Friday 10 January 2014

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (44)


 955.   கௌஸல்யா

இந்த பூலோகத்தில்  மனிதன் ஈட்டுவதற்கு குறிக்கோளாகக் கொள்ளத் தக்க எல்லா உயர் பொருள்களுக்கும் மேலானதாக  மஹோந்நதமாக உள்ளது ஸ்ரீ தேவி காளிகையின் அநுக்ரஹ ப்ரஸாதாமே.  அது ஒன்றால் தான் மனிதனின் ஸம்ஸார தளையைத்  தறிக்க இயலும்.

956.   கௌஸலாக்ஷீ

தன் கடாக்ஷ மாத்திரத்திலேயே  இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தையும்  அதனில் அடங்கிய ஜீவலோகத்தையும்  பஞ்ச க்ருத்யம் செய்து நிர்வஹிக்கவல்ல ஸர்வஸக்தி மூர்த்தி.

957.   கோஸா

ஆயிரத்தெட்டு அண்டங்கள் கொண்ட இந்தப் பரந்த ப்ரபஞ்ஜம் எவளிடம் அதீனமாக அமர்ந்திருக்கிறதோ  அத்தகைய  விஸ்வாண்ட மூர்த்தி.

958.   கோமலா

இந்தப் பரந்த பிரபஞ்சத்திலேயே ஈடுஇணை யற்ற மஹோந்நதமான பேரழகி.

959.   கோலாபூரநிவாஸா

இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தில் எல்லா இடமுமே அவளுடைய இடமே ஆயினும், சில குறிப்பிட்ட ஸ்தலங்களில் அவள் விசேஷ ஸாந்நித்யம் கொள்கிறாள். கோலாபுரம் என்ற நகரத்தில் விசேஷ விருப்பத்துடன் உறைந்து அருள்கிறாள். 

960.   கோலாஸுரவிநாஸினீ

முன்னொரு காலத்தில்  கோலாஸூரன் என்ற ராக்ஷஸனை அழித்து அருளியவள்.

961.   கோடிரூபா

துஷ்ட நிக்ரஹ ஸிஷ்ட பரிபாலனம் செய்து தர்ம ஸம்ஸ்தாபனம் செய்வதற்காக கோடிக்கணக்கான உருவங்கள் தாங்கி பல படியான செயல்கள் புரிந்து உலக மக்களை காத்தருள்பவள்.  மேலும் வித்யராஜ்ஞீ மஹாமந்த்ரத்தில் அடங்கா ரஸகோடி, க்ரியாகோடி, ஜ்ஞானகோடி, ஆனந்தக்கோடி ஆகிய நான்கு தளங்களில் தன்  வ்யக்தியை  விநியோகம் செய்து அவற்றின் உருவத்திலேயே  தன்னை தோற்றுவித்து  அருள்பவள். 

962.   கோடிரதா

வித்யோபாஸகர்களின்  ஸஹஸ்ராரத்தின் மத்தியில் ப்ரதிஷ்டையாகி இருக்கும் மாத்ருகா மணிபீடமாகிய த்ரிகோணத்தின் மூன்று கோணங்களில் அமர்ந்துள்ள  "அ"  "க"  "த" ஆகிய மூன்று முனைப்பான மாத்ருகைகளில் விசேஷ ஸாந்நித்யம் கொண்டு அங்கு வரும் உபாஸகனாகிய யோகியை ஆட்கொண்டு அவனுக்கு மந்த்ர ஸித்தியும் ஸமாதி நிலையும் ஜீவன் முக்தியும் அருளும் மந்த்ர மூர்த்தி. 

வித்யாராஜ்ஞீயின் சதுஷ்கோடிகளாகிய நான்கு தளங்களில் விசேஷ சாந்நித்யம்  கொண்டு உறைபவள்.

தன் பக்தனின் எல்லா நிலைகள், நடத்தைகள், செயல்கள் எல்லாவற்றிலும் முனைப்பான அம்ஸங்களிலேயே விசேஷ ஸாந்நித்யம் கொண்டு அவர்களை ஆட்கொண்டு அருள்பவள்.

963.   க்ரோதினீ

ரௌத்ராஸத்தின் அங்கம் கோபம்.  ரௌத்ரம் ருத்ரனை அதிதேவதையாகக் கொண்டது. உலக மக்கள் நலனுக்காக பயன்படுவதால் தக்க தருணத்தில் அதனை ப்ரயோகிக்கத்  தேவையான ஜீவர்களின் மீது  ப்ரயோகிக்கும் ஸ்வாதீனம் பூரணமாக அமைந்த ருத்ர ஸக்தி தேவதையாதலால் சாக்ஷாத்  ருத்ரனாலேயே ஆராதிக்கப்படும் ரஸ தேவதையான பராஸக்திமூர்த்தி.   

964.   க்ரோதரூபிணீ

த்ரிபுராசுரன், கஜமுகாசுரன், மதுகைடபர்கள், பண்டாசுரன், சண்ட முண்டர்கள்,  ஸூரபத்மாசுரன், ஹிரண்யகஸிபு, ராவணன் முதலிய ராக்ஷசர்களின் ஸம்ஹாரத்திற்கு ஆதாரமாக இருந்து பரமாத்மாவின் கோபமே அந்தக் கோபத்தின் வ்யக்த மூர்த்தியாக இயங்கும் பரதேவதை தேவீ தக்ஷினகாளிகை.

965.   கேகா

மயில்  ஸந்தோஷமான மனோநிலையில் அதாவது மழை வரப்போகும் வேளையில் செய்யும் த்வனி  "கேகா" எனப்படும்.  பர்ஜன்யராஜனின் வரப்ரசாதம்  மழை.   "காதம்பினி" எனப்படும் மேகஜாலமே தக்ஷினகாளிகையின் அபர ஸ்வரூபம்.  மயிலின் ஸந்தோஷ த்வனியாகிய  "கேகாவின்" வடிவினள் காளிகை. அதாவது உலகுக்கு அம்ருத ப்ராயமான மழை கிடைக்கப் போவதை அறிந்து மயில் செய்யும் கேகா என்ற நாதத்தில் உறைந் திருப்பவள்.
    
966.   கோகிலா

பசு பக்ஷி ம்ருகங்களுக்குள் மிக்க இனிய நாதமுள்ள குரல் படைத்தது குயில் என்ற கரிய பக்ஷி. தாய்மையும் கருணையுமே உருவான காளிகை தன் மிக்க மதுர நாதம் கொண்ட இனிய குரலால் தன் குழந்தைகளாகிய ஜீவர்களை ஆதரித்து ஊக்குவித்து தேற்றுகிறாள்.  அதனால் அவளுக்கு கோகிலா என்று பெயர். மேலும் சங்கீத கலைக்கு அதி தேவதையாகிய காலிகைக்கு கோகிலா என்பது சிறப்புப் பெயர்.

திருமணஞ்சேரி என்ற க்ஷேத்ரத்தில் குடிகொண்டு எழுந்தருளி  இருக்கும் தேவியின் திரு நாமம் "கோகிலாம்பாள்"  என்ற விஷயம்  கவனிக்கத்தக்கது. 

967.   கோடி

எந்த விஷயத்திலும் அதனுடைய மிகச் சிறப்பான அம்ஸம் எதுவோ அதெல்லாம் காளிகையின் சிறப்பான ஸாந்நித்யம் கொண்டதாம்.  குறிப்பாக தனது இடது மேற் கரத்தில் தான் தரிக்கும் பத்ராத்மாஜன் என்ற பட்டாக்கத்தியின் மிகச் சிறப்பான அம்ஸமாகிய அதன் கூறிய முனைப்பிலேயே தான் விசேஷ சாந்நித்யம் கொண்டு அதனை வழிபடும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு புத்தி கூர்மையும் தெள்ளிய ஞானமும் அருள்பவள்.

ஷிப்ராநதி தீரத்தில் ப்ரசித்தமாக உள்ள மஹாகால ஷேத்ரத்திற்கு "கோடி தீர்த்தம்" என்று சிறப்புப் பெயர்.   அதனில் ஸ்நாநம் செய்து மஹாகாலரையும் மஹாகாளியையும் தரிசித்து வழிபடுபவர்கள் அஸ்வமேத யாகம் செய்த பலன் பெறுவர் என்று மஹாபாரதம் வன பர்வம் கூறுகிறது. 

968.   கோடிமந்த்ரபராயணா 

தன் பக்தர்கள் தக்க ஆச்சார்யரிடமிருந்து கலாவதி பூர்ண தீக்ஷையும் கோடி ந்யாஸமும் ஸ்வீகரித்து ஹோமாதி யஜ்ஞங்களும் விதிமுறைப்படி நிகழ்த்தி கோடிக்கணக்கான ஸங்க்யையாக மூல மந்த்ர ஜப ஆவ்விருத்தி  செய்து தனக்கு அர்ப்பணித்து அனன்யமாக ஸரணமடைய  அவர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ப்ரஹ்ம ஞானமும்  ஆனந்தமும், ஜீவன் முக்தியும் அளித்தருளும் காருண்ய மூர்த்தி. 

969.   கோட்யனந்தமந்தரயுதா

தன் ப்ராணநாயகராகிய  ஸ்ரீ மஹாகாலராலும் தன் வித்யா க்ரமத்திற்கு ருஷீஸ்வரராகிய ஸ்ரீ கால பைரவராலும் இன்னும் அவர்களைப் போன்ற இதர மஹாதிகாரிகளாலும்  தன் விஷயமாக  எண்ணற்ற பல கோடிக்கணக்கான மந்த்ரங்கள் அமைக்கப்பட்டு, அந்த மந்த்ரங்களின் விக்ரஹமயமாகவே ப்ரகாசிக்கும் மஹாவித்யாமூர்த்தி.  

970.   க்ரைம்ரூபா

வித்யாராஜ்ஞீயின் ப்ரதம பீஜமாகவும் ரஸஜ்ஞா என்ற சிறப்புப் பெயர் பெற்றதாகவும் உள்ள 'ஈ' காரத்தின் ஸ்தானத்தில் காமகோடி எனப்படும் 'ஐ' கார மாத்ருகையை வைத்து அங்ஙனமாக 'க்ரைம் '  காரமாக உருவாகும் பீஜமே தன் வ்யக்த ஸ்வரூபமாகக் கொண்டு அதனில் தானாகவே ஸாந்நித்யம் கொண்டு அதனை ப்ரேம த்யானத்துடன் ஜபிக்கும்  பக்தர்களை  ஆட்கொண்டு அவர்களுக்கு ஸாக்தானந்தமும் ஸமாதி நிலையும் ஆத்ம ஜ்ஞானமும்  சீக்கிரமே மந்த்ர ஸித்தியும் ஜீவன் முக்தியும் அளித்து மகிழும் ஆனந்த மூர்த்தி. 

971.   கேரலாஸ்ரயா

எண்ணிக்கைகளை  மாத்ருகா வர்ணங்களால் குறித்து கனனம் வ்யவஹரிக்கும்  ஒரு ஸம்ப்ரதாய பத்ததி புராண காலத்திலிருந்து பாரத தேஸத்தில் பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. இங்ஙனமாக கர்க்க முனிவராலும், வரசி ருஷி யினாலும் உபதேசிக்கப்பட்ட சங்க்யாமான பத்ததியிலும்,  முக்கியமாக கேரள தேசத்தில் அதனை அநுஸரித்து கணித ஸாஸ்த்ரத்தை  அனுஷ்டிக்கும் முறைகளிலும் மிக்க மகிழ்ச்சி கொண்ட ஸாஸ்த்ரமய மூர்த்தி.

972.   கேரலாசாரநிபுணா

கேரள நாட்டில் வாழும் அதி தீவிரமான ஸாக்த வித்யோபாஸகர்களால் அனுஷ்டிக்கப்படும் தன் ஆராதன க்ரமங்களின் விதிமுறைகளில் பெரிதும் மகிழ்ச்சி கொண்டு அவர்களை மனமார  ஆட்கொண்டு அருளும் கருணாமூர்த்தி.

973.   கேரலேந்த்ரக்ருஹஸ்திதா

அதி தீவிரமான வித்யோபாஸகர்கள்  ஏராளமாகக் குழுமியுள்ள கேரள தேசத்து அரசர்கள் மிக முனைப்பாக தன்னை ஆராதித்து வழிபடுவதைக் கண்டு மிகக் களிப்படைந்து அவர்கள் தன்னை ஸாஸ்வாதமாகவே தம் அரண்மனைகளில் ப்ரதிஷ்டை செய்ய, அதனை மிக்க மகிழ்ச்சியாக  ஏற்று  அங்கேயே நிரந்தரமாக நிலைத்த ஸாந்நித்யம் கொண்டு அவர்களையும் அவர்களது ப்ரஜைகளையும் ஆட்கொண்டு அருளும் ஆனந்த மூர்த்தி.

 974.   கேதாராஸ்ரமஸம்ஸ்தா

இந்தப் பூவுலகில்  பூகைலாஸம் என்னும்படியாக விளங்கும்  மஹாபுனிதமான ஸிவ ஸ்தலங்களில் ஒன்றாகிய கேதார ஷேத்திரத்தில்  மஹா தபஸ்விகளாக வாழும் ஸிவ பக்த சிகாமணிகளின் ஆஸ்ரமங்களில் மிக்க மகிழ்ச்சி யாகத் தானே  சென்று அங்கேயே நித்ய வாசம் செய்து மகிழ்பவள்.   

975.   கேதாரேஸ்வரபூஜிதா

இமயமலை மீது அமர்ந்துள்ள மஹாபுண்யமான  பர்வத சிகரம் ஸ்ரீ கேதார பர்வதம். அதனில் கோவில் கொண்டு எழுந்தருளியுள்ள கேதாரேஸ்வரர்  ஒரு ஸ்வயம்பு  லிங்க மூர்த்தியாக அமர்ந்திருக்கிறார்.  ப்ரதி தினமும் தன் பரிவாரங்களாகிய பூத கணங்கள் புடை ஸூழ ஸ்ரீ கேதாரேஸ்வரர் உன்மக்த ருத்ர  தாண்டவம் செய்வதாக  மரபு.  அவர்  தன் பரிவார தேவதைகளுடன் தேவி காளிகையை வெகு விஸ்தாரமாக  ஆராதித்து வழிபடுகிறார்.  இந்த விபரம் ஸ்ரீ ஸ்கந்த புராணம் கேதார காண்டத்திலும், காஸி காண்டத்திலும் விளக்கப்பட்திருக்கிறது.    

976.   க்ரோதரூபா

தானே ரௌத்ர ரஸத்தின் அதி தேவதை ஆனதால், வேத வாக்கியத்தின் படி தக்ஷினகாளிகை பரமசிவனின் கோபத்தின் வ்யக்த ஸக்தி மூர்த்தியாகிறாள்.  மேலும் அஜைகபாத், அஹிர்ப்புத்ன்யர், விரூபாக்ஷர், ஸூரேஸ்வரர், ஜயந்த்ர், பஹூரூபர், த்ர்யக்ஷகர், அபராஜிதர், வைவஸ்வதர்,  ஸாவித்திரர், ஹரர் என்ற பதினோரு ருத்ரர்களாக ஆவிர்பவித்து அவர்கள் செய்யும் செயல்களுக்கு சக்தி அளிப்பவள்.     

977.   க்ரோதபதா

நமஸ்தே ருத்ர மன்யவே என்று தொடங்கும் ருத்திராத்தியாயத்தில் அடங்கிய பதினொறு அநுவாகங்கள் மூலமாக ஸூஸிக்கப்பட்டுள்ள பதினொறு ருத்ர மூர்த்திகளின் ஸ்வரூபத்தால் ஒருவாறு உணரத்தக்க ரௌத்ரமூர்த்தி. 

978.   க்ரோதமாதா

ஆர்த்ரா நக்ஷத்திரத்தின் அதிதேவதையாகிய ருத்ரனின் ரௌத்ர ஸக்தி மூர்த்தி.

979.   கௌஸிகீ

வ்ரதங்களில் பரமோத் க்ருஷ்டமான பாதிவ்ரத்ய வ்ரத ஸீல பூர்ண மனோலீன ப்ரதிஷ்டிதையான  ஸத்யவதீ  ருசீக மஹர்ஷியை மணந்தது, உலகத்தவருக்கு பதிவ்ரதத்தின் மஹோந் நதமான பெருமையை நிதர்சனமாக எடுத்துக் காட்டி, கேவலம் பதி ஸுஸ்ருஷையால் மட்டும் பூத உடலுடனேயே ஸ்வர்க்கம் சென்றடைந்து லோகோபகாரமான கௌசிகீ என்ற மஹா புண்ய நதியாக ஹிமாலயத்தில் ஆவிர்பவித்து உலக மக்களை பாவனமாக்கிக் கொண்டிருக்கும் பதிவ்ரதா ஸிரோமணி.



(அடுத்த பதிவில் தொடரும்.)

No comments:

Post a Comment