Monday 16 December 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (28)


573.   க்ரகசா 

அரம்  மரத் துண்டை அறுப்பது போல் துஷ்டர்களை கடுமையாக தண்டிப்பவளாயினும் நாற்புறமும் சிறந்த நறுமணம் வீசும் தாழம்பூவை ஆபரணமாக அணிவதில் பெரு மகிழ்ச்சி கொள்பவள்.  அதாவது ஸுவாசனைகள் (பூர்வ்கர்மத்தில் நற்கருமங்கள் பல புரிந்துள்ளதால் உண்டான நற்பண்புகள்  மலிந்துள்ள சாதுக்கள் எல்லோரையும் தன் அநுக்ரஹத்தால் மகிழ்வித்து ஆட்கொண்டு அருள்பவள். அதாவது துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்து உலகை ஆண்டருள்பவள்.

 574.   க்ரகசாராத்யா

ஜன்மாந்தரங்களில்  செய்துள்ள சத் கர்மங்களின் விளைவாக பூர்வ வாசனைகளின் நற்பயனாக, நற்குண நற்செயல்கள்  ஏராளமாக மலிந்துள்ள பரம பாகவதர்களான யோகிநிகளால்  விதிமுறைப்படி விஸ்தாரமாக ஆராதிக்கப்படுவதில்  பெரு  மகிழ்ச்சி கொள்பவள்.

575.   கதம்ப்ரமகரா லதா

அஸஹாயமாகவும் அதி ஆஸ்சர்யமாகவும் ஆன தன் அற்புத செயல்பாடுகளை கண்டு முப்பத்து முக்கோடி தேவர்களும் வியக்கும் ரீதியில் ப்ரபஞ்ஜ ஜீவ சமூஹங்களின் பஞ்சக்ருதயம் செய்து நிர்வஹிப்பதில் பெரு மகிழ்ச்சி அடையும் பரஞ்ஜ்யோதீஷ் மதியான பராசக்தி மூர்த்தி.

576.   கதங்கார விநிர்  முக்தா

உபாஸகண் தன்னுடைய லௌகீக வாழ்க்கையிலோ அல்லது தேவியின் புரஸ்சரண க்ரமங்களிலோ  அல்லது சஹ யோகிநிகளின் வாழ்க்கையிலோ அல்லது தான் அவர்களுடன் பழகும் ஸந்தர்பத்திலேயோ அல்லது ரீதியிலோ ஏதேனும் ஒரு இக்கட்டான ஸந்தர்ப்பம் ஏற்பட்டு அந்நிலையில் அவன் இந்த ஸூழலிலிருந்து எப்படித்தான் நான் தப்பி விடுதலை அடைவேனோ என்றபடி இன்னது செய்வது என்று ஒன்றும் தோன்றாமல் திகைத்து பிரமிக்கையில் தன்னிடம் சரணமடைந்த ஒரு பக்தன் இங்கனம் கவலைக்காளாயிருப்பது கண்டு மனமிரங்கி ஓடோடி வந்து அவனுக்கு அந்த நிலையில் தக்க தருணத்தில் தக்கபடி உதவி விடுதலை அளித்து அருளும் கருணைக்கடல்.

577.   காலீ 

இந்த பரந்த ப்ரபஞ்சத்தின் செயல்பாடுகள் அனைத்தும் நடந்தேறுவதற்கு மூல காரணமானவளும் எல்லா ஜீவர்களின் பஞ்ச க்ருத்யம்  செய்தருளும் எஜமாநியும்  ஜிஜ்ஞாஸூக்களின் புத்தி சக்தியை தூண்டி அவர்களின் நிலைக்கு ஏற்றபடி ஞானம் அருளும் உத்தம ஆசார்ய ஸ்வரூபிணியும் கருணைக்கடலுமான லோக ஸ்வாமினி.

578.   காலக்ரியா 

க்ரியா சக்தியின் வ்யக்த ஸ்வரூபிணியானவளும்  எல்லா ஜீவர்களையும் தம்தம் கடமைகளைச் செய்ய  ஊக்குவிப்பவலும் அவர்கள் அந்த அந்த கர்மங்களைச் செய்ய வழி காட்டுவதற்காக உத்தம ஆசானாக  வந்து ஆவீர்பாவித்து உதபுவளும்,  இங்கனம் தன பொறுப்பான செயல்களைச்  செய்வது தவிர மஹாகாலர்  செயலற்று இருப்பதால் அவருடைய பொறுப்பான செயல்களையும் தானே மேற்கொண்டு ஏற்றுச் செய்தருளும் பரம நிர்வாஹ மூர்த்தி.

579.   க்ரது:

பிரேம த்யானத்தை அடிப்படையாகக்  கொண்டு  மிகுந்த ஸ்ரத்தையும் பக்தியும் வீர்யமும் பொங்கும் பாராயணமும்  ஜபமும் ஹோமமும் தர்பணமும் அபிஷேக அர்சனாதி ஆராதனா க்ரமங்களும்  நிரைந்தவைகளும் ஆஷாட மாஸத்தில் சாதுர்மாஸ்யாதி வ்ரத ஸங்கல்பத்துடன் தொடங்கி தொடர்ச்சியாக செய்யப்படுபவைகளான யஜ்ஞ யாக க்ரமங்களை சிறப்பாக நிகழ்த்தி த்ரிகரணசுத்தியுடன்  தனக்கு அர்பணித்து  தன்னிடம் அனன்யமாகச்  சரணமடையும் பக்தனை ஆட்கொண்டு அவனுக்கு முக்தி அருளும் பரம கருணாமூர்த்தி.  

580.   காமினீ

இஹபர சௌக்கியம் அடைய விழையும் எல்லா மனிதர்களும் பிரயோகிக்கும் எல்லா மந்திரங்களிலும் அமர்ந்துள்ள எல்லா பீஜங்களுக்கு உத்பத்தி ஸ்தானமாகிய மாத்ருகா மண்டலத்தின் ஸ்வாமினி தானே ஆவதால் எல்லோருடைய எல்லா மந்திர ஜபத்துக்கும்  அவஅவர்களுடைய முயற்சிக்கு தக்க பலனளிக்கும் லோகமாதா.

581.   காமினீ பூஜ்யா

மாத்ருகாமண்டலத்தின் பொறுப்பாளிகளும் நிர்வாஹா அதிகாரிகளுமான உக்ராதி பரிவார சக்தி தேவதைகளாலும், வித்யோபாஸர்களாகிய ஸஹயோனிகளாலும் பொங்கும் ப்ரேமையுடன் அனன்ய சரணாகதி பாவத்துடனும் விதிமுறைப்படி எப்பொழுதும் ஆராதிக்கப்படுபவள்.

582.   காமினீ புஷ்ப தாரிணீ

மந்திர ஸாஸ்த்ரமாகிய வ்ருக்ஷத்தின் புஷ்பங்களாகிய மாத்ருகைகளின் நாதம், பிந்து, கலை, சக்தி ஆகிய நான்கு ப்ராணாலிகளை பேராற்றலுடன் இயக்கி வித்யோபாசர்களாகிய  யோகினிகள் தம்தம் த்யான ஜபாதி யஜ்ஞங்களின் க்ரமங்களை வீர்யவத்தாக  நிகழ்த்தி கோரிய பலன்களை அடைய அருளும் பெருவள்ளல்.  

583.   காமினீ புஷ்ப நிலையா 

குண்டலினி சக்தியும், மாத்ருக மண்டலமும் சாசுவதமாக அமர்ந்துள்ள அகதாஸனமே தன் நிரந்தர உரைவிடமாகக்கொண்டு உபாஸகன் தன் யோக ஸாதனையால் அங்கு வந்து அடைந்தவுடன் அவனை குருமண்டல ஸ்தானமாகிய பிந்துவில் கொண்டு சேர்த்து அவனை நித்ய சுகமாகிய ப்ரஹ்மானந்தத்தில்  மூழ்கச் செய்து அருளும் பராசக்தி.

584.   காமினீ புஷ்ப பூர்ணிமா 

உபாஸகன் குண்டலினி யோக ஸாதனையினூடே அகுல சஹஸ்ரார கமலத்தின் கர்ணிகையாகிய பிந்து ஸ்தானத்தில் லயமாகி விட்டபடியால் குரு மந்திர தேவதா தாதாத்ம்ய பாவத்தை தன்னுடைய வித்யுத்சக்தியின் வீர்யத்தால்  ஸாதகனுடைய புத்தியில் ப்ரசரிக்கச் செய்து அவனை  ஜீவ ப்ரஹ்மைக்கிய ரஸானந்தத்தில் மூழ்கி திளைக்கவைத்து அருளும் குருஸ்வரூபிணீ.

585.   காமினீ புஷ்ப பூஜார்ஹா

அலரி, தாமரை, மல்லிகை, எருக்கு வாழை செம்பருத்தி, புஷ்பங்களாலும், அருஹம் புல்லாலும் உபாஸகனால் சஹயோகிநிகளுடன்  அளவு  கடந்த ப்ரேமையுடன் ஆராதிக்கப்படுவதில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டவள்.

586.   காமினீ புஷ்ப பூஷணா

தன்னுடைய மஹிமைகளின் விஷயமாக உபாஸகர்களின் வாக்கில் கவிதைகளாகவும் ஸ்துதி வாசகங்களாகவும் மலரும் க்ரந்தங்களே  தனக்கு உகந்த ஆபரணமாக  அணிந்து மகிழும்  ஆனந்தமூர்த்தி.

587.   காமினீ புஷ்ப திலகா 

உபாஸகனின் லலாடத்தில் ப்ருமத்ய ப்ராதேஸத்தில் அவனுடைய குறிப்பிட்ட வித்யா ஸம்பிரதாய குருவின் ஆஜ்ஞை பிறக்கும் ஸ்தானத்தில் வித்யா ப்ரணாலியாகிய மந்த்ரத்தின் பீஜங்களில் அமர்ந்துள்ள மாத்ருகைகளின் ஒலி ஓட்டத்தின் வீர்யத்தில் தானே ஸாக்ஷாத்கரித்து  அவனுடைய யோக ஸாதனைக்கு ஸித்தி அளித்து அவனை ஒரு ப்ரஹ்மஜ்ஞானியாக்கி மகிழ்பவள்.

588.   காமினீ குண்ட சும்பணா

தீவிரமான யோக ஸாதனையினூடே, உபாஸகன் குண்டலினியின் ஸஹாயத்தால் ஸஹஸ்ரதள கமலத்தின் கர்ணிகா ஸ்தானத்தை அடைந்தவுடன், தன் சிசுவானஅவனை சீராட்டி, மாத்ருகா மண்டலத்தின் வீர்யமான ஒலி ஓட்டத்தை அவனுடைய புத்தியில் ப்ரஸரிக்கச்செய்து, அவன் அந்த ஸ்தானத்திலேயேஅசஞ்சலமாக அமர்ந்து சாசுவதமான ப்ரஹ்மானந்தத்தை அவிச் சின்னமாக அநுபவித்துக்கொண்டு நித்ய ஸுகியாகுமாறு  அநுக்ரஹிக்கும் ஆனந்தவல்லி.

589.   காமினீ யோக ஸந்துஷ்டா 

உபாசகன் குண்டலினி யோகத்தை அப்பியஸித்து அதில் ஸித்தி பெற்று இஷ்ட தேவதையை ஸாக்ஷாத்கரித்து  தன் மயமாகி தன் வ்யகத்தியாகவே மாரிவிடுவதைக் கண்டு, பெரு மகிழ்ச்சி அடைந்து அவனுக்கு ஜீவன் முக்தி அருளும் ஆனந்த மூர்த்தி.

590.   காமினீ யோக போகதா  

குண்டலினி யோக ஸாதனையில் ஸித்தி அடைந்து அந்த ஆனந்தத்தில் திளைத்து மகிழும் ஸாதகனை ஆட்கொண்டு அவனுக்கு இஹ பர ஸுகம் அளித்து அவனுக்கு நிரந்தரமான ப்ரஹ்மானந்தம் அளித்து மகிழும் ஜகன்மாதா.

591.   காமினீ குண்ட ஸம்மக்னா

குண்டலினி யோக ஸாதனையில் ஸித்தி அடைந்து அந்த சுகத்திலேயே மூழ்கித் திளைத்திருக்கும்  உபாஸகனை ஆட்கொண்டு அந்த நிலையில் தானும் அவனுடைய ஸஹஸ்ராரமாகிய ஆகாசத்தில் ஹம்ஸிநயாக ஒன்றி ஆனந்திக்கும் ஜீவப்ரஹ்மைக்ய வ்யக்தமூர்த்தி.

592.   காமினீ குண்ட மத்யகா 

ஸாதகனின் ஸஹஸ்ராரமாகிய ஆகாச வெளியில் எல்லை கடந்து பரந்து கொழுந்து விட்டு ஜ்வலிக்கும் ஜ்யோதிஸ் புஞ்ஜமாகும் ஸர்வ வ்யாபகமான சுத்த போத பூர்ணா நந்தத்தின்  வ்யக்த மூர்த்தியாகிய பரமஹம்ஸ குருஸ்ஸ்வரூபிணீயாகவும் சாக்ஷாத்கரித்து, அவனுக்கு கைவல்ய ஜ்ஞானாநந்தம் அளித்து மகிழும் குருமூர்த்தி.    

593.   காமினீ மானஸாராத்யா

ஸாதகனின் மனசே தான் மகிழ்ந்து உறையும் வாசஸ்தலமாகவும், அவனுடைய சகுண ப்ரம்மோபாஸன க்ரமங்களே  தனக்கு உகந்த உத்ஸவ க்ரமங்களாகவும்  கொண்டு இங்கனமாக அவனுக்கு வசப்பட்டு அவனுடைய பரம ப்ரேமாஸ்பதமான இஷ்ட தேவதா மூர்தியாக அவனுடைய ஹ்ருதய மாளிகையில் விஹாரமாக விளையாடி மகிழும் ஆனந்த வல்லி.  

594.   காமினீ மானதோஷிதா 

தனக்கு பரோபகாரம் செய்யும் ஸகியாகிய குண்டலினி சக்தியிநிடத்தில் அனன்ய ப்ரேமை பூண்டு தன  அநுராகத்தைப் பல விதங்களிலும் தெரிவிக்கும் ஸாதகன் மீது பெரு மகிழ்ச்சி கொண்டு அவனை ஆட்கொண்டு அவனுக்கு ப்ரஹ்மானந்தம் அளித்து மகிழும் ஆனந்தமூர்த்தி.

595.   காமினீ மானஸஞ்சாரா

குண்டலினி ஸக்தியின் வ்யக்தியில் தானே ஸாந்நித்யம் கொண்டு, உபாசகனுக்கு அந்த ஸக்தி அருளும் ஸஹாயத்தில் தானே ஸாக்ஷாத்கரித்து, அங்ஙனமாக அவனுக்குக் கிடைக்கும் ஸக்யம் பூராவும் தானே ஸ்வயமாகவே  அவனுக்கு மழையாக பொழிந்து அவனை அபாரமான மகிழ்சிக்கடலில் மூழ்கச் செய்து மகிழும்  அநுக்ரஹமூர்த்தி.

596.   காலிகா

எல்லா அண்டங்களும் விரவியுள்ள இந்தப் பரந்த ப்ரபஞ்சத்தின் பஞ்ச க்ருதயம் நிர்வாஹம் செய்து கொண்டே தன்னிடம் சரணம் அடைந்த  தன பக்தனுக்கு தன்னுடைய பரமோத் க்ருஷ்டமான காலசக்தியின் ஓட்டத்தின் பரம ரஹஸ்யமான தத்துவங்களை உபதேசித்துத் தெளிவு படுத்தி, அங்ஙனமாக ஸக்தி - ஸிவம் என்ற விசேஷ தத்துவத்தின் உண்மையை அவனுடைய புத்தியில் ஸ்புரிக்கச் செய்து அருளும் பரமஹம்ஸ குருமூர்த்தி.

597.   காலகாலிகா

உலகத்திலுள்ள எல்லோருக்கும் மஹா காலருக்கும் குருவான ஜ்ஞானாம்பகை.



(அடுத்த பதிவில் தொடரும்) 

No comments:

Post a Comment