Friday 15 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (7)

129. கபந்தமாலாபரணா

மேக ஜாலங்களில் அடுக்குகள் பல வரிசைகளில் அணிகளாகத்  திரண்டு நீண்ட பெரும் மாலைகளாக உருவாக அதனை பெரும் மாலாபரணமாக அணிந்து கொண்டு மகிழும் ஆகாச மூர்த்தி.

130.  கபந்தராஸிமத்தியகா

மேகக்கூட்டங்கள் நிறைந்த ஆகாசத்தில் கம்பீரமாக சஞ்சரிக்கும் ஆகாச ரூபிணீ.

131.  கபந்தா

ஜீவராசிகள் ஜீவிப்பதற்கு அத்யாவஸ்யமான தண்ணீர் ப்ரபஞ்சத்தில் நாற்புறமும் பரந்து கிடக்க, அதனை சுத்திகரித்து, ஒருங்கே சேகரித்து ஜீவர்கள் வாழும் இடங்களுக்கு மேகங்களாக கொண்டு சென்று ஆங்காங்கே மழையாக பொழிந்து அருளும் மஹா கருணாமூர்த்தியான  பர்ஜன்ய ஸ்வரூபிணீ.

132.  கூடஸம்ஸ்தானா

இன்னஇடத்தில் இன்ன உருவத்தில் இருப்பாள்  என்று உறுதியாக யாவராலும் கண்டுகொள்ள முடியாமலும் யூகித்துக்கூட பார்க்க முடியாதபடி புரியாத புதிராக அறிவுக்கு எட்டாத நிலையில் இருக்கும் ஸூஷ்ம ஸ்வரூபிணி.

133.  கபந்தானந்தபூஷணா

தன்னுடைய எல்லையற்ற வ்யக்தியாகிய ஆகாசத்தில் எண்ணற்ற மேகக்கூட்டங்களையும், சூர்ய சந்த்ராதி விண்மீன்களையும் தனது பூஷணங்களாக அணிந்து ஜ்வலிக்கும் அளவு கடந்த சக்தி ரூபிணீ.

134.  கபந்தநாதசந்துஷ்டா

மேகங்களின் இடி முழக்கங்களை கேட்பதில் மகிழ்ச்சி கொண்டவள்.

135.  கபந்தாஸனதாரிணீ

மேகவாஹனனாகிய இந்த்ரன் முதலான திக்பாலகர்கள் தம் தம் தொழிலைச் சரிவர நிர்வஹிக்கத் தேவையான சக்தி அருள்பவள்.

136.  கபந்தக்ருஹமத்யஸ்தா

மேகங்களின் இருப்பிடமான ஆகாசத்தின் மத்தியே தன் இருப்பிடமாகக் கொண்டு பிரகாசிப்பவள்.

137.  கபந்தவனவாசினி 

மேகஜாலங்களிலும் அவை பொழியும் அம்ருதமான ஜலவர்ஷங்களிலும் உறைந்து மகிழ்பவள்.

138.  கபந்தா

எல்லா அண்டங்களிலும்  மிக அதிக வலிமையும் வேகமும் பிரகாசமும் ஆன "சௌதாமனீ " என்ற வித்யுத் சக்தியின் ஜ்யோதிஸ் ஸ்பூர்த்தி ஏராளமாக விரிந்து பரவும் மஹோபகார வ்யக்தியாகிய பர்ஜன்யமே தன்னுடைய பூர்த்தி ஸ்வரூபங்களுள் ஒன்றாகக் கொண்ட "காதம்பிநீ" என்ற மேகமாலா ஸ்வரூபிணீ.

139.  காஞ்சீகரணீ

ஸக்தி ஸிவ தத்வ ஸ்வரூபிணி ஆதலால் மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணீபூரம் ஆகிய மூன்று தளங்களின் ஆவரண ஸ்தலமாகிய கடி பிரதேசத்தில் க்ரியா ஸக்தியை ஸூஸிக்கும் சின்னமாக ஸவங்களின் கரங்களை கோத்த மேகலையை தரித்து மகிழ்பவள்.

140.  கபந்தராஸிபூஷணா

கூட்டம் கூட்டமாகவும் அடுக்கடுக்காகவும் அணி திரண்டு காற்றிநூடே கம்பீரமாக ஸதா ஸஞ்சரித்துக்கொண்டு மெல்ல மெல்ல நகர்ந்து போய்க்கொண்டே இருக்கும் அழகிய மேக ஜாலங்களே தனக்கு உகந்த பூஷணங்களாகக் கொண்டு பிரகாசித்து மகிழும் ஆகாசமூர்த்தி.

141.  கபந்தமாலாஜயதா

மேகராஜனுடைய பெருமைகளை விளக்கிக் கூறும் ஸ்துதி வாசகமாக அமைந்த  "பர்ஜன்ய ஸூக்தம்" போன்ற மந்திர ஜாலங்களை அநுஸந்தித்து வழிபடும் உபாஸகர்கள் செய்யும் முயற்சிகளில் வெற்றி அருள்பவள்.

142.  கபந்ததேஹவாசிநீ

மேகத்தின் வ்யக்த மூர்த்தியையே தன் வ்யக்தியாகக் கொண்டு அதிலேயே தன் சக்தியை ப்ரசரிக்கச்  செய்து அதனூடே தானே விரவி உறைத்துக்கொண்டு லோகாநுக்ரஹமான  தன் கருணா பிரவாஹத்தை அம்ருதமான மழைப் பொழிவாகவே அருள்பவள்.

143.  கபந்தாஸனமான்யா

உத்தம யோகியர்களானஇந்திரன் முதலான திக் பாலகர்களால்விதி முறைப்படிசிறப்பாக ஆராதிக்கப்படுபவள் .

144.  கபாலமால்யதாரிணீ

வெட்டப்பட்ட  ஐம்பத்தொரு ஸிரஸ்ஸுகளை கோத்த மாலையை தன் கண்டத்தில் அணிந்து மகிழ்பவள்.  அதாவது மாத்ருகாக்ஷர கமல மாலையை அணிந்து மகிழும் மந்திர ஸ்வரூபிணி.

145.  கபாலமாலாமத்யஸ்தா

மாத்ருகாக்ஷர கோவைநூடே ஸதா விரவி வ்யாபித்துக் கொண்டேஇருக்கும் ஒலி ஓட்டத்தில் ஊடுருவிப் பாய்ந்து மந்திரங்களின் நாதத்தை பரப்பி உபாசகர்களுக்கு அதன் வீர்யத்தை உணர்த்தி அருள்பவள்.

146.  கபாலவ்ரததோஷிதா

த்யானம் கலந்த ஜபத்தை ஒரு விடாப்பிடியான கட்டுப்பாட்டுடன் நிகழ்த்தும் க்ரமத்தை உபவாஸம் முதலான அங்கங்களால் வீறு பெரும் ஒரு பெரும் நோன்பின் அனுஷ்டானமாகவே நிகழ்த்தும்  வ்ரத சீலம் உடைய உபாஸகர்களின் முயற்சிகளுக்கு அனுக்ரஹித்து சீக்கிரமே ஸித்தி அருளும் கருணாமூர்த்தி.


(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment