"க" காராந்த காளி ஸஹஸ்ரநாம பல ஸ்ருதி
இந்த தக்ஷினகாளிகையின் ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை பக்தி ஸிரத்தையுடன் விதிமுறைப்படி பாராயணம் செய்தால் கிடைக்கும் நற்பயன்கள் ஸ்ரீ மஹாகாளரால் விபரிக்கப் படுகிறது :-ஸர்வஸாம்ராஜ்ய மேதா என்கிற சர்வ ஸாம்ராஜ்யங்களையும் தரவல்ல வித்தை, ஸுந்தரிக்கு சக்தி கொடுத்தது என்றும் ஸ்ரீ தக்ஷினகாளிகையின் சிறப்புப்பெயர்கள் கொண்ட இந்த சஹஸ்ரநாம ஸ்தோத்திரம் ஸுந்தரிக்கு அன்பாக உபதேசிக்கப்பட்டது. இது ஸுந்தரிக்கு வரம் அருளும் வாயிலாக மிக ரகஸ்யமாக சொல்லப்பட்டது. ஆயினும் உனக்காகவே இப்போது வெளிப்படையாக உபதேசிக்கப்பட்டது.
உலகமக்கள் அனைவருக்கும் கிடைத்திருக்கும் இந்த மஹா உன்னதமான ஸ்தோத்திரம் எப்போதும் யாவராலும் பக்தி ஸ்ரத்தையுடன் காப்பாற்றப்படவேண்டும். தினந்தோறும் காலை, நண்பகல், சாயங்காலம், நள்ளிரவு ஆகிய வேளைகளிலும் யக்ஞகாலத்திலும், ஜபத்தின் முடிவிலும் எந்த பக்தன் நிலைத்த புகதியுடன் இதனை ஸாதகம் செய்வானாகில் ஒரு வருஷத்தின் முடிவில் ஸாக்ஷாத் காளி ஸ்வரூபத்தினன் ஆகிவிடுவான். இது நிச்சயம்.
மேலும் இந்த ஸ்தோத்திரத்தை தானாக பாராயணம் செய்தாலும், வேறொரு பக்தரைக்கொண்டு பாராயணம் செய்வித்தாலும், அதனை நேரிலே கேட்டாலும், கேட்கவைத்தாலும், பாராயணம் செய்த அந்த பக்தருக்கு சன்மான சந்தர்பணங்கள் செய்து திருப்தி அடையச்செய்தால் அவன் காளிமயமாகவே ஆகிவிடுவான். ஆழ்ந்த முனைப்பான கவனத்திடனோ விளையாட்டாகவோ பாராயணம் செய்தால் அவன் ஒரு சிறந்த கவியாகி சகல துக்கங்களும் விலகப்பெற்று மூவுலகங்களையும் வெல்ல வல்லபனாவான்.
கர்ப்பமே தரிக்காத மலடியோ, பெற்ற குழந்தைகள் எல்லாம் இறந்து போய்க்கொண்டே இருக்கும் பெண்மணியோ, புஷ்பவதி ஆகாத பெண்மணியோ, மாதவிடாய் சீர்கெட்டுப்போன பெண்மணியோ, ஒவ்வொரு தடவையும் கர்ப்பம் தரித்து கருச் சிதைவு ஆகிக்கொண்டே இருப்பவளும் இத்தகைய எல்லாவிதமான கோளாறுகளை உடைய எந்த பெண்மணியும் இந்த உத்தமமான ஸ்தோத்ர பாராயணத்தைக் கேட்டால் அவள் எல்லோருக்கும் எல்லா விதமான ஸித்திகளையும் பிறருக்கு கொடுக்க வல்லவநாகவும் சிரஞ்ஜீவியாகவும் வாழக்கூடிய ஒரு சத் புத்திரனை பெறுவாள். இதில் சந்தேகமே வேண்டாம்.
இங்கனம் எந்த ஒரு விருப்பத்தையும் மனதில் கொண்டு காளியை மனமார த்யாநித்து இந்த ஸ்தோத்திரத்தை எந்த ஒரு பக்தனும் பாராயணம் செய்தாலும் அந்த விருப்பம் பூரணமாக ஸித்திக்கப்பெற்று சிறந்த மந்த்ர ஸித்தனாக மதிப்புடன் வாழ்வான். வேறு எந்த முறையான ஸாதனையும் இவ்வளவு பலன் தராது என்பது உறுதி.
மங்கள நாயகியே மழை நீரால் ஏராளமாக வளர்ந்துள்ள மரம் செடி கொடிகளிலிருந்தும், சோலைகளிலிருந்தும் கிடைக்கும் பல்வகை சென்நிற பூக்களாலும், அலறிப்பூக்களாலும், செம்பருத்தி பூக்களாலும், எருக்கம்பூ, வாழைப்பூ, தாமரைப்பூ, கருநெய்தல், கருங்குவளை பூக்களாலும், அருகம் புற்களாலும், கதம்ப புஷ்பங்களாலும் அர்ச்சனைகள் செய்து மாலைகள் அணிவித்தாலும், மற்றும் அஷ்டகந்தம், சந்தனம், கஸ்தூரி, அகரு, பச்சை கற்பூரம் இலாமிச்சை வேர், வெட்டிவேர் குங்குமப்பூ ஜவ்வாது மற்றும் செஞ்சந்தனம் கரும்சந்தனம் ஸிந்தூரம் முதலியன கலந்த ஷீரோதக அபிஷேக தர்பணங்களாலும், தேன் சக்கரை கற்கண்டு பால் திராக்ஷை முதலிய தித்திப்பு திரவியங்கள் சேர்ந்த பாயசங்களும் மற்றும் பல இனிய பக்ஷ்யபோஜன்களும் நிறைந்த நெய்வேத்யங்களும் சிறப்பாக ஸச்சிதாநந்தத்தின் சின்னமான ஸக்க்ஷகமும் அர்பணித்து ஸ்ரீ மஹாகாளரால் மிகவும் கொண்டாடப்பட்ட ஸ்ரீ தக்ஷினகாளிகயை பூஜித்து அறுபத்துநான்கு உபசாரங்களையும் அர்ப்பணித்து வித்யாராஞ்ஜி மஹாமந்திரத்தை உபநிஷத் சாரமான காயத்ரியையும் ஜபித்து சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்து அதையே பல முறை திருப்பவேண்டும்.
இங்ஙனமாக பக்தன் ஒரே எண்ணத்துடன் ஸிந்தூர திலகம் தரித்தவனாகவும் திவ்ய பரிமள திரவியங்கள் சேர்ந்த தாம்பூல ஸ்ரவணம் செய்து சக பக்தர்கள் புடைஷூழ தீவிரமான கவனத்துடன் மூலமந்திர ஜபத்திலேயே லயித்து மூழ்கியிருந்தால் காளியின் பிரத்யக்ஷ தரிசனம் கிடைக்கப்பெருவான். அவன் ஐஸ்வர்யத்தில் மஹாலக்ஷ்மிக்கு ஒப்பாகவும், ஸித்திகளில் காளிகைக்கு ஒப்பாகவும் கவிதா சக்தியில் தாராதேவிக்கு ஒப்பாகவும் சௌந்தர்யத்தில் சுந்தரிக்கு ஒப்பாகவும் எடுத்த காரியத்தை முடிப்பதில் ஒரு பெரிய நதியின் தாரா பிரவாகத்துக்கு ஒத்தவனாகவும் வேதஞானத்தில் பிரம்மாவையும் வஜ்ராயுதம் போல் பலவானாயும் எத்தகைய சத்ருவையும் அழிக்க வல்லவநாயும் நீண்ட ஆயுளுடனும் சங்கீத வித்வானாகவும் கொடை வள்ளலாகவும் ஆவான். இந்த பரந்த பிரம்மாண்டத்தில் அவனால் சாதிக்க முடியாதது எதுவுமேயிராது.
ஒரு சிறந்த குல ஸாதகனுடைய குடும்பத்தில் பிறந்த ஒரு இளம் பெண்ணை கண்டதும் அவளை தக்ஷினகாளிகையாகவே பாவித்து அவளது பூரண திருப்தியாக ஸந்தர்பணைகள் செய்து பூஜித்து அவள் முன்னிலையில் சஹஸ்ரநாம பாராயணம் மற்றும் மூலமந்திரத்தை பிரேமையுடன் ஜபித்து பூஜை செய்வானாகில் அவனுக்கு "மனோரதமயி " சித்திக்கும்.
மேலும் அவன் மானசீகமாக ஹ்ருதயத்தில் விஸ்தாரமாக தேவியை பூஜித்து மூலமந்திரத்தையும் ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தையும் தேவியின் உருவத்தைப் பார்த்துக்கொண்டே தொடர்ந்து செய்வானேயானால் அவன் செல்வத்திலும் யோகத்திலும் செல்வாக்கிலும் குபேரனை போல் ஆவான்.
மேலும் அவன் மழை நீரிலோ ஓடும் ஆற்றில் ஸ்நானம் செய்து நள்இரவில் மூலமந்திர ஹோமம் செய்து குறிப்பாக பஹுலாஷ்டமி பஹுல சதுர்த்தசி செவ்வாய் சனிக்கிழமை ஆவணி மாதத்தில் இரவில் எல்லா நியாஸங்களோடும் விசேஷமான பூஜைகள் செய்து ஏராளமான புஷ்பார்சனைகள் செய்து ஸுந்தரியான பெண்ணுக்கு சந்தற்பணங்கள் கொடுத்து மகிழச் செய்தால் இப் பூவுலகை வசமாக்கிக்கொள்வான்.
மேலும் அவன் காளி சக்ரத்தை பிரதிஷ்டை செய்து தன் சிஷ்யர்களோடு தேவியின் பாத கமலங்களில் விஸ்தாரமாக த்யானவாஹனாதி பூஜைகள் செய்து சக்திபிரணவமாகிய ஹ்ரீம் காரத்தை ஆழ்ந்து தியானம் செய்து 108 சுஹாசிநிகளை நிர்மந்திரித்து அவர்களை பரிவார தேவதைகளாகவும் காளியாகவும் ஆவாஹனம் செய்து அவர்களுக்கு சமஸ்த உபசாரங்கள் செய்து அவர்கள் முன்னிலையில் ஜப பாராயணங்கள் செய்து தேவிக்கு அர்ப்பணம் செய்வானேயானால் அவன் எல்லா வித்தைகளும் கைவரப்பெற்று இணையற்ற பண்டிதனாயும் உபாஸக சிரோன்மணியாகவும் நீடூழி வாழ்வான்.
மேலும் அவன் காட்டின் நடுவிலோ தனியான இடத்தில் ஒரு குழியிலோ யுத்தம் நடந்து கொண்டிருக்கும்போது, யுத்தகளத்திலோ சத்ரு எதிர்பட்ட சந்தர்ப்பத்திலோ அந்த இக்கட்டுகள் நீங்க சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை பல தடவை பாராயணம் செய்து தேவியை பிரார்திக்க அந்த மீளமுடியாத கஷ்டங்கள் உடனே விலகும்.
மேலும் அவன் ஏதேனும் ஒரு இளம் பெண்ணில் காளியை ஆவாஹனம் செய்து மூலமந்திர சஹஸ்ரநாம பாராயணங்கள் தொடர்ந்து செய்தால் வாஞ்சா ஸித்தி சித்திக்கும்.
மேலும் மழை நீர் நிரம்பிய பள்ளத்திலோ, பெரிய நகரத்திலோ, கிராமத்திலோ தர்பாசனத்திலோ கூர்ம பீட நாயக சக்தி தேவதைகளையும் மாத்ருகா தேவதைகளையும் மானசீகமாகவோ நேரிடையாகவோ பிரதிஷ்ட்டை செய்து சிவப்பு வஸ்திரம் அணிந்து தன் உடலிலும் வஸ்திரத்திலும் மஞ்சள் கும்குமம் தரித்து மூலமந்திர ஜபம் மற்றும் சஹஸ்ரநாம பாராயணம் செய்தால் "கேசரி சித்தி" அதாவது நினைத்த மாத்திரத்தில் நிர்விகல்ப சமாதி நிலையும் பிரஹ்மி பாவம் அடையும் சக்தி பெற்று தன்மைய ஸ்வரூபி ஆகிவிடுவான்.
மேலும் அவன் அருகம்புல்லை கையில் பிடித்து மேற்படி பூஜைகள் செய்தால் தேவி அவனுக்கு வசமாகிவிடுவாள் . அவன் பரமசிவனுக்கு ஒப்பான சாக்தனாகிவிடுவான்.
மேலும் அவன் குண்டலினி யோகாப்யாசத் தில் ஆழ்ந்தவனாக தேவியை தியானித்து ஒரு சக யோனியின்மேல் காளியை ஆவாஹனம் செய்து அதன் முன் அர்ச்சனை, மூலமந்திர சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்தால் "சக்தி பாத ஸதம்" என்கிற சித்தி பெறுவான். அதாவது எதிர்பட்ட சத்ருவின் மீது சக்தி என்கிற ஆயுதத்தை பிரயோகம் செய்த பலன் சித்திக்கும்.
மேலும் அவன் ஒரு திராக்ஷை மற்றும் மல்லிகை முதலிய விதானமாக படர்ந்து ஒரு பந்தலாக உருவாக்கிய ஒரு லதா க்ருஹத்தில் மனக்கலக்கம் இல்லாமல் மேற்கண்ட பூஜை ஸ்தோத்திரங்களை பலமுறை பாராயணம் செய்தால் ஒரு மாத காலத்திற்குள் ஸதாவதானியாக -100 தனி விஷயங்களை திடமான கவனத்துடன் செய்ய வல்லபனாவான்.
மேலும் அவன் நரக சதுர்த்தசி என்று பிரசித்தமான ஆஸ்வயுஜ பஹூல சதுர்த்தசி இரவிலும், அன்றாடம் நள்இரவுக்கு மேல் இரண்டு முஹூர்த்த காலத்திற்குள்ளாக, மாதசிவராத்ரி தினத்தின் நள்இரவிலும், பஹுலாஷ்டமியிலும், சூரியராசி சங்க்ரமண தினங்களிலும், அமாவாசை இரவுகளிலும், அமாவாசை கலந்த செவ்வாய் கிழமைகளிலும், வெள்ளிக்கிழமை சேர்ந்த குஹு விலும், குல திதிகள் என்று கூறப்படும் பஹுலபக்ஷ சதுர்த்தசி, அஷ்டமி, த்வாதசி, சதுர்த்தசி திதிகளிலும், மஹா சிவராத்திரி தினத்திலும், மற்றும் காசி, காஞ்சி, உஜ்ஜைனி, காளிகா, த்வாரகா விபாஸா நதி தீரத்திலுள்ள காளிகாஸ்ரமத்திலும், காமாக்யா, கோலாபுரம், கன்யாகுமரி, முதலிய சக்தி பீடங்களிலும் பக்தி ஸ்ரத்தையுடன் சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்தால் நினைத்த உருவம் எடுக்கும் "கின்னரி" சித்தி கிடைக்கப்பெருவான்.
மேலும் அவன் பழமையான காலத்தில் பிரதிக்ஷை செய்யப்பட்டதும், மேற்கு நோக்கி அமர்ந்திருப்பதும், எதிரில் நந்தி இல்லாததுமான சிவலிங்கத்தின் சன்னதியில் அமர்ந்து சஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தை பலமுறை பாராயணம் செய்தால் அவனுடைய எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
மேலும் இந்த சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணம் செய்வதால் "த்ரைலோக்யாகர்ஷிணீ ", "பத்மாவதி" "போகவதி" "ஸ்வப்ன வாராஹி" "கட்க ஸித்தி" "யக்ஷிணீ ஸித்தி" "குஹ்யக ஸித்தி" "திலக ஸித்தி" "குப்த தாத்ருஸ்யா ஸித்தி" "சராசரகதானக ஸித்தி" "ம்ருத சந்ஜீவினி" "குடிகா ஸித்தி" "உட்டீன ஸித்தி" ஆகிய அறுபத்துநான்கு சித்திகளும் கைவரப்பெருவான்.
தேவிக்கு செய்யும் பூஜைகளின் பலன்கள் இவ்வளவுதான் என்று என்னால் கூற முடியவில்லை. பூஜைகள் எல்லாம் செய்து முடித்து கடைசியில் தேவியின் பாத கமலங்களில் சரணடைந்து "தேவி, என்னுடைய பலஹீனமான மனதின் சஞ்சலப் போக்கினால் சில தவறுகள் செய்து விட்டேன். அவைகளை மன்னித்து அருள வேண்டும் என்று மன்னிப்புக் கோரி நமஸ்கரிக்க வேண்டும்
.தேவியின் சஹஸ்ரநாம ஸ்தோத்திர பாராயணத்தை முறைப்படி செய்தால் கிடைக்கும் பலன்கள் பின்வருமாறு உரைக்கப் படுகிறது :-
ஒரு மறை பாராயணம் செய்தால் அவன் எல்லா பாபங்களும் அழிந்து போகும்.
இரண்டு முறை பாராயணம் செய்தால் அவன் கோரிய விருப்பத்தை அடையப் பெற்று அதன் பலனை நிரந்தரமாக அனுபவிப்பான்.
மும்முறை பாராயணம் செய்தால் தேவ குருவாகிய ப்ரஹஸ்பதிக்கு ஸமானமான பதவி அடைவான்.
நான்கு முறை ஆவ்ருத்தி செய்தால் நான்கு வர்ணத்தவருக்கும் அதிபதி ஆவான்.
ஐந்து முறை பாராயணம் செய்தால் ஐந்து காமதேவமூர்த்திகளுக்கும் அதிபதி ஆவான்.
ஆறுமுறை திருப்பியவன் வாழ்க்கையின் அருமுனைப்புகளையும் வசப்படுத்தியவனாவான்.
ஏழு முறை திருப்பியவன் மனிதனின் ஏழு வகை ஆசைகளில் தான் நினைத்ததெல்லாம் கைகூடப்பெற்று மகிழ்வான்
எட்டு மறை திருப்பியவன் எட்டு திக்பாலர்களில் ஒருவன் ஆவான்.
ஒன்பது முறை திருப்பியவன் ஸஹஸ்ராரத்தின் மத்தியிலுள்ள த்வாதஸதள கமலத்தில் வீற்றிருக்கும் நவநாதர்கள் என்ற ஒன்பது குருமார்களுக்கு ஒப்பான குரு ஆவான்.
பத்து முறை திருப்பியவன் கோளத்தில் ஸதா ஸஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஒன்பது க்ரஹங்களுக்கு ஈடாக பத்தாவது க்ரஹ பதவி பெறுவான்.
இருபது முறை திருப்பியவன் சர்வ ஸித்திகளும் தன் வசமானவனாவான்.
இருபத்துஐந்து முறை திருப்பியவன் எல்லா வித கவலைகளும் நீங்கப்பெற்றவனாவான்.
ஐம்பது முறை திருப்பியவன் பஞ்ச பூதங்களின் நாயகனாவான்.
நூறுமுறை திருப்பியவன் பல முனைகளிலும் ஈடு இணையற்ற வலிமையும் கூர்மையும் கொண்டவஜ்ராயுதத்துக்கு ஒப்பான புத்தி சக்தி படைத்தவனாவன்.
ஐந்நூரு முறை திருப்பியவன் ஒரு பெரும் சக்கரவர்த்தி ஆவான்.
ஆயரம் முறை திருப்பியவனை மஹாலக்ஷ்மி தானாகவே சூழ்ந்து மகிழ்விப்பாள்
மூவாயிரம் முறை திருப்பியவன் பரமசிவனுக்கு ஒப்பானவனாவான்.
ஐயாயிரம் முறை திருப்பியவன் கோடிக் கணக்கான மன்மதர்கள் ஒருங்கே சேர்ந்தது போலப் பேரழகனாகி காண்பவரை மயக்குபவனாவான்.
பதினாயிரமுறை திருப்பியவன் பூகோளாந்தர்க்கதமான எல்லா நாடுகளுக்கும் அரசனாவான்.
இருபத்தையாயிர முறை திருப்பியவன் இருபத்திநான்கு ஸித்திகளையும் வசப் படுத்தியவனாவான்.
லக்ஷம் முறை திருப்பியவன் மஹாவிஷ்ணுவுக்கு ஒப்பானவனாவான்.
மூன்று லக்ஷம் முறை திருப்பியவன் மஹாதேவரான பரமசிவனையே தனக்கு அதீனமாக்கிவிடுவான்.
ஐந்து லக்ஷம் முறை திருப்பியவன் கலாவதி தீக்ஷையில் அடங்கிய ஐந்து கலைகளும் தன்னிடத்தில் நிரந்தரமாகப் பிரதிஷ்டை ஆனவனாவான்.
பத்து லக்ஷம் முறை திருப்பியவன் நான்கு வேதங்கள், அவற்றின் அங்கங்களாகிய ஆறு ஸாஸ்த்ரங்கள் ஆகிய இவற்றின் கூட்டாகிய பத்து வித்யைகளும் தன் கைவசம் பெற்றவனாவான்.
இருபத்தைந்து லக்ஷம் முறை திருப்பியவன் மேற்கூறிய பத்து வித்யைகளுக்கு அதிஷ்டாவாக ஆகிவிடுவான்
ஐம்பது லக்ஷம் முறை திருப்பியவன் ஸ்ரீ மஹாகா ளருக்கு ஒப்பானவனாவான்.
ஒரு கோடி ஸங்க்யை ஆவ்ருத்தி செய்தவன் ஸாக்ஷாத் தக்ஷினகாளிகையை தன் கண்ணால் தரிசனம் செய்து ஆனந்தமூர்த்தியாகி நீடுழி வாழ்வான்.
"என் அன்பு நாயகியே . மேலும் தக்க ஆச்சார்யனிடம் விதி முறைப்படி க்ரமதீக்ஷை பெற்று காளியை உபாஸிக்கிறவன் இச்சா க்ரியா ஜ்ஞானம் ஆகிய மூன்று சக்திகளும் தன் வசம் கைவரப் பெற்று மகிழ்வான். க்ரமதீக்ஷை பெற்றவன் அரசனாகி விடுவான். க்ரமதீக்ஷை பெற்றவன் தேவியின் அருளால் காளி வித்யா உபாஸனா பத்ததியில் பிரதி பாதிக்கப்பட்ட எல்லா ஸித்திகளையும் அடைவான். இந்தக் கலியுகத்தில் ஜன்மம் எடுத்து வாழும் மனிதர்களிடையே க்ரமதீக்ஷை பெற்று விதிமுறைப்படி காளி வித்யையை உபாசிக்கும் ஸாதகர்கள் அடையும் பாக்யங்கள் யாவரும் கண்டு ஆச்சர்யப்படும்படி பெருகி வளரும். இங்கனமா காளி சஹஸ்ரநாம ஸ்தோத்திர படலம் சுருக்கமாக உபதேசித்து விட்டேன் "
என்று ஸ்ரீ மஹாகாளர் உறைக்கிறார்.
சுபம்
No comments:
Post a Comment