Saturday 22 February 2014

ஸ்ரீ கர்பூர ஸ்தோத்ரம்

ஸ்ரீ கர்பூர ஸ்தோத்ரம்



இது ஒரு மிகச் சிறந்த கௌல ஸ்தோத்திரம்.  தக்ஷினகாளி உபாஸனத்திற்கு இது ஒரு இன்றி யமையாத வழி காட்டியாகும்.   மந்த்ரம்,  யந்த்ரம், த்யானம், ஸாதனை,  ஸரணாகதி, ஸ்துதி, ஷமாபணம்,  பலஸ்ருதி  ஆகிய எல்லா விஷயங்களும் இதில் அடங்கி உள்ளன.  இதனை நமக்கு அளித்து அருளியவர் ஸ்ரீ மஹாகாலரே.  இது இருபத்திரண்டு ஸ்லோகங்களில்  விபரிக்கப் பட்டுள்ளது.   ஸ்ரீ தக்ஷினகாளிகையின் உபாஸனக்ரமம்  இருபத்திரண்டு அக்ஷரங்கள்  கொண்ட மூல மந்த்ரமாகிய வித்யராஜ்ஞியை அடிப்படையாகக் கொண்டது என்பதை சுட்டிக்காட்டுகிறது.    


முதல்  ஐந்து  ஸ்லோகங்களில்  வித்யாராஜ்ஞியின், தலங்களில் அடங்கிய பீஜங்களின் உத்தாரம்  வரிசைக்  க்ரமமாக விபரிக்கப்படுகிறது.   முதல் ஸ்லோகத்தில் க்ரீம் க்ரீம் க்ரீம் என்ற தளம் உருவாகும் வகை விபரிக்கப்படுகிறது.   இரண்டாம் ஸ்லோகத்தில்  ஹூம் ஹூம் என்ற தளம் உருவாகும் வகையும்  மூன்றாம் ஸ்லோகத்தில்  ஹ்ரீம் ஹ்ரீம் என்ற தளம் உருவாகுவதையும்  விளக்கப்படுகிறது.  நான்காம் ஸ்லோகத்தில் தக்ஷினகாளிகே என்ற தளமும், ஐந்தாம் ஸ்லோகத்தில் க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா என்ற ஒன்பது அக்ஷரகூட்டு மொத்தமாக விளக்கப்படுகிறது. ஆக இவ்  ஐந்து ஸ்லோகங்களில் வித்யாராஜ்ஞி 22 அக்ஷரங்களும் அவற்றின் வரிசை க்ரமத்தில் விளக்கப்படுவது மட்டும் அல்லாமல் அவைகளை ஜபிப்பதால்  சித்திக்கும்  நற்பயன்களும்  விளக்கப்படுகின்றன. 

ஆறாம் ஸ்லோகத்தில் மேற்கூறிய  பீஜங்களில் ஒன்றை மட்டும் தனித்தோ, இரண்டோ  மூன்ரோ, எல்லாவற்றையும் சேர்த்தோ, சிலவற்றை அல்லது பலவற்றை மட்டுமோ, தக்ஷினகாளிகே என்ற தேவியின் நாமத்தை சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ ஜபிப்பதால் கிடைக்கும் நற்பயன்களும் கூறப்படுகின்றன.

பதினெட்டாம் ஸ்லோகத்தில் தேவியின் யந்த்ரம் குறிக்கப்படுகிறது.  கடைசி இரண்டு ஸ்லோகங்களில் பலஸ்ருதி கூறப்படுகிறது.   இதர ஸ்லோகங்களில் தேவியின்  த்யானமும் ஸ்துதியும், உபாஸன ஸாதன  க்ரமங்களும்  கூறப்படுகின்றன.   

மொத்தத்தில் இந்த ஸ்தோத்ரம் காலீ உபாஸனத் திற்கே ஒரு கருவூலமாகும் , ஆதலால் காலி வழிப்பாட்டில் ஈடுபட்ட யாவரும் இதனை  பக்தி ஸ்ரத்தையுடன் அநுஸரிப்பது இன்றியமையாததாகும். 

ஸ்தோத்ரப்ராரம்ப



கர்பூரம்  மத்ய  மாந்த்ய  ஸ்வரபராஹிதம் ஸேந்துவாமாக்ஷியுக்தம்
பீஜந்தே  மாதரேதத் த்ரிபுரஹரவது த்ரிஷ்க்ருதம்  யே  ஜபந்தி 
தேஷாம்  கத்யானி  பத்யானிச  முககுஹராது  துல்லயந்த்யேவ வாச :
ஸ்வச்சந்தம்  த்வாந்ததாராதருசிருசிரே   ஸர்வஸித்திம் கதானாம்   ll 1 ll

ஜகதம்பிகே  த்ரிபுரஸம்ஹார  மூர்த்தியாகிய  ஸ்ரீ மஹாகாலரின்  ப்ரிய  நாயகியே .   நீருண்ட மேகம் போல்  கரிய சாயலுடன்   ஜ்வலிக்கும் பேரழகியே.  கர்பூரம் என்ற பதத்தில்  மத்தியிலும் முடிவிலும் உள்ள  உயிரெரெழுத்துக்களையும்  (அதாவது  அ  ஊ  அ என்ற உயிர்களையும் )  ப, ர, ம் என்ற மெய்களையும் நீக்கி  ஈம்  என்ற மாத்ருகை களை சேர்த்தால்  உண்டாகும்  " க்ரீம்"  என்ற பீஜத்தை மும்முறை மடக்கி  இந்த முக்கூட்டை   ஜபிப்பவர்கள்  எல்லா ஸித்திகளையும்  அடையப்பெறுவர், அவர்கள் வாக்கினின்று உரைநடையாகவும் செய்யுள்ளாகவும்  ஸப்தப்ரபந்த  ஜாலங்கள் மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து  ப்ரவஹிக்கும்.      

ஈஸானஸ்ஸேந்து வாமஸ்  துவாமஸ்ரவணபரிகதோ  பீஜமன்யன் மஹேஸி
த்வந்த்வந்தே  மந்தசேதா  யதி ஜபதி  ஜனோ  வாரமேகம்  கதாசித்
ஜித்வா  வாசாமதீஸம்  தனதமபி   சிரம்  மோஹயத்யம்பூஜாக்ஷி
ப்ருந்தம்   சந்த்ரார்த்தசூடே  ப்ரபவதி ஸ  மஹாகோரஸாவாவதம்ஸே    ll 2 ll

ப்ரபஞ்சா ப்ரபஞ்ச  விஸ்வேஸ்வரியே  சந்த்ரனின்  ஒரு கலையை சிரோபூஷணமாகத்  தரிப்பவளே.  துஷ்கர்மிகளுக்கு  மிகப்பயங்கரமானவளே.  இரு செவிகளிலும்  காதணிகளாகத் தொங்கும் இரு சவங்களுடன்  மிளிர்பவளே.  மந்தபுத்தி  உள்ளவனாயினும்  யாரேனும்  ஒருவன்  " ஹ்  ஊ  ம் "  என்ற மாத்ருகைகளின் சேர்க்கையால் உண்டாகும் ஹூம் என்ற  பீஜத்தை  இருமுறை மடக்கி  அந்தக் கூட்டை  எப்போதாகிலும் ஒரு தடவையாகிலும்  ஜபித்தாலும் கூட,  அவன்  வாக்கின் வன்மையிலும்  திறமையிலும்  ப்ரஹஸ்பதியை வெல்வான்.   செல்வத்தில்  குபேரனையும்  மீறுவான்,  எண்ணற்ற அழகிய  ஸ்த்ரீகளின் குழாங்களை மயக்கிக்கொண்டு  நீண்ட  காலம்  மஹாப்பிரபுவாக  வாழ்வான். 

குறிப்பு:-   ஸ்த்ரீகளை மயக்கிக் கொண்டு என்றால், ஒரு யோகி குண்டலினி ஸக்தியுடன்  இன்பமாகச் சேர்ந்து இயங்குவதைக் குறிக்கிறது. 

ஈஸோ  வைஸ்வாநரஸ்தஸ்ஸஸதரவிலஸ த்வாமநேத்ரேண  யுக்தோ
பீஜந்தே   த்வந்த்வ மன்யத்விகலித  சிகுரே   காலிகே  யே  ஜபந்தி
த்வேஷ்டாரம்  க்னந்தி தே ச   த்ரிபுவனமஸிதே  வஸ்யபாவம்  நயந்தி
ஸ்ருக்கத்வந்த்வாஸ்ர தாராத்வயதரவதனே  தக்ஷிணே  காலிகேதி    ll 3 ll 

மஹாமங்கலமூர்த்தியே,  ஹே  தக்ஷினகாளிகையே பரவிடப்படர்ந்த கூந்தலழகியே. கரிய ஸாயல் கொண்ட  ஸுந்தரியே,   நிர்குண ஸ்வ ரூபிணீயே.  வாயின் இரு ஓரங்களிலும் இரத்தக் கசிவு கொண்டவளே. ஹ் ர்  ஈம் என்ற மாத்ருகைகளின்  சேர்க்கையால் ஏற்படும் ஹ்ரீம் என்ற பீஜத்தை  இரு முறை மடக்கி  அந்தக் கூட்டை எவர்கள்  ஜபிக்கிரார்களோ அவர்கள்  சத்ருக்களையும்  அழித்து மூவுலகங்களையும்  தம் வசப்படுத்தி  ஸுகித்து  வாழ்வர்.  

ஊர்த்வம்  வாமே  க்ருபாணாம்  கரதலகமலே  ச்சின்னமுண்டம் ததாத:

ஸவ்யே S பீதிம்  வரஞ்ச  த்ரிஜகதகஹரே  தக்ஷிணே   காலிகே  ச 
ஜப்த்வைதந்நாமவர்ணம்  தவ மனுவிபவம்   பாவயந்த்யேததர்த்தம்
தேஷாமஷ்டௌ  கரஸ்தா:  ப்ரகடிதவதனே  ஸித்தயஸ்த்ர்யம்பகஸ்ய   ll 4 ll


மூவுலகங்களிலும் வாழும்  எல்லா  ஜந்துக்களின்  பாபங்களையும் துன்பங்களையும் விபத்துகளையும் அழித்தருள்பவளே.   மகாமங்கள ரூபிணியே    ஹே.   ஸ்ரீ  தக்ஷினகாளிகே  இடது மேற் கரத்தில்  பத்ராத்மாஜன் என்ற கட்கத்தையும்,  இடது  கீழ் கரத்தில் வெட்டப்பட்ட மனிதனின் சிரஸ்சையும்,  வலது மேற் கரத்தில் அபய  முத்திரையையும்,  வலது  கீழ் கரத்தில்  வரத  முத்திரையையும்  தரித்தருள்பவளே.   அதி ப்ரகாஸமான ஜோதிஸ்ஸுடன்  ஜ்வலிக்கும் வதனம் கொண்ட பேரழகியே.  எவர்கள் இங்ஙனமாக  உன் திரு உருவத்தை  த்யானித்துக் கொண்டே உனது மூலமந்த்ரமாகிய வித்யாராஜ்ஞீயை,  அதன் மகிமையையும் அர்த்த பாவத்தையும் உன் திருநாமத்தின்  அக்ஷரங்களினுள்  பொலிந்து கிடக்கும் பரம ரஹஸ்யமான  தாத்பர்யங்களையும் உணர்ந்து கொண்டே  ஜபிக்கிறார்களோ  அவர்கள்  முக்கண்  படைத்த  ஈஸ்வரனின் வரப்ப்ரசாதமாகிய "ஐஸ்வர்யம்" எனப்படும் அஷ்டமஹாஸித்திகளும் தன் கைப்பொருளென  வஸமாகக் கிடைக்கப் பெற்று இனிது வாழ்வார்.   

வர்க்காத்யம்  வஹ்னிஸம்ஸ்தம்   விதுரதிலலிதம்  தத்த்ரயம்  கூர்சயுக்மம்

லஜ்ஜா  த்வந்த்வஞ்ச  பஸ்சாத்ஸமிதமுகி   தததஷ்டத்வயம்  யோஜயித்வா
மாதர்யே யே  ஜபந்தி  ஸ்மரஹரமஹிலே  பாவயந்தஸ் ஸ்வரூபம் 
தேலக்ஷ்மீலாஸ்ய  லீலா கமலதலத்ருஸ:  காமரூபா  பவந்தி      ll 5 ll


தாயே.   ஆனந்த  ஜ்யோதிஸ் வீசும் புன்முறுவல்  பூத்த  ஸுந்தரவதனப் பேரழகியே.  மன்மதனின்  உடலை  அழித்து அருளிய  பரமசிவனின் பத்னியே.   ஐம்பத்தொரு மாத்ருகைகளும் வ்யஞ்ஜன  வர்க்கத்தின்  முதல் அக்ஷரமான க  காரத்தின்  மீது  ர காரம்  (ரேபம்) ஏறி  அதனுடன்  ரதி  பீஜமாகிய  ஈ  காரமும்  இவ்வெல்லாவற்றின்  மேல் சந்த்ர  பீஜமாகிய அநுஸ்வாரமும்  (பிந்து) ஏறியதால்  மிக்க அழகுடன்  பொலிந்து  இங்கனமாக உருவான க்ரீம்  என்ற  பீஜாக்ஷரத்தை  மும்முறை  மடக்கிய முக்கூட்டையும்  அதனை  அடுத்து  கூர்ச்ச  பீஜமாகிய ஹூம்  காரத்தை இரு முறை  மடக்கியும் அதன் மேல்  லஜ்ஜா  பீஜமாகிய  ஹ்ரீம்  காரத்தை  இரு முறை மடக்கியும், அதனை  அடுத்து  கடைசியில்  ஸ்வாஹா  காரத்தை இணைத்து இங்கனமாக உருவாகிய  க்ரீம் க்ரீம் க்ரீம்  ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா என்ற ஒன்பது அக்ஷரங்களாலான   மஹாவித்யையை   எவர்கள் உனது ஸ்வரூபத்தை மனதில் நிலையாக இறுத்திக்  கொண்டு  பீஜத்தின் அர்தானுசந்தானத்துடன் ஜபிக்கிறார்களோ  அவர்கள்   ஸ்ரீ மஹாலக்ஷ்மி  தன் கையில் விளையாட்டாக வைத்த்ருக்கும் கமலத்தின் தளங்கள்  போல் அழகிய கண்களுடன் பொலிவார்கள்.  மன்மதனை ஒத்த  அழகர்களாவார்கள்.   தாம் விரும்பிய  உருவம் எடுத்துக்கொள்ளும் வல்லமை பெறுவார்கள். தேவியின் மந்த்ரமே  விக்ரஹமானவர்களாகி  வித்யா ஸ்வாரூபிகளாக வீர்யமாக வாழ்வர்.

ப்ரத்யேகம்  வா  த்வயம்  வா  த்ரயமபிச   பரம்  பீஜமத்யந்தகுஹ்யம்
த்வந்நாம்னா  யோஜயித்வா  ஸகலமபி  ஸதா  பாவவந்தோ  ஜபந்தி
தேஷாம்  நேத்ராரவிந்தே   விஹரதி  கமலா  வக்த்ரஸுப்ராம்ஸுபிம்பே 
வாக் தேவீ   திவ்யமுண்டஸ்ரக திஸய லஸத்கண்ட பீனஸ்தனாட்யே  ll 6 ll


மஹத்தான தெய்வாம்ஸ தத்துவங்களின்  ஸூஸகமானவைகளும்  மிகப் பிரகாசமானவைகளுமான ஐம்பத்தொரு முண்டங்களாலான   மாலை  அணிந்திருத்தலால்  அதி  ஜாஜ்வல்யமாக ஸோபிக்கும் கழுத்தும்,  உருண்டு திரண்ட ஸ்தன பாரங்களுடன் ஜ்வலிக்கும்  அழகிய  மார்பகமும்  கொண்ட அதி  அற்புதமான ஸுந்தரியே.  எல்லா வித்யைகளிலும் ஸர்வோத்தம மானதும் மிகமிக ரஹஸ்யமாக காப்பாற்ற வேண்டியதுமான ஸ்ரீ வித்யராஜ்ஞியின் ஒவ்வொரு பீஜத்தையும் தனித்தனியாகவோ, ஏதேனும் இரண்டு மட்டுமோ, அல்லது மூன்று மட்டுமே சேர்ந்த கூட்டாகவோ, அல்லது பீஜங்களையும் மட்டும் மொத்தமாகவோ, அல்லது இவற்றை எல்லாம் உன் திரு நாமத்துடன் சேர்த்தோ  அல்லது சேர்க்காமலோ  எவர்கள் உன் திவ்ய ஸ்வரூபத்தை ப்ரேமையுடன் த்யானித்துக் கொண்டும்  அர்த்த பாவானு சந்தானத்துடனும் ஸதாகாலமும் தொடர்ச்சியாக ஜபிக்கிறார்களோ அவர்கள்  கண் எதிரில் ஸ்ரீ மஹாலக்ஷ்மி லீலைகள் புரிவாள்.  சந்திர பிம்பம் போன்ற அவர்களது வதனத்தில் வாக்தேவியாகிய  ஸ்ரீ ஸரஸ்வதி  ஆனந்தமாக   விளையாடுவாள்.

கதாஸூனாம்  பாஹுப்ரகரக்ருதகாஞ்சீ பரிலஸன்-
நிதம்பாம்  திக்வஸ்த்ராம் த்ரிபுவனவிதாத்ரீம்  த்ரிநயனாம்
ஸ்மஸாநஸ்தே  தல்பே  ஸவஹ்ருதி  மஹாகாலஸுரத-
ப்ரஸக்தாம்  த்வாம் த்யாயன் ஜனனி ஜடசேதா  அபி கவி:       ll 7 ll
   
தாயே.  மஹாமந்த புத்தியுள்ள  ஒரு மூடனாயினும்  கூட  எவனேனும்  ஒருவன் சூர்யன், சந்திரன், அக்னி ஆகிய முச் சுடர்களை   தன் மூன்று கண்களாகப் படைத்வளாகவும்  தனது பஞ்சக்ருத்யங்கள்  மூலம் மூவுலகத்தையும் பரிபாலித்து நிர்வஹித்து அருள்பவளாகவும்  ஸவங்களின் கரங்களாலான மேகலையை இடையில் தரிப்பவளாகவும்  திக்குகளையே வஸ்த்ரமாகப்  பூண்டவளும்,  அதாவது உடலில்  வஸ்திரமே தரிக்காதவளாகவும்  ஸ்மஸானத்தில்  சிதையின்  மீது  ஸவரூபமாகச் செயலற்றுக் கிடக்கும் ஸ்ரீ மஹாகாலரின் மீது அவரது ஹ்ருதயத்தில் அமர்ந்து அவருடைய சேர்க்கையில்  இன்புற்று  மகிழ்பவளாகவும்,  இங்ஙனமாக உனது ஸ்வரூபத்தை  த்யானிக்கிறானோ அவன் ஆத்ம  ஜ்ஞானமும்  ப்ரஹ்மானந்தமும்  ஸித்திக்கப்பெற்ற மஹா கவிகளுள் ஸ்ரேஷ்டனாக இனிது வாழ்வான்.

ஸிவாபிர் கோராபிஸ்ஸவநிவ ஹமுண்டாஸ்தி நிகரை:          
 பரம்  ஸங்கீர்ணாயாம்  ப்ரகடிதசிதாயாம்  ஹரவதூம்
ப்ரவிஷ்டாம் ஸந்துஷ்டாமுபரி  ஸுரதேநாதியுவதீம்
ஸதா  த்வாம  த்யாயந்தி  க்வசித்வாபி  ந தேஷாம்  பரிபவ :   ll 8 ll


தாயே   க்ரூரமான பெண் நரிகள் கூட்டங்கூட்டமாகக் குழுமியதும்  ஏராளமான ஸவங்களும்  முண்டங்களும் கணக்கற்ற  எலும்புகளும் குவிந்து கிடப்பதுவுமான ஸ்மஸானத்தில் சிதையில் ஸவரூபமாகச் செயல்  மாண்டு விழுந்து  கிடக்கும் ஸ்ரீ மஹாகாலரின்  மீது  அமர்ந்து அத்யந்த ஸந்தோஷத்துடன்  அவருடைய சேர்க்கை இன்புறவில்  பேருவகை பூத்த  மகிழ்ச்சி  வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளவளாகவும்  நவ  யௌவனப் பருவத்தில் ஜ்வலிக்கும் அதிமோஹன  ஸுந்தரியான மடந்தையாகவும்  பக்தர்களின்  தாபத்ரயங்களைக்  களைந்தருளும்  ஸ்ரீ மஹாகாலரின் ப்ரிய  நாயகியாகவும், எவர்கள்  உன்னை எப்பொழுதும்  த்யாநிக்கிரார்களோ  அவர்கள் எவ்விதத்திலும், யாவராலும்  பயபக்தி விஸ்வாஸத்துடனும்  மிக்க மரியாதையுடனும்  பெரிதும் கௌரவிக்கப்பட்டு விமரிசையாக  உப்பசரிக்கப்படுவர்.

வதாமஸ்தே  கிம்  வா  ஜனனி  வய முச்சைர்  ஜடதியோ
ந  தாதா  நாபீஸோ ஹரிரபி  ந  தே  வேத்தி  பரமம்
ததாபி  த்வத்பக்திர் முகரயதி சாஸ்மாக மஸிதே
ததேதத்   ஷந்தவ்யம்  ந  கலு  பஸுரோஷஸ்ஸமுசித:    ll 9 ll


தாயே,   எந்த மஹா  ஜ்ஞாநிகளாலும்,  அதிஸய ஸூஷ்ம புத்திமான்களாலும் ஊகித்துப் பார்க்க முடியாதபடி அவ்வளவு  அளவு  கடந்த ப்ரபாவ மஹிமை  உள்ளவளே.  இவ்வளவு  மஹாமந்தமான  புத்தியுள்ள  நாங்கள்  உன்னுடைய மஹோன்னதமான  பர தத்துவத்தைப் பற்றியும்  உன்னுடைய அதி ஸூஷ்ம சக்திகளை  பற்றியும் ஒரு லவலேஸமேனும்  எவ்வாறு எடுத்துக் கூறமுடியும்.   ப்ரஹ்ம, விஷ்ணு, ருத்ரர்கள்  கூட உன்னுடைய  பெருமைகளின்  உண்மையான நிலையைப்பற்றி சிறிதும் அறியார்களே.  ஆயினும்  புல்லறிவாளர்களாயினும் எங்களுக்கு உன்பால் உள்ள அளவு கடந்த ப்ரேமையானது  உன்னைப்பற்றி ஏதேதோ  கொச்சை கொச்சையாக பிதற்ற  தூண்டுகிறது.  ஆதலால்  இவ்வளவு  ஜடப்  பிரவிகளாகிய  எங்களது இந்தச் சிறிய குற்றத்தை தயவு செய்து  மன்னித்து அருளவேண்டும்.   அன்னையே  எங்களைப்போல் அறிவில்லாத  ஜந்துக்களின் மீது  கோபங்கொள்வது உன்னைப் போன்ற பெரியோர்களுக்கு  தகுதி யல்லவே.    
      
ஸமந்தா தாபீன  ஸ்தந ஜகனத்ருக்  யௌவனவதீ
ரதாஸக்தோ  நக்தம்  யதி  ஜபதி  பக்தஸ்தவ  மநும்
விவாஸாஸ்த்வாம்  த்யாயன்  கலிதசிகுரஸ்  தஸ்ய  வஸகாஸ்-
ஸமஸ்தாஸ்  ஸித்தௌகா  புவி சிரதரம் ஜீவதி  கவி:   ll 10 ll 


நன்றாக  பரந்து விரிந்த  தன்  கேசங்களுடனும்,  உடலிலே  வஸ்திரமே இல்லாத நிலையில் அமர்ந்துகொண்டும், எவனேனும் உனது பக்தனொருவன் நன்றாக பருத்து உருண்டு  திரண்ட ஸ்தனபாரங்களும்  இடுப்பும் கொண்ட யௌவனப் பருவ மங்கையான  ப்ரிய நாயகியுடன் இணைந்து இன்புறும் வேளையில், உனது  மூல மந்த்ரமாகிய வித்யராஜ்ஞீயை    உனது ஸ்வரூப த்யானதில் நன்றாக ஆழ்ந்த வண்ணம் ப்ரேமையுடன்  ஜபிப்பாநேயாகில்,  அவன் எல்லா ஸித்திகளும் தன் வசமாகக் கிடைக்கப்பெற்று  பெரும் ப்ரஹ்மஞானியாகவும் ஸிரஞ்ஜீவியாகவும் ஜீவன் முக்தனாகவும் இப் பூவுலகில் இனிது வாழ்வான்.

குறிப்பு:-   இந்த ஸ்லோகத்தில் லயயோகம்  விபரிக்கப்படுகிறது.  "உடலில் வஸ்த்ரம் இல்லாமல்" என்பதும்,  "பரந்த கேசங்களுடன்"  என்பதும்,  உபாசகன் மனதில்  குணங்களின் வியாபாரம் இல்லாமல், அதாவது  "விருப்பு வெருப்பு முதலிய பண்புகளற்ற நிலையில்" என்று பொருள்படும். "தன் ப்ரியநாயகி" என்பது குண்டலினி சக்தியைக் குறிக்கும்.   குண்டலினி சக்தியின் இஷ்டதேவதை "இரவில்" என்பது யோக நிஷ்டை அவசரத்தில்  என்று பொருள்படும்.   மேற்குறித்த சொற்களெல்லாம்  பரிபாஷை பதங்கள் -- அவற்றின் நிகண்டுக அர்த்தங்களை அப்படியே நேரிட க்ரஹீக்கக்கூடாது.

ஸமாஸ்ஸ்வஸ்திபூதோ ஜபதி  விபரீதோ யதி ஸதா
விசிந்த்ய  த்வாம்  த்யாயன்ன திஸய மஹாகால ஸூரதாம்
ததா  தஸ்ய    ஷோணீ  தலவிஹரமாணஸ்ய  விதுஷு:
கராம் போஜே  வஸ்யாஸ்ஸ்மரஹரவதூ  ஸித்திநிவஹா:     ll 11 ll


எவனேனும் ஒரு பக்தன் குண்டலினி ஸக்தியின் வீர்யமான ஓட்டத்தின் வீறு கொண்ட லய யோகத்தில் ஆழ்ந்து மூழ்கி  நேரம் பொழுதெல்லாம் பாராமல் ஸதாகாலமும் அதிலேயே லயித்தவனாக, ஸ்ரீ  மஹாகாலருடன்  உன் ஸக்தியே மேலோங்கி இயங்க நீ இரண்டறக்கலந்து ஆழ்ந்து இன்புறும் நிலையையே  இடையறாது பிரேமையுடன் த்யானித்த வண்ணம்   வித்யாராஜ்ஞீயைப் பல வருஷ  காலம் ஜபிப்பானேயாகில்,  அவன் ஆதி பராசக்தியாகிய உனது ஸாந்நித்யமும் , அநுக்ரஹமும்   ஸக்த்தியும் விரவிய எல்லா மஹாஸித்திகளும் தன் கை வஸமாக கிடைக்கப்  பெற்று  இப்  பூவுலகில்  மஹாஞானியாக நெடுங்காலம் இனிது வாழ்வான்.

ப்ரஸூதே ஸம்ஸாரம்  ஜனனி  பவதீ  பாலயதி ச 
ஸமஸ்தம்  ஷித்யாதி ப்ரலயஸமயே  ஸம்ஹரதி  ச 
அதஸ்த்வம்   தாதாஸி  த்ரிபுவனபதிஸ்  ஸ்ரீபதிரபி 
மஹேஸோsபி ப்ராயஸ்ஸகலமபி  கிம் ஸ்தௌமி  பவதீம்   ll 12 ll


தாயே  இந்த ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிபண்ணுவது   நீயே;  ரக்ஷிப்பதும் நீயே.  பிரளய காலத்தில் இப்பூமி  முதலான எல்லாவற்றையும் அழிப்பதும் நீயே ஆதலின் நீதான் ப்ரஹ்மா; இம் மூவுலகங்களையும் காக்கும் லக்ஷ்மிபதியான  நாராயணனும்  நீதான்.   சுருங்கக்  கூறினால் சேதனா சேதன  பிரபஞ்சம் எல்லாவற்றின்  வ்யக்தா வ்ய க் த  மூர்த்தியும் நீதான்.   அவ்வெல்லாவற்றின் அதிகாரிணியும்  அத்யக்ஷையும் ஆக ஸர்வமும்    நீயேதான் அல்லவோ.   அப்படி இருக்க ஜகதாம்பிகே,  எளியனான  அடியேன்  எப்படி உன் முழுமையான  ஸ்வரூபத்தைக் கூரி ஸ்துதிக்க முடியும். 

அநேகே  ஸேவந்தே  பவததிக   கீர்வாண  நிவஹான் 
விமூடாஸ்தே  மாத:  கிமபி  ந  ஹி  ஜானந்தி  பரமம் 
ஸமாராத்யாமாத்யாம்  ஹரி ஹர  விரிஞ் ச் யாதிவிபுதை:
ப்ரபன்னோ sஸ்மி  ஸ்வைரம்  ரதிரஸமஹாநந்தநிரதாம்   ll 13 ll


தாயே,  பலர்  உன்னை தவிர  இன்னும் பல்வேறு  தேவதைகளை,  அவர்கள் உன்னைக்காட்டிலும்  மேலானவர்கள் என்ற தவறான எண்ணத்துடன்  உபாஸிக்கிறார்கள்.  அவர்கள்  யாவரும் பெரும்  மூடர்கள்.  பரதத்துவத்தை சிறிதும்  அறியாதவர்கள்.   ப்ரஹ்மா விஷ்ணு ருத்ரர்கள்  முதலான  எல்லாத் தேவர்களாலும் விசேஷமாக  ஆராதிக்கப்படுபவளும்,  உன்  ப்ரியநாயகரான ஸ்ரீ மஹாகாலருடன்   இரண்டறக்கலந்து  சதாகாலமும்  பேரின்பம் அனுபவிப்பதிலேயே  மகிழ்ந்ததிருப்பவளும்  ஆதி பராசக்தியுமான   உன்னை நான்  பிறரின் தூண்டுதலுக்கு அல்லாமல் நானே என் ஸ்வயமான ஆர்வ  மேலீட்டால்  உன்னை  சரணமடைந்து  விட்டேன். 

தரித்ரீ  கீலாலம்  ஸுசிரபி  ஸமீரோsபி  ககனம்
த்வமேகா கல்யாணீ   கிரிஸரமணீ  காலி  ஸகலம் 
ஸ்துதி:  காதே  மாதர்நிஜகருணயா  மாமகதிகம்
ப்ரஸன்னா  த்வம் பூயா பவமநு  ந  பூயான்மம  ஜநு:   ll 14 ll


  ஸ்ரீ மஹாகாலரின்  ப்ரிய  நாயகியான  ஹே காலிகே.   ப்ருதிவீ  அப்பு  தேஜஸ்  வாயு  ஆகாஸம்  ஆகிய பஞ்ச  பூதங்கள்  எல்லாமும்  நீயே.  வ்யக்தா வ்யக்த மானதும் சேதனசேதனமானதும்  ஆன இந்த ப்ரபஞ்சம்  முழுமையும்  நீயேதான்.   நீ ஒருத்தியேதான் இவ்வெல்லாமும்.  விஸ்வ  மங்கல மூர்த்தியும் நீயேதான்.  தாயே  எனக்கு  வேறு  கதி  இல்லை.  என் மீது  இரக்கம் கொண்டு உன் கருணா  விலாசத்தால்  எனக்கு இனி பிறவி  இல்லா  வரம்  கொடுத்தருள், என் அன்புத் தாயே.

ஸ்மஸானஸ்தஸ்ஸ்வஸ்தோ  கலிதசிகுரோ  திக்படதரஸ்
ஸஹஸ்ரம்  த்வர்க்காணாம்  நிஜகலிதவீர்ய்யேண  குஸுமம் 
ஜபம்ஸ்த்வத்ப்ரத்யேகம்  மநுமபி தவ த்யான   நிரதோ
மஹாகாலி  ஸ்வைரம்  ஸ பவதி  தரித்ரீ  பரி வ்ருட:     ll 15 ll


ஹே  மஹாகாலியே   எவனேனும் ஒரு  பக்தன்  தன்  த்யான  யோக ஸாதனையில்  நிர்குணமான  உன்  ஸ்வரூபத்தையே   இடையராது ஸிந்தித்துக்கொண்டு தன் மயமான ப்ரேம த்யானத்தில்  ஆழ்ந்த  வண்ணம் ஆயிரக்கணக்கான  ஆவ்ருத்தியாக  உன்  மூல  மந்த்ரமாகிய  வித்யராஜ்ஞீயை ஜபித்துக்கொண்டே  ஒவ்வொரு  மந்திர ஆவ்ருத்திக்கும்  ஒரு  புஷ்பம் வீதம்  ஆயிரக்கணக்கான எருக்கம்  புஷ்பங்களை உன் பாத  கமலங்களில் அர்பணம் செய்து கொண்டே, தன்  அவிச்சின்ன  ஸ்மரணத்தில்  அகுல ஸஹஸ்ராரகமலத்தின்  ப்ரஹ்மரந்திரத்தினூடே குண்டலினி  சக்தியுடன்  இணைந்து  ஒன்றியதின்  இன்ப நுகர்ச்சியில்  மூழ்கிய படியாகவே  ஆழ்ந்து உன் ஸ்வரூப த்யானத்தின்  வீர்யத்தால்  மகிழ்ந்த சந்திரனுடைய கருணையால்  சரிந்து ஒழுகும் அம்ருத  தாரையையும்  உனக்கே    அர்பணம்  செய்து  மகிழ்வாநேயாகில்,  அவன் இந்த உலகுக்கே ஏக சக்ராதிபதியாகி  ஸிரஞ்ஜீவியாக  இனிது  வாழ்வான்.

க்ருஹே  ஸம்மார்ஜன்யா பரிகலித  வீர்ய்யம்  ஹி  குஸுமம்
ஸமூலம் மத்யாஹ்னே  விதரதி  சிதாயாம் குஜதினே
சமுச்சார்ய்ய ப்ரேம்ணா  மனுமபி  ஸக்ருத்  காலி  ஸததம்
கஜாருடோ   யாதி  க்ஷிதி பரிவ்ருட ஸ்ஸத்கவிவர:   ll 16 ll


ஹே  காலிகே .   எவனேனும் ஒரு பக்தன் செவ்வாய் கிழமையன்று நள்ளிரவில்  யோக  நிலையில் மஹாஸ்மஸானமாகிய  ப்ரஹ்மரந்த்ர கமலத்தில்  குண்டலினி ஸக்தியுடன்  இரண்டறக் கலந்து இணைந்த சேர்க்கையின் வீர்யத்தால் கசிந்து ஒழுகும் புஷ்பாஸவ மகரந்த ஸ்ராவத்தை உனது அழகிய ஸ்வரூபத்தின் ப்ரேம தியானத்தில்  ஆழ்ந்தபடியாக  உனது மூல மந்த்ரமாகிய வித்யாராஜ்ஞீயை  ஓர்  ஆவ்ருத்தியாவது   தன்மயபாவத்துடன்  ஜபித்து  உனக்கு  அர்ப்பணம்  செய்வானேயாகில், அவன் இந்த உலகத்திற்கே பேரரசனாகி  சிறந்த  ஆத்ம  ஜ்ஞாநியாகவும் எவ்விடத்திலும்  எந்நாளும் யானை  மீது  ஏறி  செல்பவனாகவும் நெடுங்காலம் வீறுடன் ஆனந்த மூர்த்தியாக வாழ்வான். 

ஸ்வபுஷ்பைராகீர்ணம்  குஸுமதநுஷோ  மந்திரமஹோ
புரோ  த்யாயன்  த்யாயன்  ஜபதி  யதி பக்தஸ்தவமநும் 
ஸ கந்தர் வஸ்ரேணீபதிரபி  கவித்வாம்ருதநதீ
நதீன:  பர்ய்யந்தே  பரமபதலீன:  ப்ர்பவதி           ll 17 ll


எவனேனும்  ஒரு பக்தன் யோக நிலையில் மூலாதார  கமலத்தின் மத்தியில் த்ரிகோணாகாரமான  யோனிமண்டலத்தில்  உள்ள ஸ்வயம்புலிங்க புஷ்பங்கள் பரக்க இறைந்து   பரிமளம் வீச,  மனோ ரமணீயமாக அமர்ந்திருக்கும்  காமதேவனின் ஸாந்நித்யத்தால்  ஆனந்தமயமாக ஆகர்ஷிக்கும்  இந்த ஸ்தலத்தை தன்  அகக் கண்முன் பாவனையால் இருத்திக்கொண்டு  இடையறாது த்யானித்துக்கொண்டே  அங்கு உன் ஸ்வரூபத்தை ப்ரதிஷ்டை செய்து  அதன் பிரேம சிந்தனத்துடன் வித்யாராஞ்ஜியை தொடர்ந்து ஜபிப்பானாகில்,  அவன்  கானத்தில்  ஹா ஹா, ஹூ ஹூ,  விஸ்வாஸூ, தும்புரு,  சித்திரரதன் முதலான கந்தர்வர்களுக்கெல்லாம்  தலைவனாகவும்  கவித்வமாகிய அம்ருத ஸாகரத்துக்கு  ஒப்பானவனாகவும் நெடுங்காலம்  கம்பீரமாக இனிது வாழ்ந்து கடைசியில்  பரமபதமாகிய உன் ஸாந்நித்யமும்  பெற்று  ஜீவன்  முக்த நாகிவிடுவான்.

த்ரிபஞ்சாரே  பீடே  ஸவஸிவஹ்ருதி  ஸ்மேரவதனாம்
மஹா காலேனோச்சைர்மதன ரஸலாவண்ய  நிரதாம்
ஸமாஸக்தோ  நக்தம்  ஸ்வயமபி  ரதாநந்தநிரதோ 
ஜனோயோ  த்யாயேத்த்வாமயி  ஜனனி  ஸ ஸ்யாத்ஸ்மரஹர:   ll 18 ll


தாயே.  எவனேனும் ஒரு பக்தன் நள்ளிரவில்   யோகநிலையில் குண்டலினி ஸக்தீயுடன் அன்யோன்யமாக இசைந்து கலந்திருக்கையில்  பதினைந்து கோணங்களாலான  அதாவது  ஐந்து த்ரீகோணங்களால் உருவான சக்ர ரூபத்திலுள்ள பீடத்தின் மீது  செயலற்று ஸவரூபமாகக் கிடக்கும் மஹாகாலரின் ஹ்ருதயத்தில் அமர்ந்து ஆனந்த ஸிரிப்புடன்  அவருடன் இணைப்பு பிணைப்பில் ஒன்றிய ஸம்யோக  அவஸரத்தில்  ஆழ்ந்து மகிழ்ந்திருக்கும் உனது இன்ப  ஸ்வரூபத்தையே தொடர்ந்து ஆழ்ந்து த்யானித்துக்கொண்டு  அதிலேயே மூழ்கி,  தன் தேகமே  அந்த யந்த்ரமாவதை உணர்ந்து உணர்ந்து தன் ஹ்ருதயத்தில் லீலா விநோதமாக அமர்ந்துள்ள உனது ஆனந்தமூர்தியையே   சிந்தித்து  மகிழ்வாநேயாகில்  அவன் ஸ்வயமாகவே ஸாக்ஷாத்  மஹாகாளர்  ஆகிவிடுவான்.  இது திண்ணம்.  

ஸலோமாஸ்தி  ஸ்வைரம் பலலமபி  மார்ஜ்ஜாரமஸிதே
பரம்  சௌஷ்ட்ரம்  மைஷம் நரமஹிஷயோஸ்சாகமபிவா
பலிந்தே  பூஜாயாமயி  விதரதாம் மர்த்யவஸதாம்
ஸதாம் ஸித்திஸ்ஸர்வாப்ரதிபதமபூர்வா  ப்ரபவதி   ll             ll 19 ll 


எல்லா  கட்டுப்பாடுகளையும்  மீறிய  பூர்ண  ஸ்வதந்திர  மூர்த்தியே.   கரிய ஸாயலுடன்  ஜ்வலிக்கும்  பேரழகியே.   என்  தாயே.  விவேக  மற்றும் ஜடர்கள் வாழும் இந்த பரம  ஸமூகத்தில் இருந்து கொண்டே ஸாத்வீக  ஞானம் சித்திக்கப்பெற்ற  விவேகிகளான  உன் பக்தர்கள், உன் மீது பொங்கிய ப்ரேமையின்  ஒட்டத்தால்  எலும்பு  ரோமம் முதலியவை நீக்கப்படாமல் முழுமையாகவே  பூனை,  ஒட்டகம், செம்மரி ஆடு, மனிதன், எருமைக்கடா, வெள்ளாடு ஆகியவற்றின் மாமிசத்தை தம் சொந்த விருப்பத்தின் மேலீட்டால் பூஜை வேளையில் உனக்கு  பலிஇடுவர்களேயாகில் , மோக்ஷ பதவியை நோக்கி அவர்கள் செய்யும் உபாஸன  புரஸ்சரண  க்ர்மங்கள்  எல்லாம் அத்யாஸ்சர்யமாகவும்,  ஸித்தி  கிடைக்கப்பெற்று  பூர்ண பலம்  அடைந்து  மகிழ்வார்கள்.

மேற்கூறிய  பூனை, ஒட்டகம் எருமைக்கடா, முதலிய சொற்களெல்லாம் பரிபாஷை பதங்கள்.  அவற்றின் நைகண்டுக  அர்த்தங்களை அப்படியே க்ரஹிக்கக்கூடாது.  வெள்ளாடு  என்ற சொல்  காமத்தைக் குறிக்கிறது. எருமைக்கடா  என்ற சொல் க்ரோதத்தைக்  குறிக்கிறது.  பூனை லோபத்தையும்,  செம்மரிஆடு மோஹத்தையும்,  நரன்  மதத்தையும்,  ஒட்டகம் மாத்ஸர்யத்தையும் குறிக்கிறது.  

வசீ  லக்ஷம் மந்த்ரம் ப்ரஜபதி  ஹவிஷ்யாஸநரதோ

திவா  மாதர்யுஷ்மச் சரணயுகல த்யான  நிரத:
பரம் நக்தம் நக்னோ  நிதுவன  விநோதேன  ச மனும்
ஜனோ லக்ஷம்  ஸ ஸ்யாத்ஸ்மரஹரஸமான:   க்ஷிதிதலே   ll 20 ll


தாயே.  எவனேனும் ஒரு பக்தன் தன்  இந்த்ரியங்களின்  ஓட்டத்தை முற்றிலும் அடக்கிக்கொண்டு பகலில்  உப்பில்லாமல் சமைத்த ஓதனத்தை உட்கொண்டு உனது  திருவடி  தாமரையையே த்யானித்துக் கொண்டு உனது மூலமந்த்ரமாகிய வித்யாராஜ்ஞீயை  ஜபித்து  லக்ஷக்கணக்கில் ஆவ்ருத்தி ஸங்க்யை உரு  ஏற்றிக்கொண்டு  இரவில்  யோக நிலையில் குண்டலினி ஸக்தியுடன்  ஐக்யாவஸ்தையில்  ஒன்றிய  வண்ணம்  நிற்க்குணமான நிலையில் இருந்து கொண்டு மேலும் லக்ஷக் கணக்கான அந்த  மஹோன்னதமான  மந்த்ர ரத்னத்தை  ஜபிப்பானேயாகில் அவன் இவ்வுலகில்  சாக்ஷாத்  ஸ்ரீ மஹாகாலருக்கு ஒப்பாக  நெடுங்காலம் இனிது  வாழ்வான். 

இதம் ஸ்தோத்ரம்  மாதஸ்தவ  மநுஸமுத்தாரணஜப
ஸ்வரூபாக்யம்பாதாம்புஜயுகலபூஜாவிதியுதம்
நிஸார்த்தே  வா  பூஜாஸமயமதி  வா யஸ்து படதி
ப்ரலாபஸ்தஸ்யாபி  ப்ரஸரதி  கவித்வாம்ருதரஸ:      ll 21 ll


தாயே.   எவரேனும் ஒரு பக்தன் உனது  மூலமந்த்ரமாகிய வித்யாராஜ்ஞீ உருவாகும் வகையை  விளக்குவதும்,  அதனை  ஜபிக்கும் விதிமுறையை விஸ்தரிப்பதும்,  உனது திவ்ய  மங்கல  ஸ்வரூபத்தை வர்ணித்து விளக்குவதும், உனது  திவ்ய சரணாரவிந்தங்களில்  செய்ய வேண்டிய பூஜை பத்ததியை விளக்கிக்  கூறுவதும் ஆன  இந்த  ஸ்தோத்திர ரத்னத்தை நள்ளிரவிலோ ,  பூஜை  நிகழும் வேளைகளிலோ, ஸ்ரத்தையுடன் ஸுஸ்வரமாக பாராயணம் செய்வானேயாகில்  அவனுடைய  பிதற்றலான சில சொற்கள்  கூட கவிதையாகி அம்ருததாரையாக  ப்ரஹவித்து கேட்போரை மகிழ்விக்கும்.

குரங்காக்ஷிப்ருந்தம்  தமநுஸரதி ப்ரேமதரலம்
வஸஸ்தஸ்ய  ஷோணீபதிரபி  குபேரப்ரதிநிதி:
ரிபு:  காராகாரம் கலயதி ச தம்  கேலிகலயா
சிரஞ்ஜீவன்  முக்தஸ்ஸ பவதி  ஸுபக்த:  ப்ரதிஜனு:   ll 22 ll

அத்தகைய  பாக்கியசாலியான  பக்தனிடம் அளவு கடந்த ப்ரேமை கொண்டு மான்விழியராகிய அழகிய பெண்கள் பலர் கூட்டம் கூட்டமாக குழுமி,   அவனது அன்புக்காக விழைந்து போட்டியிட்டுக்கொண்டு  அவனையே  சூழ்ந்து பின் தொடருவார்கள்.  நாட்டை  ஆளும்  அரசன்  அவனுக்கு வசமாகி  அவனுடைய விருப்பங்களை பூர்தி செய்து வைப்பான்.   அவன்  குபேரனுக்குச் சமமான ஐஸ்வர்யம் படைத்தவனாக மிகக் கௌரவமாக  வாழ்வான்.   சத்ருக்கள் அவனைக் கண்ட மாத்திரத்தில் சிறைச்சாலையைக் கண்டு நடுங்குவது போல் அஞ்சுவார்கள். லீலாவிநோதமாகவே அவன் இப்பூவுலகில் நெடுங்காலம் வாழ்வான்.  அவனுக்கு இனி ஜன்மம் கிடையாது.

குறிப்பு::  அழகிய  பெண்கள் அவனை விரும்பிச்   சூழ்ந்து பின்தொடர்வார்கள்  என்று கூறியதாவது,  குண்டலினி யோகத்தில் ஆழ்ந்து அவனை தேவி  பராஸக்தியாகிய தக்ஷினகாளிகையும், அவளை  சூழ்ந்த பரிவார ஸக்தி தேவதைகளும் தம் கருணா  கடாக்ஷங்களால் பெரிதும் மகிழ்விப்பார்கள் என்று பொருள்படும்.   

இதி ஸ்ரீ காலீத்ந்த்ரே  ஸ்ரீமன் மஹாகாலவிரசிதம்  ஸ்ரீகர்பூர  ஸ்தோத்ரம்  ஸமாப்தம்.



இங்ஙனமாக ஸ்ரீ காலிதந்திரத்தில் ஸ்ரீ மஹாகாலர்  திருவாய்  மலர்ந்து அருளிய ஸ்ரீ கர்ப்பூர ஸ்தோத்ரம் முற்றிற்று.  

சுபம்

No comments:

Post a Comment