Wednesday 1 January 2014

ஸ்ரீதக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (37)



792.   குநடீ

தன் பக்தனுடைய குற்றங்களையும்  பாபங்களையும் அழித்துக் களைந்து அவனை ஆட்கொண்டருள்பவள்.

793.   குரரீ

தன் பக்தனுக்கு  மதுரமான  கண்ட  நாதத்தை அதாவது கந்தர்வனைப்போல் கானம்  செய்யும்  ஸக்தியை வழங்கி  அருளும்  க்ருபாநிதி.

794.   குத்ரா

தன்னை  உபாஸிக்கும்  பக்தன்  தன்னை  சக்ர  மேருவில் ஆவாஹனம்  செய்து விதிமுறைப்படி ஆராதிக்குங்கால்,  அந்த  மஹாமேரு  பர்வதத்தைத்  தாங்கும் கூர்மபீட  ஸக்திதேவதைகளாக  ஆவீர்பவித்து  அவன்  செய்யும்  பீட  பூஜையை ஏற்று  அவனை  ஆட்கொண்டருளும்  ஜகன்மாதா.

795.   குரங்கீ

தன்  பக்தன்  இந்த்ரியங்களின் ஓட்டங்களுக்கு  இரையாவதைப் பார்த்து இரங்கி  அவன்  அவ்வண்ணம் அவற்றின்  மூலம்  அழிவதைத்  தவிர்க்க  ஒரு மான்  ஓடுவதைப்போல்  ஓடோடியும்  வந்து  அவனைத்  தடுத்தாட்கொள்ளும் கருணாமூர்த்தி.

796.   குடஜாஸ்ரயா

மிகச்  சிறந்த  ஸாக்தோபாஸகரும்  ஸக்தி ஸூத்ரங்கள்  என்ற  ஸக்தி வழிபாட்டு  நூலை இயற்றி  அருளியுள்ளவரும்,  தேவீ பக்த  ஸிகாமணியும், மஹோந்நத  ப்ரஹ்மருஷியும், மிக ப்ரதானமான  வேத  த்ரஷ்டாவும் ஆன அகஸ்திய  மஹாமுனிவரால்  விதிமுறைப்படி  ஸாங்கோபாங்கமாக ஆராதிக்கப்  படுபவள்.

797.   கும்பீனஸவிபூஷா

குண்டலினி  ஸக்தியின் சின்னமான  ஸர்ப்பங்களை  உடலைச்  சுற்றி யஜ்ஞோபவீதமாகவும், கழுத்திலும், கரங்களிலும், பூஷணங்களாகவும்  தரித்து மகிழ்பவள்.

798.   கும்பீனஸவதோத்யதா

தன்  பக்தனைக்  கெடுக்கும்  இந்த்ரியங்களாகிய  கொடிய  விஷ ஸர்ப்பங்களை  அழித்து அருளும்  க்ருபாநிதி.

799.   கும்பகர்ணமனோல்லாஸா

யோகாப்யாஸ  விதி  முறைப்படி  ப்ராணாயாமம்  செய்யுங்கால்  தன்   மூல மந்த்ரத்தை  ப்ரேம  த்யானத்துடன்  ஜபிக்கும்  தன்  பக் தனின் மனதில் உல்லாஸமாக  விளையாடி  மகிழ்பவள்.

800.   குலசூடாமணி:

பஸூ,  வீரம்,  குலம்  என்று  முப்பெரும்  பிரிவுகளாக வகுக்கப்பட்டிருக்கும்  ஸாக்த  ஸாதகர்களில்,  "ப்ரபலா  உத்தரோத்தரம் "  என்ற  நியதிப்படி,  பஸூ பாவத்தில் உள்ள  மந்த  விவேக  ஸாதகர்களான  பஸூக்களைக்  காட்டிலும், வீரம்  பலீயஸ்,  வீரத்தைக்  காட்டிலும்  குல  ஸாதகர்கள்  ஸ்ரேஷ்டர்கள், என்ற  ரீதியில்,  குல  ஸாதகர்களுக்கு  "சூடாமணி"   என்ற  ஸ்ரேஷ்டமான ஸிரஸ்  ஆபரணம்  போல்  அவர்கள்  குழாம்  "தங்கள்  ஸிரோமணி"  என்ற முறையில்  உத்சவம்  முதலியன  கொண்டாடி வழி படப்படும்  தேவதா ரத்னம்.      

801.   குலா

ஜீவன்,  ப்ரக்ருதி, திக்கு, காலம், ப்ருதிவி,  அப்பு, தேஜஸ், வாயு,  ஆகாசம், ஆகிய ஒன்பது தத்துவங்களின்  கூட்டு  குலம்   என்பதாகும்.  இந்த ஒன்பது தத்துவங்களின்  இயக்கமே   பராஸக்தியின்  இயக்கத்தின் நிதர்ஸன ஸ்வரூபமாம் என்பது  சாக்தர்களின் ஸித்தாந்தமாம்.   அங்ஙனமாக இந்த ஒன்பது தத்துவங்கள்  ஸக்திமயமாக  இயங்கி  அவற்றின்  பரிணாமமாக  உள்ள  ஜீவ  சமூஹத்தை சேர்ந்த தன் அன்பான பக்தர்களை  ஆட்கொண்டு அருளும் ஜகன்மாதா.

802.   குலாலக்ருஹகன்யா

ஸ்ரேஷ்டமான ஒரு  குலத்தை அநுக்ரஹிக்க,  அந்த வம்சத்தில் உத்தம லக்ஷணங்கள் உள்ள  ஒரு பெண்ணாக அவதரித்து, அந்த குழந்தையை அலங்கரித்து அருளும் அபார  கருணாமூர்த்தி.

803.   குல சூடாமணிப்ரியா

ஒரு உத்தம குலத்தில் பிறந்து உத்தமனாக வாழ்ந்து  தன்னை ப்ரேமையுடன் உபாசிக்கும் ஒரு குல ஸ்ரேஷ்டனாக  தன் பக்தனை  ஆட்கொண்டு  அருளும் ஆனந்த மூர்த்தி.

804.   குலபூஜ்யா

குலாசாரப்படி வாழும் வித்யோபாஸகர்கள், வித்யோபாசன  காரியங்களை எக்காரணம் கொண்டும் தவரவிடாமல்  ப்ரேமையுடன் செய்துக்கொண்டே ப்ரபஞ்சம் முழுமையும் இஷ்ட தேவதா மயமாகவே பார்த்து,  மெய்மறந்து ஆனந்திக்கும் குல  ஸாதகர்களை  ஆட்கொண்டு  அவர்களுக்கு ஜீவன் முக்தி அளித்தருளும்  ஜகதீஸ்வரி.

805.   குலாராத்யா

ஸக்தி  தத்துவத்தின் மஹிமையை  நன்கு  உணர்ந்து,  பூஜா,  ஹோம, தர்பண, த்யான,  ஜபங்கள்,  யோகினி சந்தர்பணை களும் செய்துகொண்டு,  த்ருட பக்தர்களாக ஒழுகும் குல ஸாதகர்களை  ஆட்கொண்டு  அருளும் ஜகன்மங்கள காரிணீ.

806.   குலபூஜாபராயணா

பொதுவாக தன் பக்தர்கள்  யாவரையும் ஆதரிப்பவளாயினும்  சிறப்பு முறைகளில் தன்னை  ஆராதிப்பவர்களை , குறிப்பாக  குல ஸாதகர்களின் ஆராதன க்ரமங்களை  மிகுந்த திருப்தியுடன் ஏற்று, அவர்களை அன்புடன் ஆட்கொண்டு அவர்கள் சீக்கிரமே  எளிதில் ஜீவன் முக்தி அடைந்து உய்ய அநுக்ரஹிக்கும்  கருணைக்கடல்.  

807.   குண்டபுஷ்பப்ரஸன்னாஸ்யா

மாத்ருகைகளாலான   பீஜங்கள்  கோத்த  மந்த்ரங்களின் ஒலிகளின் வீர்யமான ஓட்டத்துடன்  ஹோம  குண்டத்தில்  தன் பக்தனால்  ஆஹுதி செய்யப்பட்ட பொருள்களை  அப்படியே  தான்  அக்னி ஸ்வரூபிணீயாக  இருந்துகொண்டு ஏற்று  அவனை  ஆட்கொண்டருளும்  மந்த்ரமூர்த்தி.

808.   குண்டகோலோத்பவாத்மிகா

 தம் தம் பூர்வகர்மாக்களின் விளைவுகளை  கரைத்துக் கொள்வதற்காக  இங்கே  ஜன்மம்  எடுத்து  வாழும் ஜீவர்கள்  சொல்லொணாத  துயரமும், வேதனையும் அநுபவித்து வரும் இந்த ஸந்நிவேஸத்தில்,  தன் குழந்தைகளாகிய  அவர்களுடைய  துயர்  துடைக்க,  அவர்களுடைய புத்தியிலும்  மனதிலும் தன்  வித்யுத்  ஸக்தியை  பாயச் செய்து அவர்களது  மாயையை அகற்றி  அவர்களுக்கு  ஜ்ஞானமும்  ஆநந்தமும்  ஸாந்தியும் வழங்கி  அவர்களை  ஆட்கொண்டருளும்  அபார  கருணைக்கடல்.


(அடுத்த பதிவில் தொடரும்)    

No comments:

Post a Comment