Monday 2 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (19)



367.   கமடாஸ ஸம்சேவ்யா

கூர்ம பீடத்தின் சக்தி தானே ஆவதால் அந்த கூர்மாஸன  சக்தி தேவதைகளை ஆராதிக்கும் போது தன்னுடைய வ்யக்த மூர்த்தியை ஆராதிக்கும் தன்மயத்வ பாவத்துடனேயே பூஜைகள் செய்யும்  தன் பக்தர்களை ஆதரித்து, அவர்கள் பால் சுரக்கும் அன்புப் பெருக்கால் அவர்களைத் தன் ப்ரதிபிம்பமாகவே கண்டு அவர்களையே ஸாக்ஷாத் கூர்மாஸன பீட சக்தி தேவதைகளாகவே  பரிணமிக்கச் செய்து அவர்களை ஆட்கொண்டு அருளும் ஆனந்த மூர்த்தி.

368.   கமடீ

தன் வித்யோபாசகர்களின் ஸஹஸ்ரார கமலத்தின் நாள ஆதாரத்திலும் எல்லாத் தளங்களிலும் விசேஷமாக பிந்து ஸ்தானமாகிய கர்ணிகையிலும்  மிக்க மகிழ்ச்சியுடன் உறைந்து  கொண்டு  அங்கு குண்டலினி சக்தியின் உதவியால் வரும் பாக்கியசாலிகளான அவர்களை ஆதரித்து ஆட்கொண்டு அருளும் ஹம்ஸாநந்த குருமூர்த்தி.

369.   கர்ம்மதத்பரா

ஜீவர்கள் தம் மனத்தாலும் ஸரீரத்தாலும் செய்யும் செயல்களின் விளைவாகவே நன்மையானவையோ தீமையானவையோ ஆன பலன்களைத் தவறாமல் அடைந்து அனுபவிக்க வேண்டியது அவசியம்.  ஆதலால் தன் பக்தர்கள் ப்ரக்ருதியின் இயக்கத்தால் செய்யும் எந்தச் செயல்களிலும் தானாகவே ஊடுருவிப் பாய்ந்து அவர்கள் அந்தக் கர்மங்களில் ஒட்டாமல் அவர்கள் அவற்றை திட்டமிட்டபடியே செய்து அவற்றை தனக்கே அர்ப்பணம் செவய்வதை மனமாற ஏற்று அவர்களுக்கு ஜ்ஞானமும் ஸாந்தியும் முக்தியும் அளித்து அருளும் ஜகன்மாதா.

370.   கருணா

தயையே உருவானவள் ஆதலால் தன் பக்தர்கள் படும் பல்வகை துயரங்களைக் கண்டு இரக்கம் கொண்டு அவர்களை கை தூக்கி ஆட்கொண்டு அருள்பவள்.

371.   கரகாந்தா

தன் பக்தர்களின் புத்தியில் தன் க்ரியா சக்தியை ப்ரஸரிக்கச் செய்து, அவர்களை த்யானம், நிஷ்டை, தாரணை, மந்திர ஜபம் பூஜை, ஹோமம், தர்ப்பணம் முதலிய கர்ம கார்ய திட்டங்களில் ஏவி, முழு மனத்துடன் செயல்பட வைத்து அவர்கள் பரிபூரணமாக லயித்து இடையறாது ஸார்த்தகமாக இயங்குவதைக் கண்டு மகிழ்ந்து அந்த ஆனந்தத்தில் பூரித்து அவர்களுடைய முயற்சிகளை ஆதரித்து அவர்களை ஆட்கொண்டு அருள்பவள்.

372.   கருணா

தன் பக்தர்கள் ப்ரேமையுடன் அனன்ய சரணாகதி பாவத்துடன் தன்னை ஆராதித்து தம் உடல் பொருள் ஆவி செயல்கள் அனைத்தையும் தனக்கே அர்ப்பணம் செய்யுங்கால் அவர்கள் மனதில் உள்ள எல்லா கோரிக்கை களையும் உத்தேசங்களையும் பூரணமாக நிறைவேற்றி அவர்களை மகிழ்வித்து அருள்பவள்.

373.   கரவந்திதா 

வெறும் பேச்சுடன் நில்லாமல் ஸாரீரக மானஸீகமான கர்மாக்களை சரிவர அனுஷ்டித்து தனக்கு த்ரிகரண சுத்தியுடன் அர்ப்பணம் செய்து வழிபடும் தன் பக்தர்களின் புத்தியில் க்ரியா சக்தியை ப்ரஸரிக்கச் செய்து அவர்களுடைய செயல்களெல்லாம் ஸார்த்தகமாகப்பூர்த்தி அடைந்து பூரண பலன் அளிக்க அருளும் தயாநிதி.

374.   கடோரா

சரீர அங்கங்களிலும் மனதின் செயல்பாடுகளிலும் சக்தியிலும் பக்தர்களுக்கு அருளும் கருணா கடாக்ஷ அநுக்ரஹத்திலும் எவ்விடத்திலும் எஞ்ஞான்றும் பரிபூரணமான ஜகன்மாதா.

375.   கரமாலா

சரீர க்ரியைகளின் பூரண சக்தியின் சின்னமாக வெட்டப்பட்ட கரங்களால் ஆன மேகலையை இடுப்பிலும் மானஸ க்ரியைகளின் பூரண சக்தியின் சின்னமாக வெட்டப்பட்ட ஸிரஸ்ஸுகளாலான மாலையை கண்டத்திலும் தரித்து, இவற்றின் மூலமாக தன்னுடைய க்ரியா சக்தியின் அநுக்ரஹ வர்ஷத்தைத் தன் பக்தர்களின் மீது பொழிந்து மகிழும் கருணாமூர்த்தி.

376.   கடோர குசதாரிணீ

அளவு கடந்து பரவி, விரவி இருக்கும் இந்த மா பெரும் ப்ரபஞ்சத்தில் வாழை அடி வாழை என வாழ்ந்து வரும் ஸகலமான ஜீவர்களுக்கும் தான் கருணை வடிவான ஜகன்மாதா ஆதலால், பக்தர்களாகிய தன் குழந்தைகள் மீது, மேரு சிகரங்களை யொத்த  தன்னுடைய அக்ஷயமான  பரிபூர்ண  ஸ்தனங்களில் இருந்து நிரந்தரமாகவும் அபரிதமாகவும் சுரந்துகொண்டே இருக்கும்  அம்ருத் ரசத்தை பொழிந்து அவர்களை உய்வித்து அருளும் க்ருபைக்கடல் .

377.   கபர்த்தினீ

ஒரு மாபெரும் க்ஹனமான வனம் போன்ற ஜடாபாரம் கொண்ட பரமசிவனை தன்னுடைய மாயையால் வசப்படுத்தி அதன் மூலம் "சக்தி - சிவம்" என்ற மகத்தான தத்துவத்தை " மந்திர தர்மி - தந்திர தர்மி " ஆகிய சாக்த உபாஸன ஸாதன ப்ரயோக க்ரமத்தில் நிர்த்தாரணம் செய்தருளிய பராசக்தி மூர்த்தி.

378.   கபடினீ

அஸாமான்யமான மாயாவினீ ஆதலால் எல்லையற்று விரிந்து கிடக்கும் இந்த ப்ரஹ்மாண்டமான ப்ரபஞ்சத்தில் வாழ்ந்து வரும் சகல விதமான ஜீவ ஸமூஹங்களின் பஞ்ச க்ருத்யங்களை தானே நிர்வஹித்து நடத்தும் பொறுப்பாளியாவதலால் த்ரிமூர்த்திகளும் அஷ்ட திக் பாலகர்களும் கூட எளிதில் புரிந்து கொள்ள முடியாத  கூடமான செயல் போக்குடன் ஜீவ வர்க்கங்கள் யாவர்க்கும் அவரவர்களுடைய கர்ம பரிபாகத்துக்கு தக்கபடி ஷேமலாபங்களையும் ஸர்வமங்களங்களையும் பொழிந்து மகிழ்வித்தருளும் நிர்வாஹா அதிகாரிணீ.

379.   கடினீ

ஆப்ரஹ்ம க்ருமிகீடாந்தம் சகல ஜீவ வர்க்கங்களின் யோக ஷேமங்களையும் அஸாமான்யமான தன் த்ருட ஸ்ம்ருதியில் இருத்திக் கொண்டு அவரவர்களுக்கு தேவையான சௌகர்யங்களை  ஏற்படுத்திக் கொடுத்துக்கொண்டே அவர்களை பொறுப்புடன் ரக்ஷிப்பதில் மிக உறுதிப்பாடுடன் செயல்படும் ஜகன்மாதா.

380.   கங்கபூஷணா

மனதையும் புலன்களையும் அடக்கி சித்தத்தை  பரப்ரம்ஹத்தின்பால் வலிய நிறுத்தி யோக நிஷ்டையில் ஆழ்ந்து ப்ரஹ்மானந்த லயத்திநூடே நிர்விகல்பஸமாதியில் நின்று நிரந்தர ஸுகம் எய்தி எல்லை கடந்து மகிழ்ச்சிபெரும் யோகியர்களின் நிரதிஸயானந்த நிர்க்குண த்யானத்தின் குறிக்கோளான பரப்ரஹ்ம பராசக்தி மூர்த்தி.

381.   கரபோரு:

பூர்ண புஷ்டி அடைந்த உத்தம லக்ஷண சரீர அங்கங்கள் படைத்த அஸாமான்ய லாவண்யத்துடன் ஜ்வலிக்கும் உத்தம ஸூந்த்ராங்கனை. அதாவது அங்க சௌந்தர்யம் என்ற ஸாமுத்ரிக லக்ஷணாம்சங்கள் பூர்ணமாக அமைந்து ஆதர்ஸஸ்தித ப்ரஞ்ஜரும் யோகியர்களின் தலைவருமான பரமசிவனையே தன் அங்க சௌஷ்டவ மாயையால் மயக்க வல்ல ப்ரேம ஸுந்தரி.

382.   கடினதா 

லோகோபகாரமான கர்மங்களை க்ரமப்படி அநுஷ்டித்து ஜீவர்களுக்கு உபகரிக்கும் பெரும் பொறுப்பை தானாகவே மேற்கொண்டு ஏற்று சிறப்புற நிர்வஹிப்பதில் உள்ள தன் உறுதிப்பாட்டை தன் பக்தர்களுக்கு கொடுத்து அவர்களையும் உத்தம பரோபகாரிகளாக்கும் பரம த்யாகமூர்த்தி.

383.   கரபா

தனது இடது மேற்கரத்தில் ஏந்தி நிற்கும் பத்ராத்மாஜன் என்ற கட்கம் (அபரோஷ ஞானத்தின் சின்னம்)  இடது கீழ்க்கரத்தில் க்ரஹித்திருக்கும் முண்டம், (சாதகனின் சுத்த சைதன்யம்) வலது மேற்கரத்தில் தாங்கும் அபய முத்திரை (ஜீவர்களை ரக்ஷித்தருளும் ஸ்திதி  ஸ்தாபனத்தின் சின்னம்)வலது கீழ்க்கரத்தில் தாங்கும் வரத முத்திரை, (ஜீவ அனுக்ரஹத்தின் சின்னம்) ஆகியவற்றை தன் பக்தர்களின் த்யானாவஸரத்தில் அவர்களுடைய புத்தியில் நிலைத்து நிற்குமாறு நிதர்ஸனமாக ஸூஸித்துஅருளும் பரம கருணா மூர்த்தி.

384.   கரபாலயா

த்யாகம், யோகம், ஆத்மஜ்ஞானம், ஜீவன் முக்தி ஆகிய உத்தம பலன்களைத் தரவல்ல "ரஸஜ்ஞா" என்ற க்ரீம் கார ஒலி ஓட்டத்திலும் பஞ்ச க்ருத்யங்களின் சின்னமாகத் தான் நிரந்தரமாகச் செய்யும் ஆனந்த தாண்டவத்தை தன் திருப் பாதங்களிலும், சவங்களின் கரங்களாலான மேகலையிலும், தன் நான்கு கரங்களில் தரிக்கும் கட்கம், முண்டம், அபயம், வரதம் ஆகியவற்றிலும் மாத்ருகைகளின் சின்னமாகத் தன் கழுத்தில் தரிக்கும் முண்டமாலையிலும், சப்த ப்ரஹ்மத்தின் சின்னமாக தொங்கி அலைந்து கொண்டே இருக்கும் தன் நாக்கிலும், நாத ப்ரஹ்மத்தின் சின்னமான தன் இரு காதுகளிலும், இச்சா க்ரியா ஜ்ஞான சக்திகளின் சின்னமான தன் மூன்று கண்களின் ஜ்யோதிஸ்களிலும், தான் நிர்குண ஸ்வரூபிணீ , கட்டுப்பாடுகள் அற்றவள் என்ற மஹத்தான தத்துவங்களின் சின்னமாகப் பரந்து விரிந்து கட்டுகள் அற்று வீசிச் சுழன்று தொங்கும் கேச பாரத்திலும், தானாகவே நிலையாகத்தங்கி அதன் மூலம் தன் உண்மையான தன்மைகளைத் தெளிவாக ஸூஸித்து அவர்களுக்குத் தன் அபரிச்சின்ன அபரிமிதமான விஸ்வரூபத்தை உணர்வித்து அருளும் விஸ்வமூர்த்தி.

385.   கல்பாக்ஷாமயீ

மிக இனிமையான தன் பேச்சுக்களால் தன் பக்தர்களுக்கு அளவில்லாக் களிப்பூட்டுபவள். மேலும் தன் பக்தர்களின் மதுரமான  பேச்சுக்களில் தான் உறைபவள்.

386.   கல்பா

இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தில் சேதனா சேதனமாகவும், ஜங்கமா ஜங்கமமாகவும் உள்ள எல்லா ஜீவ ஜந்து, வஸ்து ஜால வர்க்கங்களினுடைய ஸ்ருஷ்டி, ஸ்திதி முதலான பஞ்ச க்ருத்யங்களையும் தான் ஒருத்தியாகவே நிர்வஹித்து நடத்தி, இங்கனம் விஸ்வ பரண கார்யம் முழுமையும் ஸர்வ ஸ்வாதந்த்ரியாத்துடன் பராமரித்து மகிழும் ஜகன்மாதா.

387.   கல்பனா

பலதரப்பட்ட ஜீவன்கள் பலபடியாக விரவியிருக்கும் இந்த சராசர ப்ரபஞ்சத்தில் ஜீவிக்கும் எல்லா ஜந்துக்களினுடைய செயல்பாடுகளின்  எல்லா நடப்புகளின் நிகழ் வண்ணங்களும் ஸார்தகமாகுமாறு தானாகவே திட்டப்படுத்தி அவற்றின் செய்முறைகளை தானே கண்காணித்து எல்லா செயல்களும் நற்பயனுள்ளவைகளாக நடக்க ஏற்பாடுகள் செய்து மகிழும் உத்தம காரிய நிர்வாஹி, மேலும் செயல்கள் சாரீரகமாகவும் மானஸிகமாகவும் அமையுமாதலால் ஜீவர்களுடைய சிந்தனம் ஸங்கல்பம் தாரணை நிஷ்டை ஜபம் முதலிய காரியங்களும் செவ்வையாக நிகழ அருள்பவள்.  

388.   கல்பதாயினீ

இந்த மாபெரும் ப்ரபஞ்சத்தின் செயல் பாடுகளின் போக்கு ஓயாமல் நிகழ்ந்து கொண்டே இருத்தலால், அதனில் தொன்று தொட்டு வாழ்ந்து வரும் ஜீவர்களின் செயற்போக்கில், காலம் வேளை பருவம் செயல்களின் திட்டம் ஆகியவைகள் எல்லாம் அவரவர்களின் கர்ம பரிபாகத்துக்குத் தகுந்தபடியாகவும் அவர்களுடைய ஜன்ம பாரம்பர்யம் பரிணாமத்தால் வ்ருத்தியாகி வளர்ந்து முன்னேற்றம் அடையும்படியாகவும், அவர்களுக்கு காரிய ஸாமர்தியமும் கர்ம பல த்யாக பாவ ஸித்தியும் அளித்தருளும் பரமானந்தமூர்த்தி.

389.   கமலஸ்தா

ஸாதகனின் மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிபூரகம் அநாஹதம் விஸுக்தி, ஆஜ்ஞா ஸஹஸ்றாராம்  த்வாதஸாரம்  ஆகிய ஆதாரங்களில் அமர்ந்துள்ள கமலங்களில் நிரந்தரமாக ப்ரதிஷ்டியாகி, அவனுடைய த்யான யோக, ஜப யஜ்ஞாதி ஆத்மார்த்த முயற்சிகளில் பூரண வெற்றியும் ஜ்ஞான ஸித்தியும் ஜீவன் முக்தியும் தந்து அருளும் பரமாநுக்ரஹ மூர்த்தி.

390.   கலாமாலா

மனிதன் தன் புக்தி சாதுர்யத்தைப் பிரயோகித்து பல அழகிய செயல்களைச் செய்து மகிழ்கிறான், மகிழ்விக்கிறான்.  அவன் அப்படி அழகுறச் செய்யும் செயல்களே கலைகள் எனப்படும்.  அக்கலைகளைச் சீறிய முறையில் பிரயோகித்தல் மூலம் அவன் ப்ரஹ்ம ஜ்ஞானமும் ஆனந்தமும் அடைகிறான். அவற்றுள் ப்ரதானமான அறுபத்துநான்குகலைகளிக் கோத்த மாலையைத் தேவி தன் கண்டத்தில் தனக்கு உகந்த அணிகலனாக தரித்து மகிழ்கிறாள்.

391.   கமலாஸ்யா 

இந்த மாபெரும் சராசர ப்ரபஞ்சத்திலுள்ள எல்லா பொருள்களிலுமே  தேவி ஊடுருவி நிரம்பி வ்யாபித்திருக்கிறாள், ஆயினும் சிறப்பாக ஸாதகர்களின் மூலாதாராதி சக்ர ஸ்தானங்களில் அமைந்து மலர்ந்துள்ள கமலங்கலையே தனக்கு உகந்த ஸ்தலங்களாகக் கொண்டுஅவற்றிலேயே விசேஷ ஸாந்நித்யம் கொண்டு அவ்விடங்களிலேயே உபாஸகன் ஆந்தரமாகத் தன்னை ப்ரதிஷ்டை செய்து மானஸிகமாக ஆராதித்தலையே பெரிதும் விரும்புபவள்.  

392.   க்வணத்ப்ரபா

விஸ்வத்தில் வ்யாபித்துள்ள எல்லாப் பொருள்களிலும் ஜீவர்களுடைய எல்லாச் செயல்களிலும் தேவி விரவி இருக்கிறாள் ஆயினும் இனிய நாதத்திலும் சிறப்பாக மந்த்ரோச் சாரணத்தின்  சக்தி மத்தான ஒலி ஓட்டத்திலும் பூரண சாந்நித்யம் கொண்டு இன்னிசையால் தன்னை ஸாதிக்க முயலும் தன் பக்தர்களின் கண்டத்தின் எழாலிலும், மந்திர ஜபத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்  உபாசகர்களுடைய வீர்யமான  மந்திர ஜப அவசரத்தில் அவர்களுடைய மிக கம்பீரமான புக்தியின் ப்ரவ்ருத்தியிலும் விசேஷமான ஸாந்நித்யம் கொண்டு அவர்களைக் கைதூக்கி ஆட்கொண்டுஅவர்களுக்கு ஜ்ஞானானந்தமும் ஜீவன் முக்தியும் அளித்தருளும் ஆனந்தமூர்த்தி.

393.   ககுத்மினி

பொதுவாக எல்லா பர்வதங்களிலும் சிறப்பாக மூல மந்த்ரத்தின் விரிவாக்கமான சக்ரம் பீஜாக்ஷரங்களின் எழுச்சியால் சகல அண்டங்களின் சமஷ்டி கோளமாக உருவாகி உயர்ந்துள்ள மஹாமேரு பர்வதத்திலும் சாந்நித்யம் கொண்டு சாதகர்களுடைய ஜப, பூஜா, ஹோம தர்பணாதி ஆராதனக்ரமங்களால் வீறு பெற்று அவற்றில் லயித்திருக்கும் தன் பக்தர்களைத் தன்பால் ஈர்த்து அவர்களுக்கு ஜீவன் முக்தி அளித்தருளும் மந்திர மூர்த்தி.

394.   கஷ்டவதீ

எவ்வளவு கூர்மையான புக்தி தீக்ஷணம் உள்ளவராலும் சிறிது கூட புரிந்து கொள்ள முடியாதபடி அவ்வளவு அதி ஸூஷ்மமாகவும் கூடமாகவும் உள்ள ஸ்வரூப லக்ஷணம் கொண்டவள்.

395.   கரணீயகதார்ச்சிதா 

மனிதன் தர்மங்களிலிருந்து வழுவாமல் தன் கடமைகளைக் கட்டாயம் செய்தே தீர வேண்டிய அவசியத்தை எடுத்து வலியுறுத்தி கூறும் ஸ்ருதி ஸ்ம்ருதிகளாகிய வேத தர்ம ஸாஸ்த்ர க்ரந்தங்களிலும் நிர்க்குண ப்ரஹ்ம ஸ்வாரூபமாகிய பரமார்த்மா ஜீவர்களை காப்பாற்றும் பொருட்டு குணங்களேற்று மனுஷ்ய லோகத்தில் ஆதர்ஸ புருஷர்களாக அவதாரம் எடுத்து தர்மத்தை நிலை நாட்டிய வரலாறுகளை எடுத்து கூறும் இதிஹாச புராணங்களிலும் உள்ள கதைகளிலும் தர்மதேவதையாகிய பராஸக்தியின் இணையற்ற மகிமைகளே விசேஷமாகப் பேசப்படுவதால், க்ரந்தங்களின் வடிவில் ஆவாஹனம் செய்து ஆராதிக்க தக்கவள்.



(அடுத்த பதிவில் தொடரும்)







No comments:

Post a Comment