Friday 29 November 2013

ஸ்ரீ தக்ஷினகாளிகா ஸஹஸ்ரநாம விரிவுரை (17)



319.   கஹகேயா

எல்லா மாத்ருகை களும் தன்னுடைய வ்யக்த மூர்திகளாவதால், கானம் செய்பவர்கள் எந்த அக்ஷரக் கோவைகளாலான பதங்கள் அமைந்த  ஸாஹித்யங்கள் கொண்ட ஸ்துதி வாஸகங்களைக் கொண்டு எந்த மூர்த்தியைப் பாடினாலும் அவை யாவும் தன் வ்யக்தியை வர்ணிப்பதாகவே ஆவதால், கானம் செய்பவர்கள் யாவரையுமே தானாகவே அநுக்ரஹித்து அவர்களுக்கு ஆனந்தம் அளித்தருளும் சௌலப்யமூர்த்தி.

320.   கஹாராத்யா

மாத்ருகைகளை ப்ரயோகித்து மானஸிகமாக விதிமுறைப்படி தனக்குப் பல உபசாரங்கள் செய்து பிரேமையுடன் சமர்ப்பணம் செய்யும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஆத்ம ஜ்ஞானமும் முக்தியும் அளித்தருளும் ஆனந்த மூர்த்தி

321.   கஹத்யான பராயணா

தன்னுடைய வ்யக்த மூர்த்திகளாகிய மாத்ருகைகளின் ஒலி வடிவத்திலேயே தேவதா மயமாக த்யானம் செய்வதையே பரமோத்க்ருஷ்டமான  உபாஸன பத்ததியாகக்கொண்டு, தன் கௌண ஸ்வரூபத்தை அதி தீவிரமாக த்யானிக்கும் தன் அன்பான பக்தர்களை ஆட்கொண்டு அவர்கள் மிக எளிதில் சம்ஸார ஸாகரத்தைக் கடந்து அதி விரைவில் மோக்ஷம் அடைந்து நித்ய ஸுகம் அனுபவிக்க  அருளும் கருணாமூர்த்தி.  

322.   கஹதந்த்ரா

சக்ர மேருவில் பூஜைகளும் அக்னியில் பல வகை ஹோமங்களும், மற்றும் பல வகை தர்பணங்களும்  செய்யும் க்ரமங்களில் தன்னுடைய மந்திரங்களின் பீஜங்களை அவற்றிற்கு உரிய பல வரிசைகளில் விதிமுறைப்படி பிரயோகித்துத் தனக்கு அர்ப்பணம் செய்யும் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஆத்ம ஜ்ஞானமும்  ஆனந்தமும் ஜீவன்முக்தியும் அளித்தருளும் ஜகன்மாதா.

323.   கஹகஹா

மந்த்ர பீஜங்களின் பரிவர்த்தன ஸம்பூடிகரணங்களின் க்ரமங்களில் சாந்நித்யம் கொண்டுதன் பக்தர்கள் அவ்அவற்றை பிரயோகிக்குங்கால் அவ்வற்றிற்குரிய பலன்களை அளித்தருளும் ஆனந்தமூர்த்தி.

324.   கஹசர்ய்யா பராயணா

தன்னை பிரேமையுடன் வழிபடும் த்ருட பக்தர்கள் தாங்கள் அநுஷ்டிக்கும் ஆராதன  க்ரமங்களில் மந்திர பீஜ பரிவர்த்தன ஸம்புடிகரண ப்ரயோகங்களில் தன் திரு நாமத்தை உள் வைத்தே க்ரமங்களை  உருவாக்கி பிரயோகிப்பதையே தன் வாழ்கையின் ப்ரதான குறிக்கோளாகக் கொண்டு ஒழுகுவதைக் கண்டு மிக களிப்படைந்து அவர்களுக்கு பேரானந்தமும் முக்தியும் அளித்தருளும்  கருணைக் கடல்.

  325.   கஹாசாரா

மந்த்ரங்களின் ஒலி ஓட்டத்திலேயே தான் இயங்கி எப்பொழுதும் அவற்றை பிரயோகித்து அனுஷ்டிக்கப்படும் ஆராதன க்ரமங்களிலேயே ஈடுபட்டு மகிழும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அனுக்ரஹிப்பவள்.

326.   கஹகதி:

மந்திரங்களின் ப்ரயோகமே தேவதா ஆராதன க்ரம்ங்களின் அடித்தளம் ஆவதால் மந்திர ஸாதனமே தம் வாழ்கையில் பிரதான குறிக்கோளாகக் கொண்டு ஒழுகும் தன் பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு எளிதில் சீக்கிரமே மந்திர ஸித்தியும் சாந்தியும் ஆனந்தமும்  முக்தியும் அளித்து மகிழும் மந்திர மூர்த்தி.     

327.   கஹதான்டவ காரிணீ

மஹா மங்களகரமான மூலமந்திர  ஜபத்தை அடித்தளமாகக் கொண்டு வித்யோ பாஸனம் ப்ரேம த்யானத்துடன் தீவிரமாகச் செய்து மனப் பூர்வமாகத் தனக்கு ஆராதன கைங்கர்யம் செய்து அனன்ய ஸரணாகதி பாவத்துடன் , தனக்குத் தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்யும் தன் பக்தர்களுடைய பர பக்தியினால்  தனக்கு உண்டாகும் பரம த்ருப்தியின் மேலீட்டால் அவர்களுடைய ஹ்ருதயத்தில் ஆனந்த தாண்டவம் புரிந்து மிக மகிழ்ச்சி அடையும் ஆனந்த மூர்த்தி.   

328.   கஹாரண்யா

கெட்ட எண்ணங்கள் அணுக முடியாத காடு போன்று கஹனமான இடமானதும் , ஆனந்த வனம் , மஹா ஸ்மஸானம் என்றெல்லாம் கூறப்படுவதும் ஆன ஸஹஸ்ராரத்தின் மத்தியில், மாத்ருகா  மண்டலத்தின் ஸ்தானமாகிய மணிபீட த்ரிகோணத்தின் மத்தியில் பீஜங்களும் மந்த்ரங்களும் ஒலி ஓட்டமாகவும் ஜ்யோதிஸ் கிரணங்கள் வீசிக்கொண்டும், அந்த இடம் பூராவும் அஸாதாரண ப்ரகாசத்துடன் ஜ்வலித்துக் கொண்டிருக்கையில், குண்டலிநியின் ஸகாயத்தினால் வெகு ப்ரயாஸையின் பேரில் அவ்விடத்துக்கு வந்து சேரும், ஜீவனாகிய யோகினி அங்கு த்வாதச தள கமலத்தின் மத்தியில் ஹம்ஸ ரூபிணியாக அதாவது குரு ஸ்வரூபிணியாக வீற்றிருக்கும் தன்னுடைய பாதுகைகளை ப்ரேமையுடன் அர்ச்சித்து சரணமடைய, அவனை அன்பாக ஆட்கொண்டு, அநுக்ரஹித்து அவனுக்கு ஜ்ஞானமும் ஆனந்தமும் அளித்தருளும் பரம க்ருபாநிதி.  

329.   கஹகதி:

வாழ்கையின் எந்த ஒரு நிகழ்ச்சியுமே ஸார்தகமாகவும் ஆனந்தமயமாகவும்  அமைவதன்  பொருட்டு மஹாமங்களகரமான மந்திர ப்ரயோகத்தையே இன்றியமையாததாகக் கொண்டு அதன் மூலமாகவே எல்லாக் காரியங்களையும் கொண்டு செலுத்த வேண்டும், அதாவது மாத்ருகாமண்டலமே முடிவான  கதி என்று ஒழுகும் தன் பக்தனை கை தூக்கி அவனுக்கு என்றும் அழியாத ஆனந்தமும் ஞானமும் முக்தியும் அளித்தருளும்  ஜ்ஞாநாம்பிகை.   

330.   கஹஸக்திபராயணா

மனிதனுக்கு அமைந்த எல்லா சக்திகளுள் மந்திர சக்தியே மஹோந்நதமானது, இன்றியமையாதது, என்ற ஸித்தாந்தத்தை மேற்கொண்டு, வித்யோபாஸனத்தின் மூலம் அம்பிகையின் அருளால் அந்த ஸக்தியை பெற தன்னால் ஆன பிரயாசைகள் எல்லாம் செய்து சிறிது சிறிதாக மந்திர சித்தியின் பலத்தை பெற்று, தானே மந்திர மய மாகவும், தேவதா மயமாகவும் குருமயமாகவும் மாறி ப்ரஹ்ம தேஜஸ் ஏறி இருக்கும் தன் சீறிய பக்தனுக்கு ஸத்யோ முக்தி அருளும் பரம கருணாமூர்த்தி.

331.   கஹராஜ்யநதா 

விதிமுறைப்படி அநுஷ்டிக்கப்பட்ட விசேஷமான ஆராதன க்ரமங்கள் மூலம், ப்ரேம த்யான பூர்ணமாகத் தன்னை வழிபட்டு அனன்யமாகச் சரணம் அடைபவர்களும், தன் மந்திர ஸாதனம் மூலம் விளங்குபவர்களுக்கு ஆன கோடிக்கணக்கான வித்யோபாஸகர்களாகிய யோகினிகளைத் தன் பக்தர்கள் என்ற காரணத்தால் மிக அன்பாக ஆட்கொண்டு அவர்களுக்கு ஜ்ஞானமும், சாந்தியும், ஆனந்தமும் முக்தியும் அளித்து மகிழும் கருணாதரங்கிணீ.   

332.   கர்ம்மசாக்ஷிணீ

ப்ரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவர்களும் செய்யும் எல்லாச் செயல்களையும் கவனித்துக்கொண்டே இருந்து அவ்அவற்றிற்குதக்க பலன் அளிப்பவள்.

333.   கர்மஸுந்தரீ

தன் பக்தர்கள் செய்யும் செயல்களில் பரோபகாரம் என்ற நற்பண்பை இணைத்து அதன் மூலம் அச் செயல்களை அழகியவை களாக்குபவள்.

334.   கர்ம்மவித்யா

மானஸீகமாகச் செய்யப்படும் கர்மாக்களாகிய ஜபம், த்யானம் ஆகிய செயல்களின் அடித்தளமாகிய வித்யராஜ்ஞி என்ற சிறந்த மந்த்ரமே தன் வ்யக்த உருவாகக் கொண்டு ஸாதகனின் மனதில் கம்பீரமான இயக்கத்துடன் லீலைகள் பல புரிந்து அவனை உற்சாகமாக ஊக்குவித்து அவனது யோகத்தை வலிவாக்கி நிலைப்படுத்தி அவளை ஆட்கொண்டு அருளும் பராசக்தி.   

335.   கர்மகதி:

தானே ஜீவர்களுடைய கர்மங்களுக்குத் தக்க பலனை அளிக்கும் எஜமானியாக இருப்பதால் தன் பக்தர்கள் தம் உபாஸன க்ரமங்களை செவ்வனே செய்து முடித்துத் தனக்கு அர்ப்பணம் செய்யும் போது அவர்களுடைய அனன்ய சரணாகதி பாவத்தின் தீவிரத்தைக் கண்டு களித்து அவர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஆனந்தமும் முக்தியும் அளித்தருளும் ஜகன்மாதா.  

336.   கர்ம்மதந்த்ர பராயணா

எந்த ஒரு சித்தாந்தமும் அதற்குரிய செயலைக் கொண்டே நிறைவு பெறுவதால் தன்னுடைய வித்யோபாசகர்களாகிய யோகிநிகளின் த்யானம், மந்திர ஜபம் , ஆராதனக்ரமங்கள்  ஆகியவற்றை சிறப்புரச் செய்து மன நிறைவு பெறுதலே தன் வாழ்க்கையின் பிரதான குறிக்கோளாகக் கொண்டு ஒழுகுவதைக் கண்டு மகிழ்ந்து அவர்களுடைய முயற்சிக்குப்  பூரண பலன் அளித்து அவர்களை ஜ்ஞானவான்களாக்கி அவர்களுக்கு இக பர ஸுகம் அளிக்கும் கருனாஜலதி.  

337.   கர்மமாத்ரா

ஜீவர்கள் நிகழ்த்தும் சகல செயல்களின் பரிமாண நிறைவும் அவர்களின் பூர்வ கர்மங்களின் விளைவே  ஆகலின். தன்னை சரணமடைந்த பக்தர்களின் கர்மங்கள் அனைத்தையும் தன்னுடைய வ்யக்தியில் கலந்து விடச் செய்து அவர்களுடைய மனதிலும் புக்தியிலும்  தானாகவே ஸாந்நித்யம் கொண்டு அவர்களுடைய செயல்கள் எல்லாம் தன்னுடைய செயல்களாகவே ஆகுமாறு செய்து அந்த வகையில் அவர்களைப் பூரணமாக அநுக்ரஹித்து அவர்களுக்கு ஆனந்தமும் புக்தியும் அளித்தருளும் காருண்ய  ஜலதி. 

338.   கர்மகாத்ரா

தன் பக்தர்கள் ஆற்றும் செயல்கள் அனைத்திலும் தன் க்ரியா ஸக்தியை பிரஸரிக்கச் செய்து, தானே அவர்களுடைய மனதிலும் புத்தியிலும் பூரண ஸாந்நித்யம் கொண்டு விளையாட்டுப் போக்காகவே அவர்களை தன்னுடைய ஸ்வரூபமாக்கி ஆனந்திப்பவள். 

339.   கர்மதர்ம்மபராயணா

த்யானம், ஜபம் மற்றும் உபசார ஆராதனைகள், ஹோமங்கள், தர்பணங்கள், மற்றும் குரு மண்டலத்திற்கு செய்ய வேண்டிய உபசார பூஜா ஸந்தர்பணாதிகள், மானஸீக பூஜைகள், ஆகியவற்றை சிறப்புற அனுஷ்டிப்பதும் மற்றும் வாழ்க்கையில் அவசியம் ஆற்ற வேண்டிய கடமைகளை நெறி முறையாக ஆசரித்து ஒழுக வேண்டிய சாஸ்திரங்களில் வித்க்கப்பட்ட  ஒழுக்க முறைகள், ஆகிய எல்லாவற்றையும் செவ்வனே நிகழ்த்தி, தன் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தனக்கே அர்ப்பணம் செய்து மனநிறைவு பெரும் தன் த்ருட பக்தர்களை ஆட்கொண்டு அவர்களுக்கு ஆனந்தமும் முக்தியும் அளித்து மகிழும் ஆனந்த நாயகி.    

340.   கர்ம்மரேகா நாஸகர்த்ரீ

ஊழின் விளைவுகள் தொடர்ச்சியாக  வந்து வந்து தன் பக்தனை பாதைப் படுத்துவதை தடுத்து, மேலும் மேலும் அவன் கர்ம பந்தச் சூழலில் சிக்கிக்கொண்டு மீள முடியாமல் அவஸ்தைப் படுவதைக் கண்டு தன் கருணைக் கடைக்கண்ணால் மாற்றி அவனை விடுதலைப் பாதையில் திருப்பி அருளும் கருணாமூர்த்தி.

341.   கர்ம்மரேகா வினோதினீ

தன் பக்தர்கள் பழ வினைகளால் நேரும் தவிர்க்க முடியாத துன்பங்களில் அகப்பட்டுக்கொண்டு தப்ப முடியாமல் தவித்துக் கொண்டு உழலுவதைக்கண்டு மனமிரங்கி அவர்களைத் தன் கருணா நோக்கின் சக்தியால் அந்தச் சிக்கல்களிலிருந்து மீட்டு வித்யோபாஸனம் ஆகிய மஹாமங்களமான பந்தாவில் ஈடுபடுத்தி அதன் மூலம் அவர்களுக்கு யோகிநிகளின் குழாம் ஆகிய ஸாது ஸங்கமும் ஆனந்தமும் முக்தியும் அளித்தருளும் கருணைக்கடல். 


(அடுத்த பதிவில் தொடரும்)

No comments:

Post a Comment