Thursday 14 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (6)

111. கஞ்ஜஸம்மானநிரதா

பக்தர்கள் ஹ்ருதய கமலத்தில் த்யான தாரணை பாவனைகள் வாயிலாக தன்னை ஸாக்ஷாத்கரிக்கச் செய்யும் முயற்சிகளை ஆதரித்து அவர்களுக்கு சீக்கிரமே யோகம் ஸித்திக்க அருள்பவள்.

112. கஞ்ஜோத்பத்திபராயணா

குண்டலினி யோகத்தின் வாயிலாக ஸாதகன் ஸஹஸ்ரார கமலத்தில் தன் புத்தியை நிலைப்படுத்தி அங்கு உத்தம யோக ஆசானாகிய சந்திரன் அருளும் அமுதப்பெருக்கினால் பெரும் பிரஹ்ம நிஷ்டனாகி அங்கனமாக அவனுக்கு பிரஹ்மானந்த வெள்ளம் கரை புரண்டு ப்ரவஹிக்க அருள்பவள்.

113. கஞ்ஜராஸிஸமாகாரா

மாத்ருகா மண்டலம் பூராவும் தன் ஸக்தியையே வ்யாபித்து ப்ரஸரிக்கச் செய்து அதன் மூலமாக உபாஸகனுடைய மந்திர ஸாதன ப்ரயாஸைகளை   ஆதரித்து அவனுக்கு சீக்கிரமே மந்திர ஸித்தி அருள்பவள். ஸித்தனாகி ஸூகிக்க அருள்பவள்.

114. கஞ்ஜாரண்ய நிவாஸினீ

ஸாதகன் குண்டலினி யோக ஸாதனையால் ஆனந்தவனமாகிய ப்ரம்ஹ ரந்த்ர கமலத்தை அடைந்து அந்த இடத்தின் ப்ரபாவத்தால் தானே காளி மயமாவதை உணர்ந்து ஆனந்தத்தில் திளைத்து அங்கேயே நிலையாக தங்கி தன்மயத்வ  ஸித்தனாகி ஸூகிக்க அருள்பவள்.

115. கரஞ்ஜவ்ருக்ஷமத்யஸ்தா

"கரஞ்ஜம்" என்றும் "சிரபில்வம்" என்றும் "நந்தகமலம்" என்றும் சிறப்புப்பெயர்கள் கொண்ட புங்க மரத்தின் மத்தியில் நிலையாக வாசம் செய்பவள்.

116. கரஞ்ஜவ்ருக்ஷவாசினீ

கரஞ்ச மரத்தின் எல்லா அங்கங்களிலும் உறைபவள்.

117. கரஞ்ஜபலபூஷாட்யா

கரஞ்ச மரத்தின் பழத்தை கையழகணியாக தரித்து மகிழ்பவள்.

118. கரஞ்ஜாரண்ய வாசினீ

கரஞ்ச வ்ருக்ஷங்கள் ஏராளமாக அடர்ந்து வளர்ந்துள்ள காட்டில் வாசிப்பதில் பெரிதும் மகிழ்பவள்.

119. கரஞ்ஜமாலாபரணா

கரஞ்ஜ மரத்தின் பழங்களை கோத்த மாலையைக் கழுத்தில் அணிவதில்விசேஷ திருப்தி அடைபவள்.

120. கரவாலபராயணா 

ஜ் ஞானத்தின் சின்னமாக "பத்ராத்மஜன்" என்ற பெயர் கொண்ட அழகியதொரு பட்டாக் கத்தியை தன் இடது மேற்கரத்தில் ஏந்தி தன்னை உபாஸிக்கும் கிரமங்களில்  "கட்கபூஜையே" மிக முக்யமான ஒரு அங்கமாக அமைந்து அந்த கட்க பூஜை செய்த மாத்திரத்திலேயே  சாதகனுக்கு ப்ரம்ஹஞானம் ஏற்பட்டு சீக்கிரமே மோக்ஷமும் சித்திக்க அருள்பவள்.

121. கரவாலப்ரஹ்ருஷ்டாத்மா 

"ஸக்தி - சிவம்" என்ற தத்துவத்தின் சின்னமானதும் பிரஹ்ம ஞானத்தின் வ்யக்தஸ்வரூபமானதும் ஆன பத்ராத்மஜன் எனற பட்டாக் கத்தியை  சக்திபரமான தன் இடது மேற்கரத்தில் தரித்து அதன் காரணமாக பெரு மகிழ்ச்சி அடைந்து அந்நிலையை த்யானம் செய்யும் ஸாதகனுக்கு ப்ரம்ஹ ஞானமும் ஸாக்தாநந்தமும் ஜீவன் முக்தியும் அளித்து மகிழ்பவள்.

122. கரவலப்ரியா கதி:

ஜ்ஞானாக்னியின் ஸ்வரூபமான பத்ராத்மஜன் என்ற கட்கத்தின் ஜ்யோதிஸ் ஸ்பூர்த்தியின் காந்தியில் லயித்த உபாஸகனுடைய புத்தியில் தன் ஸக்தியை ப்ரசரிக்கச்செய்து அவனுக்கு ஸக்தி -ஸிவ தத்துவ ஜ்ஞானாநந்தமும் ஜீவன் முக்தியும் ஸித்திக்க அருlள்பவள்.

123. கரவாலப்ரியா

இச்சா க்ரியா ஞானம் ஆகிய மூன்று ஸக்திகளும் ஒருங்கிணைந்த நிலையை ஸுஸிக்கும் சின்னமானதும் ஸக்தி-ஸிவ தத்துவத்தின் வ்யக்த மூர்த்தியும் ஞான தேஜஸ்ஸின் ஸ்போட ஸ்வரூபமானதும் ஆன பத்ராத்மஜன் என்ற அழகிய பட்டாக்கத்தியை   ஸக்திபர ஸ்தலமான தன் இடது மேற்கரத்தில் தரித்து இன்புறுவதில் பெரு மகிழ்சி கொள்பவள்.

124. கன்யா

இளம் பெண் உருவத்தில் தோன்றி விளையாட்டான போக்காகவே பக்தனை மகிழ்சி வெள்ளத்தில்  மூழ்கச்செய்பவள்.

125. கரவால விஹாரிணி

பத்ராத்மஜன் என்ற அழகான பட்டாக் கத்தியை ஞானத்தின் சின்னமாகத் தன் இடது மேற் கரத்தில் தரித்திருக்கும் போதிலும் அதுவும் ஒரு விளையாட்டுப் பொருள் போலவே அதனை லீலையாகவே அசைத்து மகிழ்பவள்.

126. கரவாலமயீ

ப்ரஹ்மஞானத்த்தின் சின்னமாக தன் இடது மேற்கரத்தில் தரிக்கும் பத்ராத்மஜன் என்ற அழகான பட்டாக் கதியின் வ்யக்த ரூபத்திலேயே ஸாதகர்களால் நேரிடையாக ஆராதிக்கப் படுவதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்பவள்.

127. கர்ம்ம

தான் ஆவிர்பவிக்கும் பல உருவங்களுள் ஜீவர்களின் வாழ்கையில் அவர்களுடைய செய்தொழிலே சிறப்புருவமாக (அதாவது க்ரியா சக்தி ஸ்வரூபிணியான தன்னுடைய வ்யக்த மூர்த்தியை ) ஆவாஹனம் செய்து விதி முறைப்படி ஆராதிக்கும் ஸாதகர்களை ஆட்கொண்டு அருளும் கருணாமூர்த்தி.

128.கரவாலப்ரியங்கரீ

பத்ராத்மஜன் என்ற தன் கத்தியை விதிமுறைப்படி ஆராதிக்கும் ஸாதகர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்பவள்.

(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment