Saturday 9 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (3)


46. கதங்காரபராலாபா

உபாசகன் தன் மனத்தில் தான் எந்த முறையில் தேவியை வழிப்பட்டால் தேவி திருப்தி அடைவாள் என்று பூரண மனோபலத்துடன் முயன்று ஆராதித்துக் கொண்டிருக்கும் வேளையில், தேவி தானாகவே முன்வந்து அவனுக்கு பூஜாபலம் அளித்து அவனை மகிழ்விப்பாள் .

47.கதங்காரபராயணா

உபாசகன், தன் சஹ யோகிநிகளை பரிவார தேவதைகளாகக் கருதி, தான் செய்யும் தேவி உபசாரக் கிரமங்களில் அவர்கள்  எவ்வளவு பிரேமையுடன்  உதவுகிறார்கள்.  தான் எவ்வாறெல்லாம் நடந்து கொண்டு  அவர்களை திருப்தி படுத்தினால் தேவி சந்தோஷப் படுவாள் என்று மனதில் நினைக்கும் போதே, தேவி ஓடோடிவந்து அவன் மனோரதங்களை நிறைவேற்றி மகிழ்பவள்.  

48. கதங்காரபதாந்தஸ்ஸ்தா

உபாசகன் தன் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இக்கட்டான சிக்கலில் அகப்பட்டு மேற்கொண்டு என்ன செய்வது என்று ஒன்றும் தோன்றாமல் இருக்கும் நிலையில் " உலகில் யாவருக்கும் நேரும் எல்லா  ஸ்திதிகளுக்கும் காரணம் அவனுடைய பூர்வ கர்ம பலமே, ஆயினும், தேவி காளிகையினிடம் சரணம் அடைந்த எனக்கு ஒரு கவலையும் ஏற்படாதே, நான் காளி பக்தன் அல்லவா"  என்றபடி காளியிடம் பூரண சரணாகதியான நிலையில் இருக்க, காளிகை, தன் பக்தனின் அந்த சூழ்நிலையில் தானே நேரிடையாக பங்கு கொண்டு  அவனுக்கு விடுதலை அளித்து அருளும் பரம கருணாநிதி.

49. கதங்கார பதார்த்தபூ:

மேலே கூறிய (48 ) கருத்தே . பக்தனின் பூரண சரணாகதியை ஏற்று அவனை அநுக்க்ரஹிக்கும் பெரு வள்ளல்.

50. கமலாக்ஷீ

உபாஸகனுடைய மூலாதார  ஸஹஸ்ராராந்தமான தளங்களில் மலர்ந்துள்ள என்ன என்ன வகையான  பாவங்களின் ஓட்டங்கள் தொடர்ந்து இயங்குகின்றன என்று கண்காணித்து அவ்வெல்லாக் கமலங்களிலும் மோக்ஷாஸ்பதமான  பாவங்களே இடம் கொள்ளச் செய்து  அருள்பவள்.

51. கமலஜா

அவள் சுவைத்து ரசிக்கும் திராக்ஷா ரசத்தைப் போல் உபாசகனது சித்தத்திலும் மிக்க மதுரமான லீலைகள் பல புரிந்து மகிழ்பவள்.

52. கமலாஷப்ரபூஜிதா

ஜகத்ரக்ஷகனான மகாவிஷ்ணுவால் மிகச் சிறப்பாக ஆராதிக்கப்படுபவள்.

53. கமலாக்ஷவரோத்யுக்தா

யோகநிஷ்டர்களான  பக்தர்களுக்கு அருள்வதில் எப்பொழுதுமே ஆயத்தமாக இருப்பவள்.

54. ககாரா

அ கராதி க காரந்தமான எல்லா 51 மாத்ருகைகளிலும் எப்பொழுதும் ஊடுருவிப் பாய்ந்து கொண்டே இருப்பவளாயினும் க கார மாத்ருகையின் ஒலியிலேயே விசேஷ ஸாந்நித்யம் கொண்டுள்ளவள்.

55. கர்பூராக்ஷரா

தன்னுடைய மூல மந்த்ரமாகிய வித்யாராஜ்ஞீயிலேயே முழுமையான சக்தி அமைந்து தனக்கென்று குறிப்பான ஒரு ஸ்வரூபம் கொண்டவளாயினும், இதர எல்லா தேவதைகளின் மூல மந்திரங்களின் மாத்ருகைகளிலும் பீஜாக்ஷரங்களிலும் ஊடுருவிப் பாய்ந்துக்கொண்டு, எல்லா தேவதைகளின் ஸ்வரூபமயமாக இயங்கிக்கொண்டும், சிறப்பாக துர்க்கையின் ஸ்வரூபத்திலும் அவளது மூல மந்திரத்தின் பீஜாக்ஷரங்களிலும் விரவிப் பரந்து இங்ஙனம் பல ஸ்வரூபங்களும் விசித்ரமான சக்திகளும் படைத்தவள்.  

56. கரதாரா

தஸ மகாவித்யைகளில் இரண்டாவது வித்தையாகிய தாரா தேவியாக ஆவிர்பவித்து அருள்பவள்.

57. கரச்சின்னா

தஸ மஹாவித்யைகளில் ஆறாவது வித்யையாகிய சின்னமஸ்தா தேவியாக ஆவிர்பவித்து அருள்பவள்.

58. கரஸ்யாமா

மூலப்ரக்ருதியின் க்ரியா ஸக்தியின்  ஸ்போடமாக, கரிய நிறம் கொண்டவளாக ஆவிர்பவித்தவள்  ஆதலால் யாவராலும் தன் முழுமையான ஸ்வரூபத்தை உள்ளபடி சற்றும் உணரமுடியாதவள்.

59. காரார்ணவா

க்ரியா ஸக்திக்கு இருப்பிடமானவள்.

60. கரபூஜ்யா

க்ரியாசக்தியின் மூலாதார ஸ்தான தேவியாக ஆவாஹனம் செய்து ஆராதிக்கப் படவேண்டியவள்.

61. கரரதா

க்ரியா சக்தியின் சின்னமாக ஸவங்களின் கரங்களைக் கோத்து அமைக்கப்பட்ட மேகலையை அணிவதில் இன்புருபவள்.

62. கரதா

பக்தனுடைய த்ரிகரணங்களிலும் க்ரியா சக்தியை ப்ரசரிக்கச் செய்து அவற்றின் இயக்கங்களை மிக்க வீறுகொண்டவை ஆக்கி அருள்பவள்.

63. கரபூஜிதா

க்ரியா சக்தியின் சிறப்பான ஆவிர்ப்பாவ மூர்த்தியாக ஆவாஹனம் செய்து உபாசகர்களால் ஆராதிக்கப்படுபவள்.

64. கரதோயா

வரம் கொடுக்கும் தன் வலது கீழ்க்கையால் ஜீவன் முக்தியாகிய அம்ருதத்தை வழங்கி அருளும் பெருவள்ளல். (அம்ருதம்:  சாவு இன்மை)

65. கராமர்ஷா

தாய்மையின் சிகரமாகையால் பக்தர்கள் அறியாமையால் இழைக்கும் எந்தக் குற்றங்களையும் தன் அபய ஹஸ்தமாகிய வலது மேற்கரத்தால் மன்னித்து அவர்களுக்கு நல்ல விவேகம் அருளும் ஜகன்மாதா.

66. கர்ம்மநாஸா

தன்னை சரணடைந்த பக்தன் ஊழ்வினைப் பயனாக அதிக பாதைப் படாவண்ணம் அவனது பூர்வ கர்ம பலத்தின் தீக்ஷணத்தைக் குறைத்து இனி அவன் ஸம்ஸாரச் சுழலில் சிக்குண்டு அவதிப்படாமல்  தடுத்து ஆட்கொண்டு அருள்பவள்.

67. கரப்ரியா

பக்தனின் புத்தியில் தன் க்ரியா சக்தியை ப்ரஸரிக்கச் செய்து அவன் இஹ ஸௌக்யாநுபவத்திலேயே திளைத்து மயங்கிப் போகாவண்ணம், பூரண ஆத்மஜ்ஞானம் அடையும் முயற்சியில் அவனை ஈடுபடுத்தி சீக்கிரமே அவன் ப்ரஹ்மஜ்ஞானாநந்தம் பெற்று உய்ய அனுக்ரஹிக்கும் கருணைக்கடல்.

68. கரப்ராணா

க்ரியா சக்தியின் ஒட்டமே தன் முழுமையான ஸ்வரூபமாகக் கொண்டு ஆவிர்பவித்து அருளியவள்

69. கரகஜா

ஸர்வ ஜீவ சௌக்கியத்திற்காக அம்ருதத்திற்கு ஒப்பான சுத்த ஜலத்தை வாயு  அக்னி சேர்க்கையால் படைத்து பெரு மழையாக (ஆலங்கட்டி மழை) புவனமெங்கும் ஏராளமாக வர்ஷித்து உலக மக்களை ரக்ஷிக்கும் கருணாமூர்த்தி.

70. கரகா

ஸஹஸ்ர தள கமல பீடத்தில் ஸுத்தசைதன்ய ரூபிணியாக வீ ற்றிருந்து  உபாசகனுடைய  முயற்சிகள் வெற்றி பெறுவதற்கு அடிப்படை ஸக்தியான ப்ரஜ்ஞான மலர்ச்சி அருளும் க்ருபைக்கடல்.

71. கரகாந்தரா

பக்தர்களைத் தன் இடது மேற்கரத்திலுள்ள ஜ்ஞான முத்திரையாகிய "பத்ராத்மஜன்" என்ற கத்தியாலும் தனது இடது கீழ்கரத்திலுள்ள அநுக்ரஹ முத்திரையாகிய வரத ஹஸ்தத்தாலும் தன் வலது மேற்கரத்தில் உள்ள பாலன முத்திரையாகிய அபயஹஸ்தத்தாலும் தடுத்தாட்கொண்டு அருள்பவள்.

(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment