Thursday 28 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (16)


294.   கஸ்தூரி வந்தகாராத்யா

தன் வித்யோபாசகர்களாகிய யோகிநிகளில் எவரேனும் ஒருவரை பிரத்யக்ஷமாக காளியாகவோ, ஒரு பரிவார தேவதையாகவோ அல்லது சமஷ்டியாக பலரை சக்ர தேவதைகளாகவோ ஆவாஹனம் செய்து, விதிமுறைபடி ஆராதன க்ரமங்கள் நிகழ்த்தி தனக்கு அர்ப்பணம் செய்யும் அன்பர்களை ஆட்கொண்டு அவர்களுடைய ஹ்ருதயத்தில் நிரந்தரமாக ஸாந்நித்தியம் கொண்டு அவர்களுக்கு ஆனந்தம் அளிக்கும் சௌலப்யமூர்த்தி.

295.   கஸ்தூரிஸ்தானவாஸினி

தான் வேறு, தன் பக்தர்கள் வேறு என்ற பேதம் இல்லாததால் தன் வித்யோபாசகர்களாகிய யோகிநிகளின் உறைவிடமே தனக்கு உகந்த ஸ்தானமாகக் கொண்டு, தானும் ஒரு யோகிநியாகவே அங்கு லீலா விநோதமாகப் பழகிக்கொண்டு "அஹம் காலீ ன சான்யோஸ்மி" என்னும் குரு பாதுகா மந்திர வசனத்தின் ப்ரத்யக்ஷ நிரூபணமாகவே தா தாத்ம்ய பாவத்துடன் தன் அன்பர்களை அநுக்ரஹித்து மகிழும் ஆனந்த மூர்த்தி.

296.   கஹரூபா

மாத்ருகா மண்டலத்தில் க காராதி ஹ காராந்தமாக உள்ள முப்பத்து மூன்று அஸம்யோக வ்யஜ்ஞ்ஜன மாத்ருகா ஸமூஹத்தின்  சமஷ்டி ஸ்வரூபிணியாக, அதாவது கைவல்ய தேவதா ஸ்வரூபிணியாக உபாஸகனின் புக்தியில் தோன்றி, தன் அபார சக்தியை இயக்கி, தேவதா ஸாதக தாதாத்ம்ய பாவத்தில் திளைத்திருக்கும் அவனுக்கு தன்னுடைய சாக்ஷாத்கார ஸ்வரூப ஸித்தியை, துரீய ஸ்வரத்தின் ஓட்டத்திநூடே, அவனது ஹ்ருதயத்தில் இயங்கச் செய்தருளி, அதனால் அவன் அடையும் காம்பீர்யமான லயத்தை கண்டு மகிழ்பவள்.

297.   க்ஹாட்யா

ஸஹஸ்ரதள கமலத்தின் மத்தியில் ப்ரகாசியா நின்ற மாத்ருகா மணிபீடத்தில் மாத்ருகா சக்திகளின் வ்யக்த ஸ்வரூபிணியான நாத ரூபிணியாக  உபாஸகனுடைய புக்தியில் ஸாந்நித்யம் கொண்டு அவனுக்கு லய யோகம் த்ருடமாக நிலைக்க அருளும் கருணாமூர்த்தி.

298.   கஹானந்தா

தன் யோகிநிகளை மாத்ருகைகளின் ஸ்தானத்தில் ஆவாஹனம் செய்து விதிமுறைப்படி ஆராதனம் செய்து தனக்கு அர்பணம் செய்யும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஆனந்தம் அளித்தருளும் ஜகன்மாதா.

299.   கஹாத்மபூ:

மாத்ருக மண்டபமே பரதேவதையின் சமஷ்டி ஸ்வரூபமாகவும், யோகினி மண்டலமே  மாத்ருகா மண்டலமாக பாவித்து யோகினி மண்டலத்தை ஆராதித்து உபசரித்து தனக்கு அர்ப்பணம் செய்யும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு பேரானந்தம்  அளித்து அநுக்ரஹிக்கும் பெருவள்ளல்.

300.   கஹபூஜ்யா

தனக்கு செய்ய வேண்டிய பூஜா க்ரமங்களை தன் யோகினிகள் மந்திர மாத்ருகா புஷ்ப தேவதைகளாக ஆவாஹனம் செய்து விதிமுறைப்படி பூஜித்து தனக்கு அர்பணம் செய்யும் பக்தர்களுக்கு மந்திர ஸித்தியும் ஆனந்தமும் ஜீவன் முக்தியும் அருளும் பராசக்தி.

301    கஹாத்யாக்யா

மனித வாக்குக்கு எட்டாதவளாயினும் மாத்ருகைகளின் மந்த்ரார்த்தங்களின்  வாயிலாக ஒருவாறு உணரத்தக்க பராசக்தி.

302.   கஹஹேயா

மாத்ருகைகளின் மந்திர பிரயோகங்கள் அல்லாது மற்ற எந்த உபாயங்களினாலும் அடைய முடியாதவள்.

303.   கஹாத்மிகா

மாத்ருகைகளே வடிவானவள்.

304.   கஹமாலா

அ காராதி ஷ காராந்தமான ஐம்பத்தோரு மாத்ருகைகளின் சின்னனங்களாக ஐம்பத்தொரு முண்டங்களால் ஆன மாலையை கழுத்தில் தரித்து அருள்பவள்.  

305.   கண்டபூஷா

வேறு எந்த ஆபரணங்களையும் தவிர்த்து ஐம்பத்தொரு முண்டங்களாலான மாலையை மட்டுமே தனக்கு உகந்த ஆபரணமாக அணிந்து ப்ரகாசிப்பவள்.

306.   கஹமந்திர ஜபோத்யதா

தன் நாயகராகிய மஹாகாளரை  தேவதையாகக் கொண்டு மாத்ருகைகளாலான மந்த்ரங்களை ஜபிப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பவள்.

307.   கஹனாமஸ்ம்ருதிபரா

மாத்ருகைகளால் உருவானவைகளும் தன் நாயகராகிய மஹாகாளரின் சிறப்பு இயல்புகளை சுட்டிக் காட்டுபவைகளும் ஆன மஹோந்நதமான கௌண நாமங்களை ப்ரேம த்யானத்துடன் ஜெபிப்பதே தன் ப்ரதானமான கர்மாவாகக் கொண்டவள்.

308.  கஹநாமபராயண

மாத்ருகைகள் பல சேர்க்கப்பட்டவைகளும், தன் நாயகராகிய மஹாகாளரின் சிறப்பியல்புகளை வர்ணிப்பவைகளும் ஆன கௌண நாமங்களை வரிசைப்படுத்தி கவனம் செய்து க்ரந்த மாக்கப்பட்டவைகளும் ஆன  அஷ்டோத்திர ஸத நாம ஸ்தோத்ரம், ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் முதலிய நாம ஸ்தோத்திர க்ரந்தங்களை  ஸ்ரத்தா பக்தியுடன் இடைவிடாது பாராயணம் செய்வதிலேயே எக்காலத்தும் முனைந்து செயல் பட்டுக்கொண்டே இருப்பவள்.

309.   கஹ பாராயணரதா

இடைவிடாது மூல மந்திரத்தை ஜபித்தாலே வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோள், அதுவே மனிதனுக்கு பர கதியான மோக்ஷத்தை அளிக்க வல்லது என்று தேவதையின் பரத்வ ஸித்தாந்தத்தில்  த்ருடமான நம்பிக்கை கொண்டு எப்பொழுதுமே மந்திர ஜெபத்திலே தீவிரமாகவும், அனன்ய சரணமாகவும் ப்ரேம த்யானத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வித்யோபாசகனை ஆட்கொண்டு அவனுக்கு ஆத்மஜ்ஞானம் மற்றும் சாந்தியும் முக்தியும் அளித்தருளும்  க்ருபைக்கடல்.  

310.   கஹதேவி

மாத்ருகை மணிபீட த்ரிகோணத்தின் மூன்று ரேகைகளிலும் மொத்தமாக பிரதிஷ்டை ஆகி இருக்கும் அ காராதி  ஷ  காராந்தமான ஐம்பத்தொரு மாத்ருகைகள் எல்லாவற்றிற்கும் ஆன தனித் தலைவி. அதாவது மாத்ருகா மண்டல ஸ்வாமினி: சர்வ மந்திர சக்தி.

311.   கஹேஸ்வரி

மந்திரங்களை விதிமுறைப்படி ஜபிப்பவர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குத் தக்கபடி பலன் அளித்து அருளும் எஜமானி.

312.   கஹஹேது:

மாத்ருகைகளிலிருந்து பீஜங்களும், பீஜங்களிலிருந்து மந்த்ரங்களும் எழுந்து உருவாவதற்கு காரணமாக இருப்பவள்.

313.   கஹானந்தா

மாத்ருகையிலிருந்து எழும் ஒலி  விசேஷங்களால் ஏற்படும் ஆனந்தத்தை அனுபவிக்கும் யோகிநிகளின் மனதில் விளையாடி மகிழ்பவள்.

314.   கஹநாதபராயணா

மந்திரங்களின் ஒலி ஓட்டங்களில் உண்டாகும் இனிய நாதமே பராசக்தியின் வ்யக்த  ஸ்வரூபமாம் என்ற ஸித்தாந்தமே தம் வாழ்கையில் மிக ப்ரத்தானமான குறிக்கோளாகக் கொண்டு அந்த சக்திமத்தான  ஸூநாத ஸ்வரூபத்திலேயே  தன்  வழிபாட்டு தேவதையின் வ்யக்த மூர்த்தியாக மனதில் உருவகப்படுத்தி ஆவாஹனம் செய்து கொண்டு, அந்த நாத மூர்த்திக்கு மானஸிகமாகப் பலஉபசாரங்கள் செய்து ஆராதித்து தனக்கு அர்ப்பணம் செய்யும் தன் த்ருட பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஆனந்தமும் ஜீவன் முக்தியும் அளிதருள்பவள்.

315.   கஹமாதா

மாத்ருகைகளையும் நாதத்தையும் ஸ்ருஷ்டித்து அவற்றிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து பல சிறந்த மந்த்ரங்ககை உருவாக்கி உலகத்துக்கு வழங்கயுள்ள ஜகன் மாதா.

316.   கஹாந்தஸ்தா

மந்த்ரங்களினுள் அமர்ந்து அவற்றிற்கு பேராற்றல் வழங்கும் மூல சக்தி ஸ்வரூபிணி.

317.   கஹமந்த்ரா

மூல மந்த்ரமே தேவதையின் வ்யக்த மூர்த்தியாம் என்ற ஸித்தாந்தத்தை நன்கு உணர்ந்து தன் பக்தர்கள் மந்த்ரத்தின் பாஞ்ச பௌதிக ஸ்போட ஸ்வரூப வடிவான சக்ர மேருவில் தன்னை விதிமுறைப்படி ஆராதன  க்ரமங்களை நிகழ்த்தி தனக்கு அர்ப்பணம் செய்யும் ஸாதகர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஆனந்தமும் ஜீவன் முக்தியும் அளித்தருளும் பரதேவதை.

318.   கஹேஸ்வரி

மாத்ருக மணிபீடத்தின் மத்தியில் உள்ள த்வாதஸ தள கமலத்தின் மத்தியில் ஹம்ஸ தத்துவ ஸ்போடமாக, குருமண்டலமே வடிவமாக சர்வ மந்திர ஸ்வரூபிணியாக வீற்றிருந்து, குண்டலினியின் ஸஹாயத்துடன் அங்கு வரும் ஸாதகனை அநுக்ரஹிக்கும் பராசக்தி.


(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment