்குத் தீங்கு இழைப்பவர்கள் யாராயினும் அவர்கள்  மீது கோபம் கொள்பவள்.

818.   குலஸித்திகரா  பரா

குல ஸாதகர்கள் ப்ரேம  பக்தி  ஸ்ரத்தையுடன் நிகழ்த்தும் ஜப பாராயண ஹோம தர்பணாதி வித்யோபாஸன  ஆராதனா க்ரமங்கள்  சீக்கிரமே எளிதில் பூரண  ஸித்தி  பெற்று உய்ய அநுக்ரஹிக்கும் பரமானந்த மூர்த்தி.

819.   குலகுண்டஸமாகாரா

குல  ஸாதகர்கள்  ஹோம குண்டத்தில் வளர்க்கப்பட்ட அக்னியில் ஹோம த்ரவியங்களை  மந்த்ரவத்த்தாக  ஆஹுதி செய்யுங்கால், தேவி அக்னி ஜ்வாலை ரூபத்தில் மேலெழுந்து ஆஹுதிகளை மனமுவந்து ஏற்கையிலே அக்னியின் ஜ்வாலை மயமாகவே பக்தனுக்கு அவள்  காட்சியளிப்பது போல்,  ப்ரபஞ்ஜ மயமாக இருக்கும் தன்னை வர்ஷ ருதுவில் மேகங்களின் இடையே தோன்றும் " வித்யுல்லதா" எனப்படும் மின்னல் கொடியாகப் பார்க்கும்போது காண்பவர்  கண்களைப்  பொட்டையாக்கக் கூடியது போன்ற பேரொளி படைத்தவள்.

820.   குலகுண்டஸமானபூ:

குல ஸாதகர்களின் வித்யோபாஸன க்ரமங்களில் பஞ்சபூதங்களைத்  தேவியின் வ்யக்திகளாக ஆவாஹனம் செய்து ஆராதிப்பது ஸம்ப்ரதாயம். அவற்றினுள் அதி ஸூஷ்மமான  ஆகாஸமே  மற்ற எல்லாவற்றிற்கும் உத்பத்தி ஸ்தானமாதலின்,  ஆகாஸத்திலிருந்து  க்ரமேண  ஸ்தூலதர தமமாக மேலும் மேலும்  அதிகமாக கனத்வம் அடைந்து கனதமமாக  அமைந்துள்ள ப்ருதிவியே ஜீவர்களுக்கு  அதி ஸுலபாஸ்ரயமாதலால் ,  பார்திவ வ்யத்திகளுள் கனதம பரிமாணமுள்ள பிண்டாகாரமாகக்  கிடைக்கும்  பாஷாண  ஸிலையில் வடித்த  தன் ஸ்வரூப வ்யக்தியில்  விதிமுறைப்படி தன்னை ஆவாஹனம் செய்து ஆராதிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு அருளும் மஹா பூதமய மூர்த்தி.  

821.   குண்டஸித்தி:

வித்யோபாஸன க்ரமங்களில் ப்ரதானமானதாக, ஹோமகுண்டத்தில் மூலமந்த்ர  ஸம்புடிதமாக  மந்த்ரவத்தான விதிமுறைப்படி, ப்ரேம பக்தி ஸ்ரத்தையுடன் ஹோமங்கள் பல நிகழ்த்தி, அனன்யமாகத் தன்னை  ஸரணமடையும் தன் பக்தர்களுக்கு சீக்கிரமே எளிதில் மந்த்ர ஸித்தியும்  ஜ்ஞானமும்  ஆனந்தமும்  சாந்தியும் ஜீவன் முக்தி நிலையம் அருளும் அவ்யாஜ கருணாமூர்த்தி.

822.   குண்டருத்தி:

குல ஸாதகர்கள் பக்தி  ஸ்ரத்தையுடன் தன்னை உத்தேசித்து  பல ஹோமங்கள் நிகழ்த்த விழையுங்கால், அதற்க்கு தேவையான பொருள்களும் மனித  ஸஹாயமும்  குறைவில்லாமல்  தேவைக்கு  மேலாகவே அவர்களுக்கு கிடைக்க அருள் புரியும் காருண்ய  ஸிந்து.

823.   குமாரீ பூஜனோத்யதா

விவாஹம் ஆகாமலும், புஷ்பவதி ஆகாமலும் உள்ள கன்னிப் பெண்ணில் தன்னை  விதிமுறைப்படி  ஆவாஹனம்  செய்து  ஆராதிக்கும் தன் பக்தனை ஆட்கொண்டு அருள்பவள்.

824.   குமாரீ பூஜகப்ராணா

தன்னை ஒரு சிறு பெண்ணில்  ஆவாஹனம் செய்து  விதிமுறைப்படி ஆராதிக்கும் தன் த்ருட பக்தனிடம் தன் உயிரேபோல் அன்பு  கொண்டு அவனை ஆட்கொண்டு  அருள்பவள்.

825.   குமாரீ பூஜகாலயா

தன்னை ஒரு பாத்திரமான சிறு பெண்ணில் ஆவாஹனம் செய்து விதிமுறைப்படி குமாரீ பூஜை செய்து  தன்னிடம் சரணமடையும் தன் பக்தனுடைய  வ்யக்த ஸரீரத்தில் தானே  ஊடுருவி அமர்ந்து  அங்கேயே விருப்பமோடு  உறைந்து  மகிழ்பவள்.

826.   குமாரீ

ஸுமார் பன்னிரண்டு வயது நிரம்பியவளாக  ஸகிகளுடன் விளையாட்டுப் போக்காகவே,  க்ரீடாவினோத  ஸுகம் அனுபவித்துக் கொண்டு தன்னை கொண்டாடும் யாவரையும் ஜீவன் முக்தர்களாக்கி  மகிழும்  லீலாவதி  தேவீ.

827.   காமசந்துஷ்டா

மந்த்ர ஸாஸ்த்ரத்திற்கு  அடித்தளமாக  உள்ள மாத்ருகா மண்டலத்தில் அமர்ந்துள்ள  ஐம்பத்தொரு  மாத்ருகைகளையும்  பூரண  தீக்ஷிதராக  உள்ள ஒரு தகுந்த  ஆசார்யரிடமிருந்து உபதேச வாயிலாக  ஸ்வீகரித்துக்  கொண்டு கலாவதி தீக்ஷா  க்ரம விதி முறைப்படி அவருடைய கரகமலங்களால் தன்னுடைய ஸரீரத்தில் அடங்கிய பஹிரங்கங் களில் பஹிர்மாத்ருகா ந்யாஸமாகவும்,  ஸரீரத்தின் உட்புறத்தில்  அடங்கிய மூலாதாராதி தள சக்ர கமலங்களில் அந்தர்மாத்ருகா ந்யாஸமாகவும் ந்யாஸம்  செய்விக்கப்பெற்ற அங்ஙனமாக மாத்ருகா அதி  நாயக  ஸக்தி தேவதைகளை த்யான நிஷ்டை மூலம் உபாசிக்கும் யோகிநிகளை ஆட்கொண்டு அருளி  மகிழும் மந்த்ரமூர்த்தி.

828.   குமாரீபூஜனோத்ஸுகா

தன் பக்தன் தன்னை நேரிட ஆராதிக்கும் பூர்ண  பாவனையில் ஒரு பாத்திரமான சிறு பெண்ணில்  ஆவாஹனம் செய்து  விதிமுரைப்படி ஆராதிக்கும் தன் பக்தனை  நானா வகைகளிலும்  ஊக்குவித்து  அவனது வித்யோபாஸன முயற்சிகளுக்கு வீர்யம் அளித்து அவனை ஒரு தகுந்த ஸ்ரேஷ்டமான  யோகிநியாக ஆக்கி அருளும் பெருவள்ளல்.


(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment